Thursday, December 30, 2010

பெண்


பெயர்க்காரணம் சொல்வது கடினம்
பெயரே ஆரணம் ஆகியபடியால்

பிறவி ஊமை பேசமுடியாது
பெண் பேசுவாள்

இடப்புறம் இருப்பாள் அல்லது
வலப்புறம் இருப்பாள்
இருபுலங்கள் இணைவதில்லை

இவள் இன்னொருத்தி வாழ்க்கையை வாழ்பவள்
இன்னொருத்தி இவளை வாழ்பவள்

முரண்பாடு - ஆயுதம் தாங்கிய
நிராயுதபாணி அவள்

துரோகமும் காதலும் ஒரு சேர செய்வது
இவளுக்கு உரித்தான தனித்தன்மை

அழகான குழப்பம் அல்லது
குழப்பம் அழகானது

வள்ளுவனின் வார்த்தை
பெண் வழி சேறல்

ப்ராய்டின் வாதம்
பெண் ஒரு இருட்டு கண்டம்

ஐன்ஸ்டீனின் குழப்பம்
புரியாத புதிர்

ஓஷோவின் தியானம்
போகப் பொருள்

புகை பிடித்தல்
மது சுவைத்தல்
அவளின் இன்றைய போதை சிறியது

சமையல் சுகம்
பதி பக்தி
ஆபரண தாகம்
முகஸ்துதி மயக்கம்
புடவை மோகம்
புறம் பேசுதல்
டி வி சீரியல்
அவளின் நேற்றைய போதை கொடியது

ஏமாறாமல் ஏமாறுவாள் அல்லது
ஏமாற்றி ஏமாறுவாள்

Tuesday, December 28, 2010

விட்டில் பூச்சி - 2


காதல் கண்ட பின் தான் உணர்ந்தேன்
சந்நியாசி தான் நல்ல சம்சாரி என்று

புலியை கட்டி ஓட்ட ஆரம்பித்துவிட்டேன் -இனி
மாட்டை பூட்டுவது மடத்தனம்

எத்துனை அபத்தம் - கிளியிடம்
பச்சை நிறத்தை மாற்ற சொல்லி
மன்றாடிக்கொண்டிருக்கிறேன்

ஆந்தைக்கு இரவில் பார்வை உண்டு
ஏமாந்து போனேன்
இரவிலும் பார்வை உண்டு

காதல் என்பது நெருப்புதான்
நான் எப்படி விட்டில் பூச்சி ஆனேன்

Sunday, December 26, 2010

பதிவரே - சற்று கவனியும்


இதை சொல்லியே ஆகவேண்டும் , அடக்கி வைத்த மூத்திரம் பெய்கையில் நாற்றமெடுக்கும் ,ம்ஹும் , விந்தை மனிதன் என்னுடைய பல வருட நண்பன் தான் என்றாலும் , அவருடைய சமீபத்திய பதிவு ஒன்று ( நல்ல வரவேற்பு அளிக்கப்பட்ட ) என்னை இப்படி எழுத தூண்டிவிட்டுவிட்டது .

பதிவர் பா.ராவும் ஒரு தோழியும்...

எங்கிருந்து அய்யா இது வருகிறது , நீர் நூறு பதிவு போட்டுவிட்டதால் , நாலு நண்பர் வட்டாரம் வந்ததால் , மரியாதை நிமித்தமாக சில விசயங்களில் உங்களை கலந்து கொள்வதால் இப்படி எழுதுவதா . கவிஞர் என்றால் "அது " இரண்டு இருக்க வேண்டுமா , ஆறு கோடி பெரும் எழுத நினைக்கும் ஆர்வத்தை ரசியுங்கள் , முயற்சியை பாராட்டுங்கள் , கிண்டலடிக்காதீர் , நீரும் அப்படித்தான் ஆரம்பித்தீர் , கொஞ்சம் பழசை அசை போடும் .

முதன் முதலில் நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது எனது பள்ளியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கூட்டம் ஒன்று நடைபெற்றது . அன்று எங்கள் பள்ளி சார்பாக யாராவது கவிதை வாசிக்க வருவார்களா என்று அழைத்தபோது என்னை அனுப்பினார் எனது கணக்கு வாத்தியார் . அன்று அவ்வளவு கேவலமாக நான் வாசித்த கவிதையை அவர்கள் புகழ்ந்தனர் , இன்றும் என் சொந்த ஊருக்கு அவர்கள் நிகழ்ச்சி தபால் அனுப்பிய வண்ணம் உள்ளனர் . அவர்களின் இந்த முயற்சியின் காரணம் ஊக்குவிப்பு மட்டுமே .

கண்ணன் என எனக்கொரு அண்ணா உண்டு , அவர் படிக்காதவர் , எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டு கதை எழுத ஆரம்பித்தார் ,அதற்கு காரணம் சுந்தரனார் பல்கலைகழகத்தை சேர்ந்த தமிழாசிரியர் .அவர் பல முறை உம் போல் சிலரின் விமர்சனத்துக்குள்ளானாலும் , அவர் எழுதிய "ஆலமரம் " என்ற கதை படிப்பவரின் கண்களை குளமாக்கிவிடும்,அந்த கதைக்காக அவர் தமிழக அரசு விருது வாங்கியுள்ளார் , நல்ல வேளை அவரை உங்களுக்கு தெரியாது

இன்னும் சிலர் இங்கு உள்ளனர் . எழுத்துக்கு தோரணம் கட்டுபவர்கள் . சொல்ல வேண்டியதை நேராக சொல்லாமல் சுற்றி வளைத்து சொல்வதுதான் உங்கள் அகராதியில் பதிவர் அல்லது எழுத்தாளரா ?

பக்கத்தில் இருப்பவன் எனக்கு இம்சையை கொடுக்கிறான் என்பதற்கு , ஜப்பானிய துருப்புகள் இந்தோனேசியாவில் நுழைந்த போது ஹாலந்து நாட்டினரின் மனநிலையை போல் இருந்தது என எழுதுகிறார் நண்பர் ஒருவர் . ஐய்யா ,நான் உம் எழுத்தை மிக விரும்பி படிக்கிறேன் , உவமைக்கு ஏன் இப்படி எழுதுகிறீர்கள் என்று புரியவில்லை , சாப்பிட்டாயா என்ற கேள்விக்கு , அமெரிக்க பிரதமர் ரஷ்யாவில் விருந்து சாப்பிட்டபோது அதில் விஷம் இருக்கலாம் என்ற எண்ணத்தில் அவருடைய ஐரிஸ் மெய்காப்பாலனை முதலில் சாப்பிட வைத்த போது எதிரில் உட்கார்ந்திருந்த மாட்ரிட் இளவரசர் சொன்னது போல எனக்கும் பசியில்லை என்று சொல்வது போல் உள்ளது . வெகு ஜனத்திற்கு புரியும்படி எழுதுங்கள் .

இதை பற்றி பேசும்போது , உனக்கு உலக அறிவு கம்மி , உனக்கு புரியல ,அதப்பத்தி எனக்கு என்ன , புரியறவங்க படிப்பாங்க என்று விதண்டாவாதம் பண்ணுபவர்கள் சிலர் . இப்ப என்ன புக் படிக்கிறீங்க ,என்ற கேள்விக்கு இன்று வரை எனக்கு கிடைத்த பதில என்ன வென்றால் , நான் அல்லது வெகு ஜன மக்களுக்கு அல்லது கூடவே இருக்கும் இன்னொரு பிரபல பதிவருக்கும் கூட தெரியாத புத்தகங்களின் பேர் சொல்வதே இவர்களுக்கு வேலையாகிபோயவிட்டது .

ஈழ பிரச்சினையை பற்றி எழுதி கண்ணீர் விட வேண்டியது , சரி ,அதற்காக ஒரு பைசா செலவு செய்தாயா அல்லது அவர்களை நேரில் ஒரு முறை கண்டு ஆறுதல் செய்தாயா - பக்கம் பக்கமாக அவர்களை பற்றி எழுதி நீ நல்லவனாக காட்டிகொல்கிறாய் - இந்த நீ என்பது சில பல மக்களை குறிப்பது .உங்கள் போதைக்கு ஈழ தமிழர் ஊருகாயாகிவிட்டனர்

தலைவர்களும், தொண்டர்களும் அப்புறம் மக்களும்..கே ஆர் பி

இவர் கொஞ்சம் சிரத்தை எடுத்து சொல்லுகிறார் , இவர் சொல்கிறது போல , இன்னொரு விஷயம் அரசியல் , ஒரு குரூப்பு அமைத்து கொண்டு மாற்றி மாற்றி ஓட்டு குத்தி கொள்வது ,எனக்கு நீ போடு ,உனக்கு நான் போடுறேன் , நான் பதிவுலகம் வந்து முழுதாய் ஆறு மாதம் கூட ஆகவில்லை எனக்கே இது எரிச்சல் தருகிறதே ,இதில் என்ன இருக்கிறதென்று சில பல வருடங்களாக இப்படி செய்து கொண்டே இருக்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை .
ஒரு பதிவராக இருக்க இந்த இந்த குவாலிட்டி இருக்க வேண்டும் என்று நீங்களாக தீர்மானித்து கொள்வது , புதிதாக வருபவனை எள்ளி நகையாடுவது , ஒருவருக்கொருவர் நன்றாக சொம்படித்துக்கொள்வது,யாரை பார்த்தாலும் இந்த புத்தகம் படி என்ற அறிவுரை சொல்லுவது , எப்போ பார்த்தாலும் புரியாத ஒரு புத்தகத்தை படிப்பதாக கூறிக்கொள்வது , ஏன் இப்படி மக்கா , ஆதரியுங்கள் , கோணல் மாணலாக எழுது பவனுக்கு சொல்லிதாருங்கள் ,ஆறு கோடி பேர் எழுதினாலும் உங்கள் இடம் உங்களுக்கே ஐய்யா ! புலவரே !

உங்களை புண் படுத்த அல்ல , செய்வதை கொஞ்சம் பக்குவமாக செய்யுங்கள் , நீங்கள் சொல்வதை நம்பும் கூட்டம் ஒன்று இருக்கிறது என்னை போல ,நல்ல திறமை உள்ள நீங்களே இப்படி செய்தால் எப்படி என்ற சின்ன கோபமே !

Thursday, December 23, 2010

சோறும் சோறு சார்ந்த இடமும் - கோவில்பட்டி வட்டாரம்


கோவில்பட்டியிலிருந்து கழுகுமலை செல்லும் வழியில் வானரமுட்டி என்ற ஊர் உண்டு . அந்த ஊரிலிருந்து மூன்று மைல் தூரம் நடந்து சென்றால் வெயிலு கந்த புரம் என்ற ஊர் வரும் , இந்த ஊரில் தான் சமையல் கலையை கற்கும் ஆர்வம் எனக்கு வந்தது , என் அம்மா பிறந்த ஊர் அது , வெறும் மிளகாய் பொடியும் மஞ்சள் பொடியும் மட்டும் சேர்த்து நாட்டு கோழி குழம்பு வைப்பார்கள் என் பாட்டி , அந்த சுவை எந்த ஒரு மசாலா வை விடவும் மிஞ்சி விடும் அளவிற்கு இருக்கும் . சேர்க்க வேண்டியதை சேர்க்க வேண்டிய நேரத்தில் சேர்த்தால் நல்ல சுவை கிடைக்கும் என்பார் என் பாட்டி . என் அம்மா மட்டன் வறுவல் செய்தாலோ , குடல் குழம்பு வைத்தாலோ சுற்றி இருக்கும் பத்து வீட்டிலிருந்து டபரா கிண்ணி பறந்து வரும் . மட்டன் வறுவலை பொறுத்த வரியில் அதன் பச்சை வாசனையை நீக்கி , சம்பா வத்தலும் , தனியாவையும் , சீரகத்தையும் அதனுடன் கொஞ்சமாக வெந்தயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து சிறிது நல்லெண்ணையில் வதக்கி அம்மியிலிட்டு மைய அரைத்து ஏற்கனவே அரைத்த இஞ்சி பூண்டு சின்ன வெங்காயம் மற்றும் பட்டை சோமபில் வதக்கி எடுத்த மட்டன் கலவையோடு சேர்த்து மிதமான சூட்டில் வேக வைத்து நல்லெண்ணெய் ஊற்றி இறக்கினால் சுவையான மண மணக்கும் மட்டன் வறுவல் தயார் . இஞ்சி பூண்டு சீரகம் என மருத்துவ குணம் மிகுந்த பொருட்கள் கலக்கப்படுவதால் வயிற்றுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை .


கோவில் பட்டி , அசைவ பிரியர்களுக்கு பெரியசாமி ஹோட்டல் ஒரு நல்ல உணவகம் . அனைத்து வகையான அசைவ உணவுகளும் நல்ல தரத்துடன் வழங்கப்படுகிறது . மாலை நேரம் புரோட்டா சாப்பிடும் அன்பர்களுக்கு ஏ 1 புரோட்டா கடை கண்டிப்பாக பிடிக்கும் , இங்கும் உங்களுக்கு முட்டையில் செய்யப்படும் கரண்டி ஆம்லேட் மற்றும் வழியல் போன்றவையும் கிடைக்கும் . கோவில் பட்டி
கடலை மிட்டாய் ஒரு அருமையான இனிப்பு , மொரு மொரு வென்று கடித்து மென்று ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் ஒரு சுகம் வரும் பாருங்கள் ....எம் எல் ஆர் , இந்த கடையில் இந்த மொரு மொரு கடலை மிட்டாய் கிடைக்கும் . கோவில் பட்டியிலிருந்து சாத்தூர் செல்லும் வழியில் வள்ளி மில் பஸ் ஸ்டாப் அருகே ஒரு பெயரில்லாத கடை உண்டு . எப்போதும் கூட்டம் மொய்க்கும் அந்த கடையில் என்னதான் விற்கிறார்கள் என்று ஒரு முறை எட்டி பார்த்தேன் . உளுந்து வடை க்குதான் அத்தனை போட்டி , அப்படி ஒரு உளுந்து வடை நான் இது வரை சாப்பிட்டது இல்லை . நா வில் வைத்த மறு கணம் கரைந்து விடுவது போல , எண்ணை குறைவாக , உளுந்த வடிக்க உரிய மணத்துடன் , கொஞ்சம் குழைவாக ,கொஞ்சம் முறைப்பாக , அந்த தக்காளி சட்னியுடன் தொட்டு சாப்பிடும்போது என்ன ஒரு சுவை . பை பாஸ் பயண வாதிகளே , மறக்காமல் ஒரு முறை எட்டி பாருங்கள்

சங்கரன் கோயில் பிரியாணி என்றால் ஓரளவு எல்லாருக்குமே தெரிந்தே இருக்கும் , சங்கரன் கோவிலுக்கு இப்படி ஒரு பெருமை கிடைத்தது சுல்தானியா பிரியாணி கடை யால் தான் . பதினொன்று மணியிலிருந்து ஒரு மணிக்குள் முடிந்து விடும் இங்கு பிரியாணி . உட்கார்ந்து சாப்பிடுவது கஷ்டம் அதனால் நிறைய பார்சல்கள் கட்டுவார்கள் . கூட்டம் அலை மோதும் .அப்படி என்ன இருக்கிறது ,இது என் நாவின் பதில் - இங்கு பயன்படுத்தப்படும் அரிசி சீராக சம்பா , பொதுவாக பிரியாணியில் நாம் பாசுமதி அரிசி தான் பயன்படுத்துவோம் இல்லையா , சீரக சம்பா வும் பிரியாணிக்கு மிக உகந்தது என்பது இங்கு சாப்பிட்ட பின் தான் அறிந்தேன் , இந்த கடையில் பயன்படுத்தப்படும் நெய் மற்றொரு காரணம் , இப்படி ஒரு மணம் கமழும் பிரியாணியை ஐதராபாத் பேரடைஸ் ஹோட்டலில் கூட கிடைக்காது . குற்றாலம் செல்லும் வழியில் நீங்கள் சங்கரன் கோயில் செல்ல நேர்ந்தால் இந்த கடையை மறக்காதீர்கள்

குற்றாலம் என்ற உடன் அருவிகளுடன் இன்னொரு இடமும் ஞாபகம் வருகிறது . பார்டர் புரோட்டா கடை .குற்றாலம் அருகே செங்கோட்டை கேரளா பார்டரில் ரஹ்மத் புரோட்டா கடை இருக்கிறது , இதை எல்லோரும் பார்டர் கடை என்றுதான் அழைக்கின்றனர் . குற்றாலத்தில் ஒரு நல்ல ஹோட்டல் இல்லையே என்பவருக்கு பார்டர் கடை பற்றி தெரியாது என்று அர்த்தம் . விருதுநகர் எண்ணை புரோட்டா போல இருந்தாலும் இங்கு சுவை வித்தியாசப்படுகிறது . வறுத்த கோழி , வறுத்த காடை போன்றவை பிரசித்தம் , சீசன் நேரத்தில் கூட்டம் அலை மோதும் , குறைந்தது ஒரு முப்பது முறையாவது இங்கு சாப்பிட்டிருப்பேன் , ஆனாலும் திகட்டாத உணவகம்

அடுத்து நம் அண்ணன் அஞ்சா நெஞ்சனின் கோட்டை , தலைநகர் மதுரை பற்றி அவர் சாப்பிட்டது போக உள்ள மிச்சத்தை அசை போடலாம்

Wednesday, December 22, 2010

உலர் பூ


அவள் ஊர் புகுந்தாள்
உருக்குலைத்தாள்
உதறி திரும்புகையில்
உலரும் பூக்களாய் நான் உயிர் அஞ்சலி செய்தேன்

அவன் தியான வீரன்
திமிரும் கன்னி அலையின் மேல் ஏறும் விவேகன்
கற்பாறை மேல் அமரும் முன் அவன்
தோளில் தொற்றிய பூ மாலை நான்

அவளும் அவனும் அமரர்கள்

நான்

அழகிய அலைப்பெண்ணின் வெள்ளை சிரிப்பு - அல்லது
ஆர்ப்பரிக்கும் கடலின் வெண் மகுடம் - அல்லது
நீ சொல்வது போல் கரை தொட்டு மரிக்கும் நுரை

Sunday, December 19, 2010

குட்டி மகிழ்ச்சி


கையில் காசில்லாத போது -தேடி சென்று
பிச்சைக்காரர்களை திட்டி அனுப்புவதில்
ஒரு குட்டி ஆறுதல்

உச்சு கொட்டி ஓரமாக நடந்தாலும் -
ரத்தத்தில் குளித்த விபத்தான வண்டியை
எட்டி பார்க்கையில் ஒரு குட்டி திருப்தி

கண்களில் கண்ணியத்தை காட்டியபோதிலும் -
அவள் கடந்து செல்கையில்
மறைத்ததை தேடுவது ஒரு குட்டி குதூகலம்

தான் கண்ட உலக நாடுகள் பற்றி
மென்பொருள் நண்பன் பேசியபோது
அடுத்த ரிசஷன் எப்போது என்ற நினைப்பு
ஒரு குட்டி ஏக்கம்

கற்பழிப்பு காட்சியை
கனத்த இதயத்துடன் பார்க்கும் போது
இம்முறையாவது "அது " நடக்குமா என்பது
ஒரு குட்டி குரூரம்


மனம் குமுறி அழுதபோது -
நாளை இன்னொருவனும் என் போல்
அழுவான் என்ற எண்ணம்
ஒரு குட்டி மகிழ்ச்சி

Wednesday, December 15, 2010

நிற்க
காதில்லா ஊசியுமே கடைசி வரைக்கும் வராதே - நிற்க

முதலில் இருந்தே வராது காசில்லாத பட்சத்தில்எத்தனை பேர் தொட்ட முலைஎத்தனை பேர் நட்ட குழி - நிற்க

விபத்து நேர்ந்துவிடுவதால் இனி சாலைகளில் செல்லாதீர்பெண் மனதை புரிந்தவர் ஒருவரும் இல்லை -நிற்க

நேற்றுவரை வாலாட்டிய தெருநாய் இன்று விரட்டி விரட்டி கடிக்கிறதுஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் -நிற்க

உண்மைதான் வெற்றிக்கு பின் தான் இருக்கிறாள் முன் அல்ல


Sunday, December 12, 2010

முகமூடி


கொப்புளித்த கோபம்
குளமான விழி
கூறாத வாய்
அழகான மனைவி
அன்பான குடும்பம்

சுடும் துரோகம்
நடுங்கும் கரங்கள்
உடுக்கை இழந்தவன்
உயிர் நண்பன்

தேய்ந்தது கால் செருப்பு
அழிந்தது கை ரேகை
வராக் கடன்
வெள்ளை சிரிப்பு
நல்ல வியாபாரிஅழுகை குரல்கள்
ஆறுதல் வார்த்தைகள்
சோக வெள்ளம்
" எவனுக்கு வாய்க்குதோ " உள்ளே
"நல்ல மனுஷன் ஹும் " வெளியே

ததும்பும் பாசம்
பசுவை தேடும் கன்று
அடங்கு மகனே அடங்கு
மாமியார் - மறு தாய்
நாடக மேடையில் நிஜம் நடிப்பு
நடித்து வெற்றியை ஜெயிக்கிறோம்
ஆனால் வெற்றி தோற்றது

பொய் என்பது பொய்
உண்மை என்பது பச்சை பொய்

சோறும் - சோறு சார்ந்த இடமும் - திருநெல்வேலி


திருநெல்வேலி என்றாலே எனக்கு கண் முன் வருவது தாமிரபரணி ஆறும் , செம்மண் நிலமும் தான் . திருநெல்வேலி என்றால் நமக்கு ஞாபகம் வருவது அல்வா தான் இல்லையா. எனவே நாம் அல்வா விலிருந்து ஆரம்பிப்போம் .

இருட்டுக்கடை அல்வா , எப்படி செய்கிறார்கள் என்பது இன்று வரை புரியாத புதிர், ஆனால் சுவை , நாவில் எச்சில் சுரக்க வைக்கும் சுவை , இன்னொரு விஷயம் சாதாரணமாக அல்வா வினால் ஏற்படும் அஜீரண பிரச்சினை இங்கு எட்டி கூட பார்ப்பதில்லை . இருட்டுக்கடை அல்லாது இன்னொரு கடையும் உண்டு , சாந்தி சுவீட்ஸ் , ரயில்வே ஜங்சன் அருகே உள்ள பல சில சாந்திகளுக்கிடையில் ஒரிஜினல் சாந்தியை கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமம் தான் , ஆனால் கூட்டம் மொய்க்கும் கொஞ்சம் பழைய கடையாக தட்டுப்படும் சாந்தி கண்டிப்பாக உங்கள் கண்ணில் படத்தான் செய்யும் . இருட்டு கடைக்கு நிகரனான அல்லது ஒரு படி சுவை அதிகமான அல்வா சாந்தி சுவீட்ஸ் சிலும் கிடைக்கும் . கூட்டம் மற்றும் காத்திருப்பது இங்கும் ஒரு பிரச்சினைதான் , ரயில் நிலையம் அருகில் இருப்பது பிரயாணிகளுக்கு சவுகரியம் , கால் கிலோ பொட்டலங்களாக கிடைக்கும் இவற்றை வாங்கி கொண்டு எப்படியும் ரயிலை பிடித்து விடலாம்

மதிய வேளை , சைவ சாப்பாட்டிற்கு மண்பானை சாதம் கடை மிகச்சிறந்த இடம் . ஒரு குடிசை , அதனுள் நீளவாக்கில் இரண்டு டேபிள்கள் , பத்து இருக்கைகள் , பரிமாற இரண்டு மூதாட்டிகள் , கல்லாவில் உட்காராமல் ஊர்கதை பேசி சுற்றிகொண்டிருக்கும் முதலாளி . அசைவ பிரியனான நான் விரும்பி சைவம் சாப்பிடும் கடை இது . காரணம் செய்முறை தான் . கடையின் பெயருக்கு ஏற்ப இங்குஉணவுகள் மன்பானையிலேயே சமைக்கப்படுக்றது , வாழை இலையில் மண் பானை சோற்றுடன் ஒரு மனம் வரும் பாருங்கள் , சொல்லி மாளாது , இந்த சுவைக்கு ஈடு இணை கிடையாது . எவ்வளவு சாப்பிட்டாலும் வயிறுக்கு ஒரு பிரச்சினை வராது . கூடுதலாக நாம் வாங்கிகொல்வதற்க்காக வாழைப்பூ பொரியல் , அகத்தி கீரை பொரியல் , பாகற்காய் பொரியல் போன்றவை ஐந்து ரூபாய் வீதம் கிடைக்கும் . ருசிக்கு நான் கியாரண்டீ . விருந்தோம்பல் என்பதன் அர்த்தம் நமக்கு அறியச்செய்யும் ஒரு மண் வாசனை கடை . வண்ணாரப்பேட்டை பை பாஸ் சாலை ஓரத்தில் இந்த குடிசையை பார்க்கலாம் , கொஞ்சம் கூட்டம்தான் , பக்கத்திலேயே ஒரு டூபிளிகட் கடை கூட உண்டு ஜாக்கிரதை

அடுத்ததாக முத்து மெஸ் , இந்த முத்து மெஸ்ஸின் முதலாளி வள்ளலாரை கடவுளாக பாவிக்கும் ஒரு கூட்டத்தை சேர்ந்தவர் . ஜன்க்சன் லிருந்து டவுன் செல்லும் வழியில் ஸ்ரீ புரம் என்ற இடத்தில உள்ள சைவ மெஸ் . இங்கு விசேசம் என்ன வென்றால் பரிமாறுபவர்களின் நடை உடை பாவனை உங்களை வடலூர் சத்திய தர்ம சாலைக்கு அழைத்து செல்லும் . இங்கு உணவு இயற்கை யான , ரசாயன கலப்பு ( பிளேவர் ) இல்லாத வகையில் சமைக்கப்படுகிறது, வயிறும் மனமும் நிறைந்து திரும்பலாம் , இன்னொரு விசேசம் என்ன வென்றால் , ஆறு நாட்களும் ஆறு வகை பத்திய ( டயட் ) சாப்பாடு . புதன்கிழமைகளில் இங்கு உளுந்து சாதம் என்பது கட்டாய சாப்பாடு . இந்த உளுந்து சாப்பாடென்பது பண்டை தமிழர்களின் கலாச்சாரம் , கலியாணம் செய்துகொள்ளும் மன மக்களுக்கு உளுந்து சாதம் வழங்கு வது ஒரு பழக்கமாகவே இருந்து வந்துள்ளதாம் , அதில்லாமல் உளுந்து சாதம் சாப்பிடுவதால் எலும்பு மஜ்ஜை , சவ்வு ( லிகமண்டு ) போன்றவை வலுப்படும் , முதுகு , இடுப்பு வலிகள் தீருமாம் . அந்த பழைய ரெசிபி இவர்களிடம் நீங்கள் காணலாம் . சாப்பாடு முடித்த வுடன் ஒரு இனிப்பு தருவார்கள் , இதிலும் எந்த வொரு பிலேவரும் கலக்கப்படாமல் இயற்கையாகவும் , சுவையாகவும் கிடைக்கும்

செம்மீன் , இது மட்டும்தான் திருநெல்வேலி யில் இருந்த நல்ல அசைவ ஹோட்டல் , நமது துர் அதிர்ஷ்டம் அந்த ஹோட்டல் மூடப்பட்டு விட்டது , இப்போதைக்கு நம்பி சாப்பிட " ஹோட்டல் வைர மாலை " பரவாயில்லை . இதில்லாமல் சாயந்தர வேளைகளில் ஆங்காங்கே கிடைக்கும் பொடி வடைகள் நல்ல ருசி .
அடுத்த பதிவில் நாம் கோவில்பட்டி சுற்று வட்டாரம் பார்க்கலாம்

Saturday, December 11, 2010

நானே ராஜா


நீ யார் என்னை ஆள
நானே ராஜா நானே ,

நான் நடக்குமிடத்தில் முள் இருந்தால்
உன் கைகளை என் பாதங்களாக்கு,
உன் குருதி காண நடப்பேன் முள் மேல் மீண்டுமொருமுறை
நான் சிரிக்கையில் நீ சிரிக்கவேண்டும்
நீ அழுவாய் நான் அழ நேர்ந்தால்

நான் உண்ணும் உணவை சாக்கடையில் எறிவேன்
நீ உண்ணும் உணவில் மல ஜலம் இடுவேன்

நான் உறங்கும் நேரத்தை இரவு என்று அழை ,
விழித்த நேரத்தை பகல் என்று கூறு

நான் ஆடைகளை துறப்பவன்
நிர்வாணத்தை ரசிப்பவன்

நான் உன் மேய்ப்பன்
நீ என் அடிமை

என்னை என்னவென்று அழைப்பாய்
கொடூரன் என்றா , கோமாளி என்றா
அரக்கன் என்றா , அயோக்யன் என்றா

அதற்க்கெல்லாம் உனக்கு வாய்ப்பு இல்லை
அப்படி அழைக்க கொஞ்சம் வயது வேண்டும்
அந்தோ பரிதாபம் .......
இப்போதைக்கு

" குழந்தை " என்று அழைத்துக்கொள்

Thursday, December 9, 2010

சோறும் - சோறு சார்ந்த இடமும் - சாத்தூர்


நான் வேலை செய்த முதல் நிறுவனத்தில் வேலைக்கான நேர்முகத்தேர்வு நடந்த போது " நீங்கள் மனம் விரும்பி , உங்களையே மறக்கும் அளவிற்கு எந்த வேலையில் ஈடுபடுவீர்கள் " என்ற கேள்விக்கு ,நான் உடனே சொல்லிய பதில் " சமைப்பதும் , சாப்பிடுவதும் "
நான் வேலை நிமித்தமாக பல ஊர்களுக்கு செல்பவன் , செல்லும் ஊர்களில் எது நல்ல ஹோட்டல் , எங்கு வயிறுக்கு பிரச்சினை வராது , எங்கு மண்வாசனையுடன் மணக்க மணக்க சாப்பிடலாம் என்று தெரிந்து வைத்துகொண்டு வெட்டு குத்தில் இறங்குவது வழக்கம்

சாத்தூர் :

நான் ஒன்பது முதல் பன்னிரண்டு வரை படித்த ஊர் . தினமும் கிடைக்கும் பைக்காசை சேர்த்து வைத்து கிரகம் ஹோட்டலில் புரோட்டா சாப்பிடுவது வழக்கம் . இன்று கிரகம் ஹோட்டல் சொல்லும்படி இல்லை என்றாலும் , சாத்தூரை பொறுத்த மட்டில் அசைவத்திற்கு நாடார் மெஸ் , சைவத்திற்கு தேவி விலாஸ் தான் . பிள்ளையார் கோவில் தெருவில் பழைய காலத்து வீடு ஒன்றில் தான் நாடார் மெஸ் நடத்தப்படுகிறது , இங்கு சாப்பாட்டுடன் ,ஒரு மட்டன் சுக்கா வாங்கி பிசைந்து சாப்பிட்டால் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதே தெரியாத அளவு சாப்பிட ஆரம்பித்து விடுவோம் . பொதுவாக சாயந்தர வேளைகளில் தேன் மாவட்ட மக்கள் விரும்பி சாப்பிடும் உணவு புரோட்டா தான் .சாத்தூர் பை பாஸ் சாலையில் செட்டியார் கடை என்று கேட்டால் , ஒரு வெட்ட வெளி சாலையோர கடையை காட்டுவார்கள் .இங்கு புரோட்டாவிற்கு சைவ குழம்புதான் என்றாலும் , சுவையாக இருக்கும் . தமிழ் நாட்டில் முதன் முதலில் கரண்டி ஆம்லேட் கண்டுபிடித்தது இந்த கடைதான் . சுற்றிலும் மொரு மொறுப்பாக , உள்ளே கொஞ்சம் குழைவாக , காரம் உப்பு அளவாக சேர்த்து , தாளிக்கும் கரண்டியில் சுட்டு தருவார்கள் . இங்கு வரும் ஒவ்வொருவரும் குறைந்தது இரண்டு கரண்டியாவது சாப்பிடுவார்கள் . கொஞ்சம் கூட்டம் அலைமோதினாலும் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது .
சாத்தூருக்கு பெருமை சேர்க்கும் இன்னொன்று சேவு , இதில் இரண்டு வகை உண்டு நடப்பு சேவு , நயம் சேவு . இரண்டுமே நன்றாக இருந்தாலும் உள்ளூர் காரர்களுக்கு நடப்பு செவென்றால் தான் இஷ்டம் .
உலக அளவில் பிரசித்தி பெற்றது சாத்தூர் வெள்ளரிக்கா , எந்த சீசனிலும் இங்கு வெள்ளரி பிஞ்சு கிடைக்கும் . பல வெளி நாடுகளில் இன்று பயன்படுத்தும் வெள்ளரிக்காய் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுவது தான் .

மதுரையில் இருந்து திருநெல் வேலி செல்லும் வழியில் விருதுநகருக்கு அடுத்து சாத்தூரை பார்க்கலாம் . சாத்தூர் வழி செல்லும்போது வெள்ளரிக்காய் , கரண்டி ஓம்லெட் , நடப்பு சேவு வாங்க மறக்காதீர்கள்
அடுத்த பாகத்தில் திருநெல்வேலி பற்றி பார்க்கலாம்

Wednesday, December 1, 2010

"கடக்கர அண்ணாச்சி "


"கடக்கர அண்ணாச்சி " அப்படித்தான் கூப்பிடுவாங்க அவரை . அது 1992 , கடற்கரை சண்முகம் என்பது அவரோட பெயர் . வழுக்கை தலை , அஞ்சரை அடி உயரம் , வெள்ளை வேட்டி சட்டை ,கெடா மீசை,கோல்ட் பிளேட் கைக்கடிகாரம் ,மொத்தத்துல பழைய தமிழ் திரைப்பட நடிகர் செந்தாமரையை மாதிரியே இருப்பாரு .

நெஞ்சுல இருக்குற தங்க செயின் தெரியுறமாதிரி ரெண்டு பட்டன சட்டையில கலட்டிவுட்டு தான் இருப்பார் . அவர பாத்து போலீஸ் காரங்க பயப்படனும் ன்னு தான் அப்படி சண்டியரு மாதிரி அலைவாராம் .
கடற்கரை ன்ற பேறுக்கு ஒரு காரணம் உண்டு . எம் ஜி ஆர் ஆட்சி காலத்தில , விடுதலை புலிகளுக்கு உதவி செய்யுறதுக்கு ஒரு சமூகம் வேலை செய்து கொண்டிருந்ததாம் , பழைய ஆர் எக்ஸ் 100 யாமஹா பைக்கின் என்ஜின் மற்றும் ஏராளமான வெடிபொருட்கள் , துப்பாக்கி இதெல்லாம் கடற்க்கரை மணலில் கரையோரம் பொதெச்சி வைப்பாங்களாம் , விடுதலைப்புலிகளுக்கு இந்த அடையாளம் நன்றாக தெரியுமாம் , இரவு நேரங்களில் அவங்க அதை எடுத்துட்டு போயிருவாங்களாம் . சண்முகம் அண்ணாச்சி அந்த புதைக்கும் கூட்டத்தில் மிக முக்கியமானவராம் . எங்கே எதை வைப்பது , அதில் புலிகளுக்கு மட்டுமே தெரிந்த அடையாளங்களை வைக்கிறது இதெல்லாம் அவருக்கு அத்து படியாம் . அதனாலேயே அவருக்கு கடக்கர சண்முகம்னு பெயர் வந்ததாம் .இதெல்லாம் நான் பள்ளிகூடத்தில் படிச்சிகிட்டு இருக்கும்போது போது என் சித்தப்பா சொல்லுவாரு .

எங்க ஊரில் ஏலக்காரர் கடை இட்லி சாப்பிட கடக்கர அண்ணாச்சி வருவாப்ல . இட்லியும் குடல் கொழம்பும் வாங்கிகிட்டு 4 அவிச்ச முட்டையும் சேர்த்து ஒரு விளாசு விளாசுவார் , அதை பார்க்கும் யாருக்கும் நாக்கில் எச்சில் ஊரும் . ' எலே , இந்த சுகத்துக்குதானே டே மனுஷன் நாயா அலையுறான்,இந்த சோறு நம்மாளுக எல்லாத்துக்கும் கெடைக்கனும்டே " என்று சொல்வார் . அகதி மக்களுக்காக வேதனை படுற ஆளு சாப்பாட்டு விசயத்துல மட்டும் ஏன் இப்படின்னு நெனைக்காதீங்க , எங்க எல்லாருக்குமே தெரியும் அவர் எதனால அப்படி சாப்புடுராருன்னு . அவரு கூட எப்பயுமே ஒரு நாலு சின்ன வயசு பசங்க வருவாங்க , ஒவ்வொரு தடவையும் வேற வேற பசங்க , வேற மாதிரி தமிழ் பேசிகிட்டு , பழைய துணிகள போட்டுக்கிட்டு, பூபோட்ட மினுமினுக்கிற லுங்கி கட்டி , பரட்ட தலையோட , சின்ன பயம் தெரியிற கண்களோட இருப்பாங்க அந்த பசங்க .
முகாம்ல நம்ம சொந்த பந்தம் , சகோதரர் எல்லாம் ஒரு வேலை சாப்புட்டு வாழும்போது ,நமக்கெதுக்கு நல்ல சாப்பாடு ன்னு நெனைச்சு அந்த பசங்க சரியா சாப்பிட மாட்டாங்களாம் , அவங்கள நல்லா சாப்பிட வைக்கணும் அப்படீன்னு இவரு அவங்க முன்னாடி இப்படி சாப்புடுவாராம் . ஏதேதோ பேசி அவங்கள நல்லா சாப்பிட வச்சிட்டு " ரோசக்கார பயக, இவங்க இப்பிடி சாப்புடரத பாத்துகிட்டே செத்து போயிரனும்டே,அத விட நல்லா சாவு கெடைக்குமா டே " என்று அவர் சொல்லும்போது கண் கலங்கி நா தழுதழுக்கும். இதை பார்க்கும் கிராம மக்கள் எல்லோருடைய மனசிலும் திடீரென்று ஒரு சோகம் அப்பிகொள்ளும் .
ஆரம்பத்துல அவரு புலிகளோட வச்சிருந்த தொடர்பு போக போக குறைய ஆரம்பிச்சது ,அதுக்கு நெறைய காரணம் இருந்துச்சு ,இந்திய அரசியல் நிலவரமும் ,புலிகளுக்கு இருந்த தடை கடுமயாக்குனுதும் ஒரு காரணம்தான் , ஆனா கடக்கர அண்ணாச்சி ,"போர்ல அவங்களுக்கு உதவி செய்ய இளவட்டங்க இருக்கானுக , பொழைக்க வந்த இந்த புள்ளைகளுக்கு தான் யாருமில்ல டே" ன்னு சொல்லுவார் . நெறைய கிராமங்களுக்கு போயி மக்களோட மக்களா நின்னு அவங்க மனசுல ஈழ மக்களை பத்தி பேசி , "அவங்க நம்ம ஆளுங்க டே , நாம தாண்டே அவங்கள பாத்துக்கணும் "ன்னு சொல்லி எந்த துனியா இருந்தாலும் குடுங்கன்னு அவரே முன்ன நின்னு வாங்குவாரு , 1o பைசா கூட பரவாயில்ல குடுங்கன்னு வாங்கி போட்டுக்குவாரு ,. ஒவ்வொரு பள்ளிகூடத்திலையும் யார் யார் கிட்டயோ பேசி செஞ்சி ரெண்டு புள்ளைகலயாவது சேத்து விட்டிருவாரு ,அவங்க படிப்பு செலவுக்கு நாங்கல்லாம் சஞ்சாயிகா ல சேர்த்து வைப்போம்.ரேடியாவில் கொழும்பு வானொலி நிலையத்துல " இருபது புலிகள் சுட்டு கொல்லப்பட்டனர் , ஒரு ராணுவ வீரர் காயமடைந்தார் " ன்னு சொல்லும்போதெல்லாம் கடக்கர அண்ணாச்சி ஞாபகம் தான் வரும் . "எல்லாமே புளுகுடே ௦, அப்பிடியே அத மாத்தி புரிஞ்சிக்கோ " ன்னு சொல்லுவார் .
கடக்கர அண்ணாச்சி மாரடைப்புல செத்துட்டாருன்னு கேட்டதுமே எங்கம்மா அழுத்திச்சு , எனக்கு மாரடைப்பு நோய் மேல ஏகப்பட்ட கோபம் வந்தது . டவுன் ஸ்கூல் போற வரைக்கும் ,மாரடைப்புங்கிறது ,கடக்கர அண்ணாச்சி மாதிரி நல்லவங்களுக்கும் , பெரியவங்களுக்கும் மட்டும் வர்ற நோயின்னே தான் நேனைசிகிட்டு இருந்தேன் .
அவரு இருக்கும் போது எங்க யாருக்குமே இப்ப தெரியிற ஈழ வரலாறுல ஒரு சதவீதம் கூட தெரியாது ,ஆனா ஊரே அவரு பின்னாடி நின்னு கைகொடுத்துச்சி , ஆனா இன்னைக்கு ஒரு நாள் முழுசும் பேசுற அளவுக்கு விஷயம் தெரியும் எல்லாருக்குமே , ஆனாஅப்ப செஞ்ச உதவியில ஒரு சதம் கூட இப்போ பண்ண முடியல , ஏன்னும் தெரியல .