Friday, October 1, 2010

இராமேஸ்வரம் - உண்டியும் உபன்யாசமும்" பித்ரு தோசமிருக்கு , நீங்க உடனே ராமேஸ்வரம் போயிட்டு , ஒரு அய்யர புடிங்க , பண்ண வேண்டிய பூஜையெல்லாம் பண்ணிடுங்க ! இல்லேன்னா குடும்பத்துல நடக்கக்கூடாததெல்லாம் நடந்துரும் " தென்வடல்புதுத்தேருவில் நான்காம் சந்தில் ஒரு ரூம் எடுத்து தொழில் பார்க்கும் ஒரு பாரம்பரிய ஜோசியக்காரன் என் அம்மாவிடம் கூறியது . கேட்டதிலிருந்து ராமேஸ்வரம் போயி ஆகவேண்டும் என்று தொன தொனத்துக்கொண்டிருந்தால் அம்மா .
பெண் எடுத்தவர் பெண் கொடுத்தவர் என ஒரு குரூப்பாக கிளம்பினோம் . எதிர்பார்த்ததை விட மிக அழகாக இருந்தது கிழக்கு கடற்க்கரை சாலை . வேம்பார் , சாயல்குடி , ஏர்வாடி, கீழக்கரை,ராம்நாடு வழியாக வந்து சேர்ந்தோம் ராமேஸ்வரத்திற்கு.

முதல் முறை அலை இல்லா கடலை பார்க்கிறேன் . ஆர்ப்பரிக்கும் கடலை விட இந்த அமைதியான கடல் சற்று அதிகமாகவே பயம் தருகிறது .

கசாமுசா இந்தி பேசிக்கொண்டு நிறைய வடநாட்டவர்கள் காணப்பட்டனர். நான் கூட என் மனைவியிடம் வடநாட்டவர் பக்தியை மெச்சி கூறினேன் . அவளோ, பாவம் அதிகம் செய்பவர்கள்தானே இங்கு வருகிறார்கள் என்று சொல்லி யோசிக்கவைத்தாள்

பாவத்தை கழிக்க இங்கு வர வேண்டும் என்றால் , இங்கு வாழும் மக்கள் தினம் தினம் பாவம் கழிக்கலாம் போலும் .இந்த இடத்தில் இந்திய அரசிற்கு ஒரு வேண்டுகோள் , பாவம் செய்யும் குற்றவாளிகளை இங்கு அனுப்பிவையுங்கள் அல்லது பாராளுமன்றத்தை ராமேஸ்வரத்திற்கு மாற்றிவிடுங்கள்

அப்படி ஏதும் நடந்தால் அரசு கஜானாவை காலியாக்கிவிடுவார்கள் இந்த தீட்சிதர்கள் . மூன்று மணி நேர பூஜைக்கு பத்தாயிரம் ரூபாய் என்றால் பாருங்களேன் . இந்நிலையில் ஏழை பாழைகள் ராமேஸ்வரம் வந்தால் என்ன செய்வார்களோ ! அது சரி அவர்கள் பாவம்தான் அன்றன்றே கண்ணீரில் கரைந்து விடுகிறதே !

கொள்ளை அடிக்கும் இந்த தீட்சிதர்களுக்கு வருமானவரி கிடையாதா ? ஊருக்கு சென்றவுடன் ஒரு மொட்டைக்கடுதாசி எழுதி போடவேண்டும்

பல நிறங்கள்,மொழிகள் ,கலாச்சாரங்கள் என்ற வேறுபாடு இருந்தாலும் , ரமேஸ்வரக்கடலை சாக்கடை ஆக்குவதில் இந்திய ஒருமைப்பாடை பார்க்கிறேன் . இவர்கள் கரைத்த அழுக்கின் கணம் தாங்காமல் தான் , கடல் தன் அலைக்கைகளை தூக்க முடியாமல் செத்து கிடக்கிறதோ ?

மூன்று மணி நேரம் , அவர் பேசினாரா , பாடினாரா ,திட்டினாரா அல்லது எச்சில் துப்பினாரா என்று ஊகிக்கமுடியவில்லை , ஆனால் அவர் மட்டும் மந்திரம் சொல்வதாக கூறிக்கொள்கிறார் .

" 108 முறை கடலில் முங்கிட்டு வாங்கோ ! துணிகளை கரையிலே கழட்டி விட்டுடுங்கோ ,அப்புறம் தீர்த்த கிணத்து ஜலத்துல குளிச்சுண்டு ஈஸ்வரனோட பிரகாரத்த சுத்தி வந்தேள்னா , உங்களோட தோஷம் நீங்கிடும் " வாங்கும் கொள்ளை பணத்தை தாம்பாளத்தட்டில் கொடுக்கவைத்து நல்ல பணமாக மாற்ற முயற்ச்சித்தார் தீட்சிதர் . போயா போ , உனக்கும் ஒரு நாள் ஆத்தா கால் போடுவா என்று பொருமிக்கொண்டேன் எனக்குள்

உடைகளை கடலில் எரிய எத்தனித்த போது , ஒரு ஈனக்குரல் காதில் கேட்டது " அய்யா அந்த துணிகளை எனக்கு கொடுத்திருங்க , உங்களுக்கு புண்ணியமாபோகும் ".

பாவம் கழிக்குமிடத்தில் , புண்ணியத்தை பற்றி பேசிய முதல் நபர் அந்த பெண்மணிதான் !
பகவத் கீதை , திருவள்ளுவர் , விவேகானந்தர் , எம் ஜி ஆர் மற்றும் ரஜினி சொல்லியபடி , என் தாய் சொல்லை தட்ட இயலாமல் , துணிகளை கடலில் விட்டெறிந்தேன் .

ஏதாவது பணம் கொடுத்திருக்கலாம் அந்த பெண் மணிக்கு , எனக்கு புண்ணியம் தரவிரும்பும் அவளை பாவியாக்க மனதில்லாமல் நகர்ந்தேன்

" இந்த 500 ரூ பாய , உண்டியலிலே போட்டுருடா ! "என்ற அம்மாவின் குரல் அடக்கிவைத்திருந்த என் ஆத்திரத்தை வெளியேற்றியது
" பாவத்தை கழிக்க அய்யருக்கு கமிசன் கொடுத்தீங்க , புண்ணியம் வாங்க கடவுளுக்கும் கமிசனா " என்றேன் சினிமா பாணியில்

அப்போது அங்கே தவக்கோலத்தில் இருந்த ஒரு நடுத்தர வயது சாமியார் திடுக்கிட்டு கண் விழித்தார் . முதலில் கோபத்துடன் பார்த்தவர் , பின் ஒரு வசீகர புன்னகையை தவழ விட்டு என்னை அழைத்தார் .

" கலியுகத்தில் சுயநலம் பெருகிக்கொண்டே வருகிறது ! கடலில் போடும் உடைகளை கூட மற்றவருக்கு கொடுக்க மறுக்கும் நீ , எவ்வளவு காதல் கொண்டிருப்பாய் காசின் மீது !
இறைவா ! உன் மீது எனக்கிருக்கும் பக்திக்கு முன் , இந்த காசு பணம் ஒரு பொருட்டல்ல , என்று உணர்ச்சி மேலிட நீ உண்டியில் இடும் பணம் எப்படி லஞ்சமாகும் ! உன் பணத்தாசையை மாற்றி , தான தர்மங்களை செய்ய தூண்டும் சூட்சமம் தான் உண்டியில் நீ இடும் படி " என்று முடித்தார் சாமியார் .

சம்மட்டியால் அடித்தது போல் ஒரு உண்மை தெளிவாக இறங்கியது என் தலையில் !
கண் மூடியது போல் இருந்தாலும் , என்னை நோட்டமிட்டு , அட்டகாசமான ஒரு போதனையை ,கேட்பவர் அழும் வகையில் சொல்கிறார் என்றால் ,,,இன்னும் 2 -3 வருடங்களில் இவர் ஒரு ஆசிரமத்தின் பீடாதிபதி ஆவார் என்ற உண்மை எனக்கு புரிந்தது .

இவனை மறுத்து பேசி ,நேரத்தை விரயம் செய்வதை விட , பாம்பன் பாலத்தில் நின்று புகைப்படங்கள் எடுக்கலாம் என்று தோன்றியதால் குடும்ப சகிதமாக அவனிடம் ஆசி வாங்கி புறப்பட்டோம்

2 comments:

GSV said...

நான் சின்ன பையன இருந்த பொது ...எங்க வீட்டுல யாரு ஊருக்கு போயிட்டு வந்தாலும் வந்த உடனே புல் ஸ்டோரி யும் சொல்லுவாங்க அத எல்லாரும் கேட்போம்...இப்ப எல்லாம் அது இல்லாம போச்சு....நல்ல அனுபவம்.

அர. பார்த்தசாரதி said...

நன்றி ! இது ஒரு கதையாக எழுதாமல் , பயனகுறிப்பாக எழுதினேன்