Sunday, January 2, 2011

இதயம் கொள்ளை அடித்தவன்


அவன் ஒரு அற்புதமானவன். பழகும் யாரையும் எளிதில் தன் பக்கம் இழுத்துவிடுவான் .அவனோடிருந்த மூன்று வருடங்களில் என் அடிப்படை கட்டு கோப்பை மாற்றி எழுதியவன் .அவன் பெயர் பார்த்திபன் . நான் ஐதராபாத் செல்ல வேண்டிய சூழ்நிலை , என் பல வருட வேலை தேடும் படலத்தின் முற்றுப்புள்ளி யாக எனக்கு வேலை அளித்த நிறுவனம் என்னை ஐதராபாத் செல்லும்படி பணித்தது . சென்னை தவிர வேறொன்றும் அறியாத நான் சற்று பயத்துடன் தான் கிளம்பினேன் , என்னை வழி யனுப்ப வந்த நண்பன் எனக்கு கொடுத்த ஒரே ஒரு ஆறுதல் வார்த்தை "பார்த்திபன் ".

நமக்கு இது தேவை என்று நினைக்கும் போதே அதோடு நிற்பான் அவன் , நேரங்கள் சொல்லும் இங்கிதங்கள் தெரிந்து நடந்துகொள்வான் . எப்படி தேடினாலும் அவன் மீது கோபம் வருவதற்கு எந்த காரணங்களும் கிடைக்காது . அறையில் இருக்கும் ஆறு பேருக்குமே அவனை பிடிக்கும் , சுவையான விஷயம் என்னவென்றால் அவன் விசயத்தில் எல்லோருமே விட்டு கொடுக்கும் போக்கை கடை பிடிப்போம் .அவனால் எனக்கு ஐதராபாத் பிடித்து போய்விட்டது .

அது ஒரு நல்ல நாள் , தசரா பண்டிகை , ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலை பார்க்க ஆரம்பித்தோம் , ஒருவன் மட்டன் மற்றும் சமயல் பொருள் வாங்குவது , இன்னொருவன் "சரக்கு " வாங்குவது , இன்னொருவன் சை டிஷ் வாங்குவது ,இன்னொருவன் சமையல் செய்வதென்று . என்னுடைய அறையில் எல்லோருமே சமைப்போம் ,காரணம் பார்த்திபனுக்கு சமையல் செய்வதென்றால் உயிர் , சமைக்கும் போது அருகில் அழைத்து இப்படி செய்தால் இந்த சுவை வரும் ,அப்படி செய்தால் இந்த சுவை கூடும் என சொல்லி கொண்டே சமைப்பான் , அதை பார்க்கும் போதே நமக்கும் சமைக்கும் ஆர்வம் வந்து விடும் .ஆனால் பண்டிகை நாளன்று நாங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் பார்த்திபனையே சமயல் செய்ய விட்டோம் .நல்ல குடி, நல்ல சாப்பாடு ,நல்ல தூக்கம் .
இரவு மணி , பன்னிரண்டு இருக்கும் , முனகல் சத்தம் கேட்டு விழித்து பார்த்தேன் . பார்த்திபன் தான் முனகிக்கொண்டு இருந்தான் . என்ன என்று கெட்ட போது நெஞ்சு வலிப்பதாக கூறினான் .தசரா என்பதால் இரண்டு நாட்களுக்கு ஆஸ் பிடல்களுக்கு விடுமுறை , என்ன செய்வதென்று தெரியாமல் , ஒரு ஸ்லீப்பிங் டோஸ் கொடுத்து தூங்க வைத்து விட்டேன் .காரணம் பார்த்திபனின் குணம்தான் . பார்த்திபனுக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு ,தான் படிக்கும் அல்லது பார்க்கும் விஷயங்கள் தனக்கும் வந்ததாக உணர்வான் .அதை பற்றி நிறைய தெரிந்து கொள்வான் .நிறைய தெரிந்து கொள்வதே ஒரு வியாதி தான் என்னை பொறுத்தவரையில் . இதே போல் ஒரு முறை பன்றி காய்ச்சல் வந்தது போல் படுத்து கொண்டான் , ஒரு முறை கேன்சர் டெஸ்ட் எடுத்து வந்தான் , இப்போதும் ஏதேனும் ஒரு புத்தகத்தில் மாரடைப்பு பற்றி படித்திருப்பான் , அதனால் தான் அவனுக்கு நெஞ்சு வலி போன்ற பிரமை .

அடுத்த நாள் , நாலு நண்பர்களுடன் , நகரத்தில் நம்பர் ஒன் கார்டியாலஜிஸ்ட் அறையில் அமர்ந்திருந்தோம் . தனக்கு ஏற்பட்ட அறிகுறிகளை விளக்கி சொல்லிகொண்டிருந்தான் . முதலில் லேசான வலி நெஞ்சில் ஆரம்பித்தது , பின் கை முழுது பரவியது ,அதன் பின் தாடை தலை என பொறுக்க முடியாத அளவிற்கு வலி கவ்வி பிடித்தது ,மூச்சு விடுவதற்கு சற்று சிரமமாக இருந்தது ,எனது இதயம் துடிப்பது எனக்கே தெரிந்தது என்றெல்லாம் அவன் சொல்வதை கேட்கும் போதே எனக்கு மாரடைப்பு வரும் போல இருந்தது . கண்டிப்பாக அவன் இவை அனைத்தையும் இன்டர்நெட்டில் படித்திருப்பான் ,அதனால் தான் அவனுக்கு அத்தனை அறிகுறிகளும் தனக்கும் வந்து விட்டதாக நினைத்து சொல்லி கொண்டிருக்கிறான் .அனைத்தையும் கேட்ட டாக்டர் அவனுக்கு மிக முக்கியமான ஒரு அறிகுறியான வியர்வை இப்போது கூட வரவில்லை என்பதை சுட்டி காட்டினார் . சொல்லி முடிக்கும் முன்னர் அவனுக்கு வியர்த்து கொட்ட ஆரம்பித்தது .உடனே இ சி ஜி , எ கோ டெஸ்ட் இரண்டையும் எடுத்து பார்த்த அவர் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை , இது வாய்வு தொல்லையாக இருக்கலாம் என்று கூறி , சில மாத்திரைகளை எழுதி கொடுத்தார் . மெடிக்கல் கடையில் ப்ரிஸ்க்ரிப்சனை கொடுத்தவுடன் வழக்கம் போல தேவையில்லாத வேலை பார்த்தான் . எதற்க்காக இந்த மாத்திரை சாப்பிடவேண்டும் என்பதுதான் அவன் கேட்ட கேள்வி .சில விசயங்களை நம்ப வேண்டும் , ஆராய கூடாது . மெண்டல் பேஷன்ட் சாப்பிடுற மாத்திரை என்று சொன்ன வுடன் அங்கிருந்த எங்களால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை . இவன் பயம் அந்த டாக்டருக்கு தெரிந்தே இந்த மாத்திரை கொடுத்திருக்கிறார் .
தண்ணியடிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் பார்த்திபன் முழு நேர காமெடி பண்ணி கொண்டிருந்தான் , இது வரை மூன்று கார்டியாலஜிஸ்ட் பார்த்தாயிற்று , ஒருவர் வயசானவர் , கண் சரியாய் தெரிஞ்சிருக்காது , இ சி ஜி தப்பா பார்த்திருப்பார் என்றான் ,இன்னொருவர் படிச்சு பாஸ் பண்ணின மாதிரி தெரியலை என்றான் , இன்னொரு டாக்டரை சின்ன பையனா இருக்கான் என்றான் .சில நேரத்தில் எரிச்சலாக இருந்தாலும் ,பல தடவை அவனை ஊறுகாயாக ஆக்கி விடுவோம் .தும்மினால் மூக்கு கான்செர் , ஒண்ணுக்கு வந்தால் மூத்திர பை கான்செர் என்று ஓட்டிக்கொண்டு இருப்போம்

வேலை மாற்றம் ,மறுபடியும் சென்னை , வந்து மூன்று மாதம் ஆகிறது , போன வாரம் தான் செல் போனில் பிடித்தேன் பார்த்திபனை , எல்லாம் நல்ல படியாக போயிக்கொண்டிருந்தாலும் இந்த இதய பிரச்சினை தான் தீர்ந்தபாடில்லை .இம்முறை சற்று கோபம் வரவே மாரடைப்பு வந்தா உன் போல ஆறு மாசத்துக்கு யாரும் உசுரோட பேசிக்கிட்டு இருக்க மாட்டானுங்க என்று கடிந்து கொண்டேன் .பின் எனது நண்பர் இயற்கை மருத்துவரை லைனில் படித்து கான்பெரன்ஸ் காலில் பேச வைத்தேன் , அவரும் கதை கேட்டு விட்டு இது மன வியாதிதான் என்று சொல்லி சில சூரனங்களின் பெயரை சொல்லி வைத்தார் .இம்முறை பார்த்திபன் குரலில் கொஞ்சம் தெளிவு இருந்தது . நாளை போக இருந்த ஒரு இதய சிறப்பு மருத்தவரிடம் போகப் போவதில்லை என்று சொன்னான்

இப்போதுதான் கால் வந்தது , பார்த்திபன் இறந்து விட்டான் என்று தகவல் . அவனுக்கு இ சி ஜி யில் தெரியாத அளவிற்கு வித்தியாசமான மாரடைப்பு . ஒரு வேளை அவன் கடைசி முறை பார்க்க நினைத்த இதய சிறப்பு மருத்துவர் இதை கண்டு பிடித்திருக்கலாம் . அற்ப்புதமானவன் ,இன்றைய தலைமுறைக்கு உரிய ஈகோ , ஷோ ஆப் இல்லாத யாரையும் புரிந்து நடக்கிற அவன் இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்கலாம் ,நானே அவனை கொன்று விட்டேனோ என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக என்னுள் வர ஆரம்பிக்கிறது . என் நெஞ்சின் ஒரு மூலையில் ஒரு சின்ன வலி எட்டி பார்க்கிறது

No comments: