Thursday, October 28, 2010

கண் கெட்டபிறகு கார்


" என் பல வருட கனவு இன்று நிஜமாகிவிட்டது " நினைத்து நினைத்து பெருமிதம் கொண்டான் கண்ணன் . மழையில் நனைந்து மின்னிக்கொண்டிருந்த இ சி ஆர் சாலை மீது வழுக்கிக்கொண்டு சென்று கொண்டிருந்தது அந்த புத்தம் புதிய ஸ்கோடா கார் . பிடித்த ஒரு ஆங்கில பாடலை ப்ளேயரில் போட்டு விட்டுகொண்டான் ."ஷோ மீ தி மீனிங் ஆப் பீயிங் லோன்லி" அவன் உதடு உற்சாக மிகுதியில் அப்பாடலை பாடிக்கொண்டிருந்தது .இருக்கையை சற்று பின்னுக்கு தள்ளி , கொஞ்சம் சாய்வாக அமர்ந்து கொண்டு ஒரு ஸ்டைலாக ஸ்டீரிங் மீது கை வைத்து கொண்டான் . அவ்வப்போது கடக்கும் இரு சக்கர வாகனகளை பார்த்து "சிட்" என்று சொல்லிகொண்டான் . இத்தனை சந்தோசத்திற்கும் பின்னால் , முன்னாள் , இடையில் இருப்பது அவன் புதிதாய் வாங்கியிருக்கும் இந்த கார்தான் . இந்த கார் சற்று விலை உயந்த ஜாதி , வாங்கினால் இந்த காரை மட்டும்தான் வாங்குவேன் , எல்லோரையும் போல் விலை குறைவான கார் வாங்குவதில்லை என்று உறுதியுடன் இருந்தவன் கண்ணன் , இந்த நிமிடத்திற்காக எத்தனை தியாகங்கள் செய்திருப்பான் , மனைவி மகனை கூட நினைக்காமல் இரவு பகலாக உழைத்து இதோ வாங்கியாகிவிட்டது கனவு கார் .
விரல்களில் காரின் சாவியை சுற்றி கொண்டே வீட்டிற்க்குள் நுழைந்தான் , கையில் இனிப்பு பொட்டலம் , ஓடி வந்த மகனை கைகளில் அள்ளி கொண்டு மனைவியையும் அம்மாவையும் தேடினான் . உள்ளறையில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்த மனைவியை கண்டதும் மகனை கீழே இறக்கிவிட்டு , மனைவியை அலேக்காக தூக்கி கொண்டு ஒரு முறை சுற்றி இறக்கி விட்டான் , அவளின் முகத்தின் முன்னே காரின் சாவியை தொங்க விட்டு " சர்பிரைஸ்" என்றான் . மாடியில் இருந்து கீழே இறங்கிகொண்டிருந்த அவன் அம்மாவை பார்த்தது ஓடி சென்று காலை தொட்டு வணங்கினான். புரியாமல் விழித்த அம்மாவின் கண்ணை கைகளால் கட்டி கார் வரை கொண்டு சென்று கைகளை விலக்கி சிரித்து மகிழ்ந்தான் . அனைவரும் காரின் அருகில் நின்றும் உள்ளே அமர்ந்தும் சந்தோசமடைந்தனர் , அவன் மனைவி தன் பங்கிற்கு இந்த நிகழ்வுகள் அனைத்தையும் போட்டோ எடுத்துகொண்டாள்.ஒரு வழியாக அன்றைய தினம் மகிழ்ச்சியும் குதூகலமுமாக சென்றது .
அடுத்த நாள் காலை எழுந்தது முதலாகவே மகனை தேடிக்கொண்டிருந்தாள் கண்ணனின் மனைவி, மூன்று வயது பையன் , படு சுட்டி , வால் வாண்டு எங்கே சென்று விட்டானோ என்ற கலக்கம் அவள் கண்களில் தெரிந்தது . கண்ணனும் தன் பங்கிற்கு வீடு முழுதும் தேடிவிட்டு வீட்டிற்கு வெளியே கார் நிற்க வைத்த இடத்திற்கு வந்து பார்த்தபோது அவன் இருதயமே நின்றுவிடும் போல் இருந்தது . ஆம் , அவன் கனவு காரில் அந்த குட்டி வால் பையன் கல்லை கொண்டு சிராய்த்துகொண்டிருந்தான் , ஒரு கணம் , ஒரே கணம் தான் ,கையில் கிடைத்த ஏதோ ஒன்றை எடுத்து பையனை நெருங்கினான் , குட்டி பையனும் அப்பாவை பார்த்து மகிழ்ச்சியுடன் " அப்ப்பா" என்று கத்திக்கொண்டு விபரீதம் தெரியாமல் ஓடி வந்தான் , அவன் மழலை மொழியில் ஏதோ சொல்ல முனைந்து கொண்டிருந்த போதே , அவன் பிஞ்சு கையை, கையில் எடுத்து வந்த ஏதோ ஒன்றால் பட பட வென அடித்து விட்டான் , "சனியனே , உன் புத்திய காட்டிட்ட இல்ல , கார் பக்கம் போகாதன்னு நேத்தே கொஞ்சி கொஞ்சி எத்தனைதடவ சொன்னேன்,கேட்டியா " வெறி பிடித்த மாதிரி கத்தி விட்டான் , பயத்திலும் வழியிலும் குழந்தை ஒ வென்று அழ ஆரம்பித்தது , சட்டென்று அவன் மனதில் ஒரு மின்னல் வெட்டியது , கையில் என்ன வைத்திருக்கிறோம் என்று அப்போதுதான் பார்த்தான் , அது இரும்பால் செய்யப்பட ஒரு பெரிய சைஸ் ஸ்பானர் , தப்பு செய்து விட்டோமே , இதால் அடித்தால் பிஞ்சு கை என்னாகும் என்று நினைத்த மாத்திரத்தில் குழந்தையை தூக்கிக்கொண்டு அருகில் இருக்கும் மருத்துவ மனை நோக்கி ஓடினான் கண்ணன்
' சாரி சார் , இந்த கை இனி விளங்காது , உள்ள இருக்கிற எல்லா எலும்புகளும் சுக்கு நூறா ஒடஞ்சி போச்சு , எதுக்கும் சிட்டிக்குள்ள போய் டிரை பண்ணி பாருங்க " டாக்டரம்மாவின் குரல் அமிலமாய் இறங்கியது அவன் காதில் , என் மகனின் கையை நானே விளங்காமல் செய்து விட்டேனே , இந்த பாவம் எந்த அப்பனும் செய்வானா , இந்த பிஞ்சு பிள்ளை , நானே அடித்திருந்தும் என் மீதே ஆதரவாய் படுத்துக்கொண்டிருக்கிறானே , அய்யோ , கண்களில் தாரை தாரையாய் கொட்டியது அப்பனின் பாசக்கண்ணீர். இத்தனைக்கும் காரணமான இந்த காரை இப்போதே அடித்து நொறுக்குகிறேன் என்று கிளம்பினான் . கோபத்துடன் காரை நெருங்கியபோதுதான் அதை கவனித்தான் , அவன் மகன் அந்த காரில் கல்லால் கிறுக்கிய வாசகங்களை " ஐ லவ் டாடி " என்று . இந்த பிஞ்சு மனது தன் மீதுள்ள பாசத்தின் வெளிப்பாடகல்லவா கல்லால் இவ்வாறு எழுதியிருக்கிறான் என்று தெரிந்தவுடன் அவனை தீரா துயரம் வாட்ட ஆரம்பித்தது , இப்போதைக்கு அழுவதும் உணர்வதும் தவிர வேறொன்றும் அவனுக்கு ஆறுதல் அளிக்க இயலாது
முன்பெல்லாம் தங்களுடைய பாசத்தின் வெளிப்பாடாகவும் ,காதலை காட்டவுமே நகைகள் , உடைகள் , கார் போன்ற பொருட்களை பரிசளித்தனர் , இப்போது மனிதர்கள் மீதுள்ள காதல் போய் உயிரில்லா பொருட்களின் மீது காதல் வந்தது தான் வருத்தப்பட வேண்டிய விஷயம் , இதை நம்மில் உள்ள சில கண்ணன்கள் உணர வேண்டும்


No comments: