Tuesday, November 30, 2010

நடை பாதை நாயகர்


தார் கடலின் கரையில் நின்று
வாகன மீன் பிடிப்பவன் நான்

ஒரு நொடி வியாபாரம் என்னை வாங்க
ஒரு நாள் விலை கொடுத்தவன் நான்

நான் வாழ்வது கோடிகளில் -
வாடிக்கையாளர்களும் வாழுமிடமும்

பலரின் பரிகசிப்பில் என் மனம் அழும்
சிலரின் பரிதாபத்தில் என் தன் மானம் அழும்

நகர்தலும் நகர்த்துதலும் நகராமல் உள்ளன
நான் கண்ட நகரத்தின் பெயர்க்காரணம்

நேற்று வராத மழையின் மண் வாசம்
இன்று வரும் நாயர் கடை பஜ்ஜி வாசம்
நிர்ணயிக்கின்றன
நான் விற்கும் பொருட்களின் விலையை

Monday, November 29, 2010

ஓட்டு போட ஓடி வாங்க அண்ணாச்சி


ஓடி வாங்க ஓடி வாங்க அண்ணாச்சி
ஓட்டு போட ஓடி வாங்க அண்ணாச்சி

கட்டம் ஒன்னு கட்டியிருக்கோம் அண்ணாச்சி
கள்ளம் கபடம் இல்லாதது நம்மாச்சி

அன்னாடம் செய்யாத வேலைக்கு 100 ரூவா
அரிசி வாங்க அய்யா உங்களுக்கு போதும் ஒரே ரூவா

ஓட்டு ஒன்னுக்கு ஐயாயிரம் ரூவா
அதில்லாம க்வாட்டர் கட்டிங் 100 ரூவா

கட்டிக்க கலர் கலரா வேட்டி சேலைங்க
காட்டிக்க கலர் கலர் டி வி பெட்டிங்க

போனா வராதுங்க , டன் டனா டன் ஆப்பருங்க ,
டி வி யோட சேத்து 850 ரூவா கேபிள் இலவசங்க

செவிக்குணவுன்னு சொன்னாரு வள்ளுவரு
செவிக்கும் கண்ணுக்கும் சேத்து உணவு தந்தவரு தலைவரு

வேல வேட்டி இல்லாம வீட்டுலேய இருந்தா வரும் நோயிங்க
ஓசியில வைத்தியம் பாக்க காப்பீட்டு திட்டமுங்க
ஈசியா போறதுக்கும் வச்சிருக்கோம் 108 ங்க

வடக்கு வாழ்ந்திச்சுங்க ,தெக்கு தேஞ்சிச்சுங்க
ஆரியர் அனுபவிச்ச சொத்தெல்லாம்
அசால்ட்டா கொண்டுவந்தோம் திராவிடருக்கு

ஊர் ஊருக்கு நிலம் வாங்கியிருக்கோம் எங்க சொந்த செலவுல -
தப்பு தப்பு
சிங்கள அரசு கிட்ட இருந்து தமிழ் நாட்டு நிலங்களை காப்பாத்தியிருக்கோம்

ஊர் ஊருக்கு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டியிருக்கோம்
எங்க சொந்த செலவுல ,
மலிவு வெலையில நீங்க ஷாப்பிங் பண்ண

உங்க நட்சத்திரம் எங்ககிட்ட பத்திரம்
புது புது சினிமா , பெரிய பேனர் சினிமா
வெளம்பரம் பண்ண நம்ம சேனல் , நல்ல சேனல்

சிவனோட மகன் முருகன் மச்சான் கண்ணன்
மருமக வள்ளி , ரெண்டாவது மனைவி கங்கா
கடவுளோட சொந்தமும் கடவுள் தாங்க
எங்க தலைவரோட சொந்தமும் தலைவருங்க தாங்க
கடவுளா பாத்தா ஆத்திகம் ஆரியம்
தலைவரா பாத்தா நாத்திகம் திராவிடம்
இது தாங்க குடும்ப அரசியல் சூத்திரம்

ஆயிரம் வடநாட்டுக்காரன் அடிக்க வேண்டிய அலைவரிசை அமௌன்ட்ட
ஒத்த ஆளா கொண்டு வந்தவரு நம்ம கூட்டாளுங்க

ஒன்னவர் உண்ணா விரததுக்கே ஈழ விடுதலைன்ன
ஒரு நாள் புல்லா இருந்தா உலகத்துக்கே விடுதலைங்க

ஒண்ணா ரெண்டா நாங்க செஞ்சதுங்க
ஒலகமே திரும்பி பாக்குது தமிழ் நாட்டங்க

இன்னும் நாம உசரம் பாக்கணும் அண்ணாச்சி
அத இந்த உலகம் பாக்கணும் அண்ணாச்சி

Saturday, November 27, 2010

நில் - கவனி


அதிகாலை நடைபயிற்சி
நடக்கும் பாதங்கள் , ஓடும் எண்ணங்கள்

என்னை பார்த்து கொண்டே எதிரே ஓடிவரும் என் நண்பன்
ஓடவில்லை , மிதக்கிறான்

சைக்கிளில் செல்லும் " இன்றே இப்படம் கடைசி "
ஹோண்டாவில் செல்லும் " காதல் ஓவியம் "
கவாசாகி சுமக்கும் " வெளிநாட்டு ரம் "
சுசிகியில் போகும் " சப்த ஸ்வரங்கள் "
டை கட்டி நடக்கும் " விண்ணப்ப படிவங்கள் "
பூச்சி மருந்தை சுமந்து செல்லும் தொழிலதிபரின் பென்ஸ்
மாருதியில் மையம் கொண்ட சாப்ட்வேர் புயல்

கிளட்ச் பிடித்தலும், ப்ரேக் மிதித்தலும்
அலையும் மனதிற்க்கிடையே
அனிச்சை செயலாகிப்போனது


இந்திய சாலைகள் பலவீனமானது ,
செல்லும் வாகனங்களால் அல்ல
சுமக்கும் சோகங்களால்

Friday, November 26, 2010

நன்பேண்டா


வாங்கும் முன்

"மாப்ள உன் கையுலதாண்டா என் வாழ்க்கையே இருக்கு "
" இந்த உதவி நீ செய்யலேனா , நான் நடுத் தெருவுக்கு வந்துருவேண்டா "
" யாருட்டயாவது கடன் வாங்கியாச்சும் குடுறா "
" ஒரே வாரத்தில கொடுத்துருவேண்டா "
" எனக்கு வேற யாரையும் தெரியாதுடா "
" சத்தியமா சொன்ன தேதிக்கு முன்னாடியே தந்துருவேன் "
" தற்கொலை செய்யறதத்தவிர வேற வழியே இல்லடா "

வாங்கிய பின்

"அவன மாதிரி ஒரு பிரண்டு , சான்சே இல்ல மாப்ள "
" அருமையா பாடுறான் தெரியுமா "
" அவன பாத்தாலே எனக்கு சந்தோசமா இருக்குடா "
" என்னோட ஒரே ஆறுதல் அவன்தான் "
" எனக்குன்னு ஒருத்தன் இருக்கான்டா "

தரும் முன்

" டே மாப்ள , வண்டி ஒட்டுறேண்டா , ஒரு பத்து நிமிசத்துல கூப்பிடுறேன் "
" இல்ல மச்சான் இன்னொரு லைன்ல முக்கியமான கால் பேசிட்டு இருந்தேன் "
" மாப்ள சார்ஜு கம்மியா இருக்குடே , இப்பவே கூப்பிடுறேன் "
" 100 % நாளைக்கு தர்றேன் மாப்பள "
" வரவேண்டிய இடத்துல இருந்து வரல டா, நாளைக்கு வேற ஏதாவது பண்றேன் "
" ஆளு என்ன பாக்க வந்துகிட்டே இருக்கான் , மூணு மணிக்கெல்லாம் அக்கௌண்ட்ல போட்டுருவேன் "
"நான் அவனுக்கு தான் டயல் பண்றேன் , கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடுறேன் "
" உங்கள் அழைப்பு பார்வோர்ட் செய்ய படுகிறது "
" நீங்கள் டயல் செய்த என் தற்போது சுவிட்ச் ஆப் செய்ய பட்டுள்ளது "

தந்த பின்

" அவன் திமிரு புடிச்சவன்டா "
" பணத்திமிரு மனுசன எப்பிடியெல்லாம் மாத்துது பார் "
" மனுசங்கள சம்பாதிக்கலையே "
" பணத்தையும் சேத்தா தூக்கிட்டு போகபோறாங்க "
" அவன் சோத்துக்கு இல்லாமதான் சாவான் பாரு "
" அவன்கிட்ட காசு வாங்குனதுக்கு பதிலா நாலு பேருக்கு ......."

உப்பிற்கு சப்பாணி


வியர்க்க வியர்க்க ஓடுகிறேன் , விரட்டி விரட்டி அடிக்கிறது

வாழ்க்கை - வாழ தெரிந்தவர்களுக்கு மட்டும்

ஏமாறுகிறேன் என்று தெரியும் , இருந்தும் ஏமாறுகிறேன்
இதையாவது ஒழுங்காக செய்கிறோமே என்ற திருப்தியுடன்

பொய்யான சில வாசகங்கள் தான் என் குட்டி சந்தோசங்கள் -
"பணக்காரனுக்கு நிம்மதி இருக்காது "

அடிமைபடுத்தும் கணவனிடம்
அமைதியாய் தோழமை தேடும் பெண்
தோழனாய் வாழ்பவனை
துப்பு கேட்டவன் என்கிறாள்

குடிகார கணவனை " வீட்டில் வைத்து குடி "

என்பாய் அன்பாய்
குடியா அன்பரை உப்பிற்கு சப்பாணி என்பாய்

அடக்கு முறையாய்

அன்பை பணத்தால் வாங்க முடியாது
சரிதான் - ஆனால் பணத்தால் வளர்க்கமுடியும்

அடிமையாயிறு அல்லது அடிமைப்படுத்து -
இப்படித்தான் அமைகிறது வாழ்க்கை

Tuesday, November 23, 2010

அரசனை நம்பி புருஷனை - பௌலோ கோல்கோ வின் குட்டி கதை - 10


அது ஒரு தவளை கூட்டம் , இந்த முறை, மழையும் சரியாக இல்லை , அதனால் பெரிதாக வேலையும் இல்லை . ஆகவே தவளைகள் அனைத்தும் ஒன்று கூடியது . இந்த மாதிரி வறட்சி நேரங்களில் நாம் வேண்டிக்கொள்ள , நல்ல மழை நேரங்களில் நம் மகிழ்ச்சியை கொண்டாட நமக்கும் ஒரு கடவுள் கண் முன்னே வேண்டும் என்று ஒரு மனதாக தீர்மானத்திற்கு வந்தது தவளை கூட்டம் .

உடனே ஒரு சேர கடவுளை அழைத்து தங்களுடைய கோரிக்கைகளை அவருக்கு தெரிவித்தன . கடவுளும் இதை கேட்டு நல்ல ஒரு சந்தன மர கட்டை ஒன்றை தவளைகளுக்கு கொடுத்து , இதனை என்னை போன்று மதித்து தொழுவீராக என்றார் .
நாட்கள் நகர்ந்தன . தவளைகள் தாவின , சில நாட்களில் பக்தி போனது ,வெறும் மரக்கட்டை தானே என்று தவளைகள் அதனோடு விளையாடின . கொஞ்ச நாட்களில் மர கட்டை சலித்து விடவே ,தவளைகள் மீண்டும் கடவுளை அழைத்தன . உங்கள் வடிவமாக நங்கள் வேண்டுவது மரக்கட்டை அல்ல , எங்களை கட்டுபடுத்தும் ஒன்று அல்லது பய பக்தி தரும் ஒன்று வேண்டும் என்று தெரிவித்தன . நீண்ட யோசனைக்கு பின் கடவுள் இன்னொரு விலங்கை அனுப்பி வைத்தார் தவளைகளின் கடவுளாக .

என்ன தெரியுமா ? வேறென்ன ,தவளைகளின் இறைவன் ------பாம்பு தான் .

இழந்த பின் தான் சிலவற்றின் மதிப்பை அறிகிறோம்

Thursday, November 18, 2010

பிறந்த நாள் வாழ்த்து - அன்பு தம்பி சுப்புவுக்கு

தம்பி

அறியப்படாத விஷயங்கள் நம்மை பயமுறுத்துகிறது

அறிய ஆசையும் வருவதில்லை பதட்டத்தில்

அறிந்தால் நிம்மதி பறி போகுமோ என அஞ்சினோம்

அறிவதை விட அகம் குளிர ஒருவனை தேடுகிறோம் - அந்த

அறியாத ஒருவனை கடவுள் என்கிறோம்

அறிய முயல்கிறோம் அவனையும்

அறிவிலா கல்லை அவனாக உவந்தோம்

அறிந்தே அவனை தொழுதோம் அந்த அறியாத பயம் விலக

அறியாதவன் ஆத்திகன் பயத்தினால்

அறிந்தவன் நாத்திகன் தெளிந்ததால்

அறிவாய் என் தம்பி , அந்த

அறியாத பயம் மரணத்தை பற்றியது

அறிவாயோ மாட்டாயோ , ஆனால்

அறிந்த நீ பிறந்த தினம் குழப்பமற்றது

குழப்ப மற்றதை கொண்டாடு , குப்பிகளில் குழப்பி கொண்டாடு ,

குறைவாகக் கொல் , குறைவாகக் கொள்

குறைந்த தூக்கம் .துக்கம் நல்லது - இன்று மட்டுமாவது

அன்பு வாழ்த்துக்கள்

அர . பார்த்த சாரதி

Wednesday, November 3, 2010

மனதில் நின்றவர் 2 ஆல்பர்ட் ஐன்ஸ்டின்


" என்ன இருக்கிறது " என்பது தேடல் , "நான் நினைத்தது இருக்கிறதா ?" என்பது முட்டாள்தனம்
தவறுகளே செய்யாதவன் ஒரு முழு சோம்பேறி யாகத்தான் இருப்பான்

காலி வயிற்றுடன் அரசியல் பேசாதே

முட்டாள்களின் கிணற்றில் தான் கோபம் பொங்கும்

கல்வி என்பது நீ படித்து மறந்ததில் இருக்கும் மிச்சம்

மிக சிலரே தங்களுடைய சொந்த கண்களால் உலகை பார்க்கிறார்கள்

காதலில் விழுவதற்கு புவி ஈர்ப்பு விசை காரணமல்ல

நான் அறிவாளி அல்ல , ஆனால் செய்யும் வேலையில் அதீத ஆர்வம் மிக்கவன்

ஒரு விஷயத்தை உன்னால் எளிதாக விவரிக்கமுடியவில்லை என்றாள், உனக்கும் அந்த விஷயம் பற்றி முழுமையாக தெரியாது என்று பொருள்

கற்பனை அறிவை விட முக்கியமானது

பல புத்தகங்கள் படித்து தகவல்களை தெரிந்து வைத்திருப்பவனை அறிவாளி என்று அழைக்கலாகாது

எந்த மட்டத்தில் ஒரு பிரச்சினை உருவாக்கப்பட்டதோ , அதே மட்டத்தில் இருந்துகொண்டு உன்னால் அதை சமாளிக்கமுடியாது

ஆல்பர்ட் ஐன்ஸ்டின் , 1879 - 1955 , ஜெர்மனில் பிறந்து அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த உலக பிரசித்தி பெற்ற அணுவியல் விஞ்ஞானி . அணு சக்தி இவருடைய கண்டுபிடிப்பு