Wednesday, December 1, 2010

"கடக்கர அண்ணாச்சி "


"கடக்கர அண்ணாச்சி " அப்படித்தான் கூப்பிடுவாங்க அவரை . அது 1992 , கடற்கரை சண்முகம் என்பது அவரோட பெயர் . வழுக்கை தலை , அஞ்சரை அடி உயரம் , வெள்ளை வேட்டி சட்டை ,கெடா மீசை,கோல்ட் பிளேட் கைக்கடிகாரம் ,மொத்தத்துல பழைய தமிழ் திரைப்பட நடிகர் செந்தாமரையை மாதிரியே இருப்பாரு .

நெஞ்சுல இருக்குற தங்க செயின் தெரியுறமாதிரி ரெண்டு பட்டன சட்டையில கலட்டிவுட்டு தான் இருப்பார் . அவர பாத்து போலீஸ் காரங்க பயப்படனும் ன்னு தான் அப்படி சண்டியரு மாதிரி அலைவாராம் .
கடற்கரை ன்ற பேறுக்கு ஒரு காரணம் உண்டு . எம் ஜி ஆர் ஆட்சி காலத்தில , விடுதலை புலிகளுக்கு உதவி செய்யுறதுக்கு ஒரு சமூகம் வேலை செய்து கொண்டிருந்ததாம் , பழைய ஆர் எக்ஸ் 100 யாமஹா பைக்கின் என்ஜின் மற்றும் ஏராளமான வெடிபொருட்கள் , துப்பாக்கி இதெல்லாம் கடற்க்கரை மணலில் கரையோரம் பொதெச்சி வைப்பாங்களாம் , விடுதலைப்புலிகளுக்கு இந்த அடையாளம் நன்றாக தெரியுமாம் , இரவு நேரங்களில் அவங்க அதை எடுத்துட்டு போயிருவாங்களாம் . சண்முகம் அண்ணாச்சி அந்த புதைக்கும் கூட்டத்தில் மிக முக்கியமானவராம் . எங்கே எதை வைப்பது , அதில் புலிகளுக்கு மட்டுமே தெரிந்த அடையாளங்களை வைக்கிறது இதெல்லாம் அவருக்கு அத்து படியாம் . அதனாலேயே அவருக்கு கடக்கர சண்முகம்னு பெயர் வந்ததாம் .இதெல்லாம் நான் பள்ளிகூடத்தில் படிச்சிகிட்டு இருக்கும்போது போது என் சித்தப்பா சொல்லுவாரு .

எங்க ஊரில் ஏலக்காரர் கடை இட்லி சாப்பிட கடக்கர அண்ணாச்சி வருவாப்ல . இட்லியும் குடல் கொழம்பும் வாங்கிகிட்டு 4 அவிச்ச முட்டையும் சேர்த்து ஒரு விளாசு விளாசுவார் , அதை பார்க்கும் யாருக்கும் நாக்கில் எச்சில் ஊரும் . ' எலே , இந்த சுகத்துக்குதானே டே மனுஷன் நாயா அலையுறான்,இந்த சோறு நம்மாளுக எல்லாத்துக்கும் கெடைக்கனும்டே " என்று சொல்வார் . அகதி மக்களுக்காக வேதனை படுற ஆளு சாப்பாட்டு விசயத்துல மட்டும் ஏன் இப்படின்னு நெனைக்காதீங்க , எங்க எல்லாருக்குமே தெரியும் அவர் எதனால அப்படி சாப்புடுராருன்னு . அவரு கூட எப்பயுமே ஒரு நாலு சின்ன வயசு பசங்க வருவாங்க , ஒவ்வொரு தடவையும் வேற வேற பசங்க , வேற மாதிரி தமிழ் பேசிகிட்டு , பழைய துணிகள போட்டுக்கிட்டு, பூபோட்ட மினுமினுக்கிற லுங்கி கட்டி , பரட்ட தலையோட , சின்ன பயம் தெரியிற கண்களோட இருப்பாங்க அந்த பசங்க .
முகாம்ல நம்ம சொந்த பந்தம் , சகோதரர் எல்லாம் ஒரு வேலை சாப்புட்டு வாழும்போது ,நமக்கெதுக்கு நல்ல சாப்பாடு ன்னு நெனைச்சு அந்த பசங்க சரியா சாப்பிட மாட்டாங்களாம் , அவங்கள நல்லா சாப்பிட வைக்கணும் அப்படீன்னு இவரு அவங்க முன்னாடி இப்படி சாப்புடுவாராம் . ஏதேதோ பேசி அவங்கள நல்லா சாப்பிட வச்சிட்டு " ரோசக்கார பயக, இவங்க இப்பிடி சாப்புடரத பாத்துகிட்டே செத்து போயிரனும்டே,அத விட நல்லா சாவு கெடைக்குமா டே " என்று அவர் சொல்லும்போது கண் கலங்கி நா தழுதழுக்கும். இதை பார்க்கும் கிராம மக்கள் எல்லோருடைய மனசிலும் திடீரென்று ஒரு சோகம் அப்பிகொள்ளும் .
ஆரம்பத்துல அவரு புலிகளோட வச்சிருந்த தொடர்பு போக போக குறைய ஆரம்பிச்சது ,அதுக்கு நெறைய காரணம் இருந்துச்சு ,இந்திய அரசியல் நிலவரமும் ,புலிகளுக்கு இருந்த தடை கடுமயாக்குனுதும் ஒரு காரணம்தான் , ஆனா கடக்கர அண்ணாச்சி ,"போர்ல அவங்களுக்கு உதவி செய்ய இளவட்டங்க இருக்கானுக , பொழைக்க வந்த இந்த புள்ளைகளுக்கு தான் யாருமில்ல டே" ன்னு சொல்லுவார் . நெறைய கிராமங்களுக்கு போயி மக்களோட மக்களா நின்னு அவங்க மனசுல ஈழ மக்களை பத்தி பேசி , "அவங்க நம்ம ஆளுங்க டே , நாம தாண்டே அவங்கள பாத்துக்கணும் "ன்னு சொல்லி எந்த துனியா இருந்தாலும் குடுங்கன்னு அவரே முன்ன நின்னு வாங்குவாரு , 1o பைசா கூட பரவாயில்ல குடுங்கன்னு வாங்கி போட்டுக்குவாரு ,. ஒவ்வொரு பள்ளிகூடத்திலையும் யார் யார் கிட்டயோ பேசி செஞ்சி ரெண்டு புள்ளைகலயாவது சேத்து விட்டிருவாரு ,அவங்க படிப்பு செலவுக்கு நாங்கல்லாம் சஞ்சாயிகா ல சேர்த்து வைப்போம்.ரேடியாவில் கொழும்பு வானொலி நிலையத்துல " இருபது புலிகள் சுட்டு கொல்லப்பட்டனர் , ஒரு ராணுவ வீரர் காயமடைந்தார் " ன்னு சொல்லும்போதெல்லாம் கடக்கர அண்ணாச்சி ஞாபகம் தான் வரும் . "எல்லாமே புளுகுடே ௦, அப்பிடியே அத மாத்தி புரிஞ்சிக்கோ " ன்னு சொல்லுவார் .
கடக்கர அண்ணாச்சி மாரடைப்புல செத்துட்டாருன்னு கேட்டதுமே எங்கம்மா அழுத்திச்சு , எனக்கு மாரடைப்பு நோய் மேல ஏகப்பட்ட கோபம் வந்தது . டவுன் ஸ்கூல் போற வரைக்கும் ,மாரடைப்புங்கிறது ,கடக்கர அண்ணாச்சி மாதிரி நல்லவங்களுக்கும் , பெரியவங்களுக்கும் மட்டும் வர்ற நோயின்னே தான் நேனைசிகிட்டு இருந்தேன் .
அவரு இருக்கும் போது எங்க யாருக்குமே இப்ப தெரியிற ஈழ வரலாறுல ஒரு சதவீதம் கூட தெரியாது ,ஆனா ஊரே அவரு பின்னாடி நின்னு கைகொடுத்துச்சி , ஆனா இன்னைக்கு ஒரு நாள் முழுசும் பேசுற அளவுக்கு விஷயம் தெரியும் எல்லாருக்குமே , ஆனாஅப்ப செஞ்ச உதவியில ஒரு சதம் கூட இப்போ பண்ண முடியல , ஏன்னும் தெரியல .

5 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

நெகிழ்ச்சியான பதிவு .. சண்முகம் அண்ணாச்சிக்கு என் அஞ்சலிகள் ...

அர. பார்த்தசாரதி said...

thank you senthil san

விந்தைமனிதன் said...

//ரோசக்கார பயக, இவங்க இப்பிடி சாப்புடரத பாத்துகிட்டே செத்து போயிரனும்டே,அத விட நல்லா சாவு கெடைக்குமா டே " என்று அவர் சொல்லும்போது கண் கலங்கி நா தழுதழுக்கும்//

நிஜமாவே நெகிழ வைத்த வரிகள்!

//அவரு இருக்கும் போது எங்க யாருக்குமே இப்ப தெரியிற ஈழ வரலாறுல ஒரு சதவீதம் கூட தெரியாது ,ஆனா ஊரே அவரு பின்னாடி நின்னு கைகொடுத்துச்சி , ஆனா இன்னைக்கு ஒரு நாள் முழுசும் பேசுற அளவுக்கு விஷயம் தெரியும் எல்லாருக்குமே , ஆனாஅப்ப செஞ்ச உதவியில ஒரு சதம் கூட இப்போ பண்ண முடியல , ஏன்னும் தெரியல . //

சுருக்குன்னு ஏறுது...

அர. பார்த்தசாரதி said...

afetr seeing your post on the same topic, i got inspired to write this ,Thanks vinthai manithan

வெத்து வேட்டு said...

இப்படி வெள்ளந்தியான தமிழ்நாட்டு மக்களை ஏமாத்தினது தான் வி.புலிகளும் மற்ற கோஸ்டிகளும் செய்தது..
இப்போ சீமானும் திருமாவும் அதையே திருப்பியும் தொடங்குகிறார்கள்..
இதற்காவேனும் ஜெயலலிதா ஆட்சிக்கு வரணும்.