Monday, January 24, 2011

எடுப்பார் கைப்பிள்ளை


அடங்கி நடக்க அம்மா சொன்னார்
பின்னொருநாள் மனைவி சொன்னால் நான் தொடை நடுங்கி என்று

விரும்பாத ஒன்றை விரும்பி படிக்க அப்பா சொன்னார்
பின்னொருநாள் கனவில் வந்த என் பழைய கனவுகள் கை கொட்டி சிரித்தது

காதல் வந்த வேலையில் கவிதை எழுது என்றது இளவட்ட கூட்டம்
கவிதை கற்ற வேலையில் காதல் கிளி கழுதை மேல் ஏற்றப்பட்டது

கம்பியூட்டர் படி என்றான் நண்பன்
காலர் வைக்காத சட்டை பேசன் என்றாள் தோழி
காபி குடித்தால் சுகர் என்றார் டாக்டர்
கடன் வாங்கி வீடு கட்டென்றாள் மனைவி

வாழும் போதெல்லாம் என் வாழ்கையை சமுதாயம் வாழ்ந்தது
நன்றி பரம்பொருளே - சாவை மட்டும்" நான் " சாக கொடுத்தாய்

Tuesday, January 11, 2011

சேல்ஸ் எக்ஸ்யகிடிவ்


சுமை
கையிலிருக்கும் பையை விட
நெஞ்சிலிருக்கும் சோகம்

பொய்
பொய் மட்டுமே உரைப்பேன் என்பது
என் மீது சுமத்தப்படும் பச்சை பொய்

அறிவிப்பு பலகை
சோசலிசம்
நாய்களுக்கும் எங்களுக்கும் ஒரே பலகை

முரண்பாடு
டாக்டர் மது அருந்துவது
உற்சாகம் பெற என்றாய்

வக்கீல் புகை பிடித்தால்
யோசிக்கிறார் என்றாய்

சாப்ட்வேர் யுவதி டான்ஸ் பார் செல்வது
மன அழுத்தம் குறைக்க என்றாய்

இவற்றில் ஏதேனும் ஒன்றை நான் செய்தால்
"சேல்ஸ்ல இருக்கான் " என்கிறாய்

கேவலம்

அக்றிணை உடன் செய்யும் உன் புனிதமான வேலையை ஒப்பிட்டு
பார்த்தால் - உயிருள்ள உன்னுடன் வியாபாரம் செய்யும் என் வேலை


தோல்வி

விற்ற பொருட்கள் சுமக்கும் வெற்றிப்பொய்யை
தின்று களித்த சமுதாயத் தோல்வி

Wednesday, January 5, 2011

சோறும் சோறு சார்ந்த இடமும் - மதுரை


மல்லிகை வாசம் மட்டுமல்ல , மண் வாசம் மட்டுமல்ல , மதுரை மசாலா வாசமும் மனதை தொடும் ஒன்று தான் . மதுரை யின் சிறப்பு என்ன வென்றால் நகரமும் அல்லாது கிராமும் அல்லாது ஒரு கலவையாக இருப்பதே . தூங்கா நகரம் என்பது ஒரு அக்மார்க் உண்மை , இருபத்தி நாலு மணி நேரமும் எல்லாமே கிடைக்கு நகரம் . மொத்தத்தில் தென் தமிழ்நாட்டின் வாணிப சந்தை மதுரை என கொள்ளலாம் .

முதலில் சைவம் , முருகன் இட்லி கடை , பூபோன்ற இட்லிகளும் ,நான்கிலிருந்து ஐந்து வகை சட்னிகளும் , கட்டியாகவும் இல்லாமல் ,சன்னமாகவும் இல்லாமல் இட்லி பதத்திற்கு சாம்பாரும் இந்த கடையின் சிறப்பு . இன்று சென்னையில் முருகன் இட்லி கடை கொடி கட்டி பறந்தாலும் , அதன் ஆணி வேர் இன்றும் மதுரையில் நிற்கக்கூட முடியாத தளவாய் சாலை சந்தில் உள்ளது . மதுரை மண் வாசம் பார்க்க விரும்புபவர்களுக்கு இந்த கடை ஒரு முக்கியமான இடம் .

ஹோட்டல் டெம்பிள் சிட்டி, இன்னொரு முக்கியமான கடை , மதுரையில் நான்கு இடத்தில் உள்ளது இந்த கடை . மதுரை மாட்டு தாவணி பஸ் நிலையத்திற்கு எதிரே கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள் .நூறு வகை தோசை இங்கு பிரசித்தி பெற்றது .வகைகளை சாப்பிட்டு பார்க்கவே நமக்கு ஒரு வாரம் ஆகும் .
ஆர்யாஸ் , ஆனந்தா மற்றும் இன்னும் சில பல பவன்கள் இருந்தாலும் ,கண்டதை அரைத்து போட்டு சுவையை கூட்டும் வேலை இந்த உணவகத்தில் இல்லை ,எனவே தைரியமாக சாப்பிடலாம் .

சைவத்தை விட மதுரை அசைவத்திற்கு தான் பிரசித்தி என்று சொல்ல லாம் , ஐதராபாத் பிரியாணி , ஆம்பூர் பிரியாணி , திண்டுக்கல் பிரியாணி , சங்கரன்கோயில் பிரியாணி , காலிகட் பிரியாணி வரிசையில் மதுரை பிரியாணியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் , அந்த அளவிற்கு இன்று பிரியாணி கலை கட்டுகிறது மதுரையில் . என் கணக்கில் முதலிடம் வகிப்பது அம்மா மெஸ் தான் . மதிய சாப்பாட்டிற்கு அம்மா மெஸ் சென்று பாருங்கள் , மலைத்து நிர்ப்பீர்கள் , என்ன சாப்பிட , எது சாப்பிட என்று ஒரு பட்டி மன்றமே வைக்க வேண்டும் . ரெகுலர் மெனு வான சாப்பாடு , பிரியாணி தவிர , நண்டு ஆம்லேட் , கறி ஆம்லேட் , குடல் குழம்பு ,தலைக் கறி , காடை வறுவல் , முயல் சுக்கா என பறப்பது , நடப்பது , மிதப்பது அனைத்தையும் இங்கு காணலாம் . உண்மையான வெட்டு குத்து வேண்டுபவர்களுக்கு அம்மா மெஸ் தான் புகலிடம் . அப்படி என்ன வித்தியாசம் இங்கு என்று நீங்கள் கேட்பது கேட்கிறது , இங்கு தயாரிக்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களின் மசாலாக்கள் கிராமத்து முறைப்படி அரைத்து வைத்து சமைக்கப்படுகிறது . அம்மா சமையல் என்பது அரைத்து வைப்பது தானே , சொல்லி புரிய வைக்க முடியாது , உண்டு பாருங்கள் ஒரு முறை அப்போது தெரியும் என் வாக்கு மெய்யா பொய்யா என்று .

கோனார் மெஸ் , இந்த கடை நிறைய பேர் கேள்வி பட்டு இருப்பீர்கள் , சில பல சினிமாக்களில் இந்த பெயர் உச்சரிக்க பட்டிருக்கும் . இங்கு தான் மதுரை புகழ் கறி தோசை கிடைக்கும் . அதென்ன கறி தோசை ? மட்டன் கறியை மைய சமைத்து அதை தோசை மாவுடன் சேர்த்து இடுவார்கள் , மாலை நேரம் கோனார் மெஸ் முன்பு திருவிழா கூட்டம் காணலாம் , எல்லாம் இந்த கறி தோசைக் காகத்தான் . இது தவிர புரோட்டா தலைக்கறி குடல் குழம்பு போன்றவையும் கோனார் மெஸ்ஸில் பிரபலம் தான் , அரசன் முதல் ஆண்டி வரை இந்த கோனார் மெஸ்ஸுக்கு க்கு அடிமையாகாத ஆள் தேடினாலும் கிடைக்க மாட்டார்கள் .

அடுத்த படியாக குமார் மெஸ் , மேலே சொன்ன அனைத்து வகைகளும் இங்கும் கிடைக்கும் , இடம் கிடைக்காத பட்சத்தில் இங்கு வருவோம் என்று நினைத்தால் நீங்கள் ஏமாந்து தான் போவீர்கள் , இங்கும் திருவிழா கூட்டம் தான் . இதில்லாமல் மதுரை முழுதும் கையேந்தி பவன்களை நாம் காணலாம் , எல்லா கடைகளிலும் நம்பி சாப்பிட இட்லி கிடைக்கும் , நல்ல சட்னி சாம்பார்கள் கிடைக்கும் , அம்மா மெஸ் , கோனார் மெஸ் ,குமார் மெஸ் அட்ரெஸ் தெரிந்து கொள்ளவது மிக மிக எளிது , மதுரையில் இருக்கும் சின்ன குழந்தைகள் கூட உங்களை வழி காட்டி அனுப்பி வைப்பார்கள்

நான் சாப்பிட்ட கடைகளிலேயே , அசைவ உணவின் அரசன் பட்டத்தை ஜெயராம் மெஸ்ஸி ற்கு அளிக்கலாம் , அப்படி ஒரு சுவை நான் வேறுங்கும் கண்டது மில்லை கேட்டது மில்லை , இந்த ஜெயராம் மெஸ் சீர்காழிக்கும் ,சிதம்பரத்திற்கும் இடையே ஓடும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு குடிசை வீட்டில் நடத்தப் படுகிறது , அசைவ பிரியர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய ஒரு இடம் , சிதம்பரம் சீர்காழி பக்கம் நிறைய முறை செல்ல வாய்ப்பு கிட்ட வில்லை , எதிகாலத்தில் வாய்ப்பு கிட்டும் பட்சத்தில் விரிவாக எழுதலாம்


இது கொஞ்சம் புதுசு , குடி மக்களுக்காக ஒரு ரகசியம் , எனவே மற்றவர்கள் ஜகா வாங்கி கொள்ளலாம் . அலுமினிய டம்ளர் கடைகள் கேள்விப் பட்ட துண்டா ? மதுரை யில் முக்கியமான ஒரு இடத்தில் உங்களுக்காக இருபத்தி நாலு மணி நேர சேவையில் சில உணவு விடுதிகள் உள்ளன . உள்ளே சென்று உங்களுக்கு தேவையான பிராண்டு என்ன என்று சொல்ல வேண்டியது , அதே பிராண்டு மிக்சிங் உடன் அலுமினிய டம்ளரில் வந்து நிற்கும் , நாலு ரவுண்டு அடித்து கொண்டே சாப்பிட்டு கொள்ளலாம் , இது நமக்குள்ளே இருக்க வேண்டிய விஷயம் , எந்த இடம் , எந்த கடை என்று சொல்லும் பட்சத்தில் , இந்த இருபத்தி நாலு மணி நேர சேவை யாருக்குமே இல்லாமல் போய் விடுமோ என்ற பயத்தில் இதோடு நிறுத்துகிறேன் , அவசர நேரத்தில் , இக்கட்டான சூழ்நிலையில் , வேறு வழியே இல்லாத பட்சத்தில் குடி மக்கள் எனது அலை பேசியில் அழைத்து கடை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்

அடுத்த படியாக , நாம் பார்க்கப்போகும் இடம் பிரியாணிகளின் சொர்க்கம் - வாணியம்பாடி , ஆம்பூர்

Monday, January 3, 2011

பயணம்முன் இருக்கைகளையும் ,
ஜன்னல் வழி பிரபஞ்சத்தையும்
தவிர வேறேதும் காணா கண்கள்
பேருந்து பயணம்

திறக்கும் என தெரிந்தும் கதவை மட்டுமே நோக்குவதும்
அழுத்தி ஓய்ந்த பின்னும் பொத்தான்களை நோக்குவதும்
லிப்ட் மீது ஒரு குறும் பயணம்

எளியாரில் வலியார் தேடும்
பொது வகுப்பு ரயில் பயணம்

குறட்டை வருமோ மானம் போகுமோ
தூக்கம் இழந்த விழிகளுடன்
விமானத்தில் ஒரு சொகுசு பயணம்

குனித்து நிமிர்ந்து சரிந்து சாலையை அளவெடுக்க
திமிறி படரும் அவளின் அங்கங்களையும் அளவெடுக்க
இளமை மிளிரும் ஒரு பைக் பயணம்

வலி மிகுந்த நேற்றைய பயணங்கள் தாம்
வலி குறைக்கும் இன்றைய சுவாரஸ்யங்கள்

Sunday, January 2, 2011

இதயம் கொள்ளை அடித்தவன்


அவன் ஒரு அற்புதமானவன். பழகும் யாரையும் எளிதில் தன் பக்கம் இழுத்துவிடுவான் .அவனோடிருந்த மூன்று வருடங்களில் என் அடிப்படை கட்டு கோப்பை மாற்றி எழுதியவன் .அவன் பெயர் பார்த்திபன் . நான் ஐதராபாத் செல்ல வேண்டிய சூழ்நிலை , என் பல வருட வேலை தேடும் படலத்தின் முற்றுப்புள்ளி யாக எனக்கு வேலை அளித்த நிறுவனம் என்னை ஐதராபாத் செல்லும்படி பணித்தது . சென்னை தவிர வேறொன்றும் அறியாத நான் சற்று பயத்துடன் தான் கிளம்பினேன் , என்னை வழி யனுப்ப வந்த நண்பன் எனக்கு கொடுத்த ஒரே ஒரு ஆறுதல் வார்த்தை "பார்த்திபன் ".

நமக்கு இது தேவை என்று நினைக்கும் போதே அதோடு நிற்பான் அவன் , நேரங்கள் சொல்லும் இங்கிதங்கள் தெரிந்து நடந்துகொள்வான் . எப்படி தேடினாலும் அவன் மீது கோபம் வருவதற்கு எந்த காரணங்களும் கிடைக்காது . அறையில் இருக்கும் ஆறு பேருக்குமே அவனை பிடிக்கும் , சுவையான விஷயம் என்னவென்றால் அவன் விசயத்தில் எல்லோருமே விட்டு கொடுக்கும் போக்கை கடை பிடிப்போம் .அவனால் எனக்கு ஐதராபாத் பிடித்து போய்விட்டது .

அது ஒரு நல்ல நாள் , தசரா பண்டிகை , ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலை பார்க்க ஆரம்பித்தோம் , ஒருவன் மட்டன் மற்றும் சமயல் பொருள் வாங்குவது , இன்னொருவன் "சரக்கு " வாங்குவது , இன்னொருவன் சை டிஷ் வாங்குவது ,இன்னொருவன் சமையல் செய்வதென்று . என்னுடைய அறையில் எல்லோருமே சமைப்போம் ,காரணம் பார்த்திபனுக்கு சமையல் செய்வதென்றால் உயிர் , சமைக்கும் போது அருகில் அழைத்து இப்படி செய்தால் இந்த சுவை வரும் ,அப்படி செய்தால் இந்த சுவை கூடும் என சொல்லி கொண்டே சமைப்பான் , அதை பார்க்கும் போதே நமக்கும் சமைக்கும் ஆர்வம் வந்து விடும் .ஆனால் பண்டிகை நாளன்று நாங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் பார்த்திபனையே சமயல் செய்ய விட்டோம் .நல்ல குடி, நல்ல சாப்பாடு ,நல்ல தூக்கம் .
இரவு மணி , பன்னிரண்டு இருக்கும் , முனகல் சத்தம் கேட்டு விழித்து பார்த்தேன் . பார்த்திபன் தான் முனகிக்கொண்டு இருந்தான் . என்ன என்று கெட்ட போது நெஞ்சு வலிப்பதாக கூறினான் .தசரா என்பதால் இரண்டு நாட்களுக்கு ஆஸ் பிடல்களுக்கு விடுமுறை , என்ன செய்வதென்று தெரியாமல் , ஒரு ஸ்லீப்பிங் டோஸ் கொடுத்து தூங்க வைத்து விட்டேன் .காரணம் பார்த்திபனின் குணம்தான் . பார்த்திபனுக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு ,தான் படிக்கும் அல்லது பார்க்கும் விஷயங்கள் தனக்கும் வந்ததாக உணர்வான் .அதை பற்றி நிறைய தெரிந்து கொள்வான் .நிறைய தெரிந்து கொள்வதே ஒரு வியாதி தான் என்னை பொறுத்தவரையில் . இதே போல் ஒரு முறை பன்றி காய்ச்சல் வந்தது போல் படுத்து கொண்டான் , ஒரு முறை கேன்சர் டெஸ்ட் எடுத்து வந்தான் , இப்போதும் ஏதேனும் ஒரு புத்தகத்தில் மாரடைப்பு பற்றி படித்திருப்பான் , அதனால் தான் அவனுக்கு நெஞ்சு வலி போன்ற பிரமை .

அடுத்த நாள் , நாலு நண்பர்களுடன் , நகரத்தில் நம்பர் ஒன் கார்டியாலஜிஸ்ட் அறையில் அமர்ந்திருந்தோம் . தனக்கு ஏற்பட்ட அறிகுறிகளை விளக்கி சொல்லிகொண்டிருந்தான் . முதலில் லேசான வலி நெஞ்சில் ஆரம்பித்தது , பின் கை முழுது பரவியது ,அதன் பின் தாடை தலை என பொறுக்க முடியாத அளவிற்கு வலி கவ்வி பிடித்தது ,மூச்சு விடுவதற்கு சற்று சிரமமாக இருந்தது ,எனது இதயம் துடிப்பது எனக்கே தெரிந்தது என்றெல்லாம் அவன் சொல்வதை கேட்கும் போதே எனக்கு மாரடைப்பு வரும் போல இருந்தது . கண்டிப்பாக அவன் இவை அனைத்தையும் இன்டர்நெட்டில் படித்திருப்பான் ,அதனால் தான் அவனுக்கு அத்தனை அறிகுறிகளும் தனக்கும் வந்து விட்டதாக நினைத்து சொல்லி கொண்டிருக்கிறான் .அனைத்தையும் கேட்ட டாக்டர் அவனுக்கு மிக முக்கியமான ஒரு அறிகுறியான வியர்வை இப்போது கூட வரவில்லை என்பதை சுட்டி காட்டினார் . சொல்லி முடிக்கும் முன்னர் அவனுக்கு வியர்த்து கொட்ட ஆரம்பித்தது .உடனே இ சி ஜி , எ கோ டெஸ்ட் இரண்டையும் எடுத்து பார்த்த அவர் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை , இது வாய்வு தொல்லையாக இருக்கலாம் என்று கூறி , சில மாத்திரைகளை எழுதி கொடுத்தார் . மெடிக்கல் கடையில் ப்ரிஸ்க்ரிப்சனை கொடுத்தவுடன் வழக்கம் போல தேவையில்லாத வேலை பார்த்தான் . எதற்க்காக இந்த மாத்திரை சாப்பிடவேண்டும் என்பதுதான் அவன் கேட்ட கேள்வி .சில விசயங்களை நம்ப வேண்டும் , ஆராய கூடாது . மெண்டல் பேஷன்ட் சாப்பிடுற மாத்திரை என்று சொன்ன வுடன் அங்கிருந்த எங்களால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை . இவன் பயம் அந்த டாக்டருக்கு தெரிந்தே இந்த மாத்திரை கொடுத்திருக்கிறார் .
தண்ணியடிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் பார்த்திபன் முழு நேர காமெடி பண்ணி கொண்டிருந்தான் , இது வரை மூன்று கார்டியாலஜிஸ்ட் பார்த்தாயிற்று , ஒருவர் வயசானவர் , கண் சரியாய் தெரிஞ்சிருக்காது , இ சி ஜி தப்பா பார்த்திருப்பார் என்றான் ,இன்னொருவர் படிச்சு பாஸ் பண்ணின மாதிரி தெரியலை என்றான் , இன்னொரு டாக்டரை சின்ன பையனா இருக்கான் என்றான் .சில நேரத்தில் எரிச்சலாக இருந்தாலும் ,பல தடவை அவனை ஊறுகாயாக ஆக்கி விடுவோம் .தும்மினால் மூக்கு கான்செர் , ஒண்ணுக்கு வந்தால் மூத்திர பை கான்செர் என்று ஓட்டிக்கொண்டு இருப்போம்

வேலை மாற்றம் ,மறுபடியும் சென்னை , வந்து மூன்று மாதம் ஆகிறது , போன வாரம் தான் செல் போனில் பிடித்தேன் பார்த்திபனை , எல்லாம் நல்ல படியாக போயிக்கொண்டிருந்தாலும் இந்த இதய பிரச்சினை தான் தீர்ந்தபாடில்லை .இம்முறை சற்று கோபம் வரவே மாரடைப்பு வந்தா உன் போல ஆறு மாசத்துக்கு யாரும் உசுரோட பேசிக்கிட்டு இருக்க மாட்டானுங்க என்று கடிந்து கொண்டேன் .பின் எனது நண்பர் இயற்கை மருத்துவரை லைனில் படித்து கான்பெரன்ஸ் காலில் பேச வைத்தேன் , அவரும் கதை கேட்டு விட்டு இது மன வியாதிதான் என்று சொல்லி சில சூரனங்களின் பெயரை சொல்லி வைத்தார் .இம்முறை பார்த்திபன் குரலில் கொஞ்சம் தெளிவு இருந்தது . நாளை போக இருந்த ஒரு இதய சிறப்பு மருத்தவரிடம் போகப் போவதில்லை என்று சொன்னான்

இப்போதுதான் கால் வந்தது , பார்த்திபன் இறந்து விட்டான் என்று தகவல் . அவனுக்கு இ சி ஜி யில் தெரியாத அளவிற்கு வித்தியாசமான மாரடைப்பு . ஒரு வேளை அவன் கடைசி முறை பார்க்க நினைத்த இதய சிறப்பு மருத்துவர் இதை கண்டு பிடித்திருக்கலாம் . அற்ப்புதமானவன் ,இன்றைய தலைமுறைக்கு உரிய ஈகோ , ஷோ ஆப் இல்லாத யாரையும் புரிந்து நடக்கிற அவன் இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்கலாம் ,நானே அவனை கொன்று விட்டேனோ என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக என்னுள் வர ஆரம்பிக்கிறது . என் நெஞ்சின் ஒரு மூலையில் ஒரு சின்ன வலி எட்டி பார்க்கிறது