Friday, October 29, 2010

சாதுவின் கோபம் - பௌலோ கோல்கோ வின் குட்டிகதை 9


கோபப்படாதவர் உலகில் வாழமுடியுமா ? முடியும் என்பதுபோல் ஒரு சாது வாழ்ந்து வந்தார். அவர் வாழும் பகுதியில் அவர் மீதொரு நல்ல மரியாதை இருந்து வந்தது , அவர் யாரையும் ,துன்புறுத்துவதில்லை யார் மீதும் எதற்கும் கோபம் கொள்வதில்லை.

இதை அறிந்த ஒரு துடுக்கான வாலிபன் அவரை சீண்டி கோபம் வரவழைக்க முடிவு செய்து அவரிடம் சென்றான் . நன்றாக யோசித்து சாதுவின் குடிலுக்குள் நுழைந்தான் .

சாது சிலருடன் பேசிகொண்டிருந்த சமயத்தில் " அய்யா , தங்கள் இந்த ஊருக்கு வந்து வேற்று மதத்தினரை கட்டாய மதமாற்றம் செய்வதாக கேள்வி " என்று அதிரடியாக பலி சுமத்தினான் . இதை

கேட்ட சாது எதுவும் பேசாமல் சிரித்த வண்ணம் அமைதியாக இருந்தார் . இதனால் எரிச்சலடைந்த வாலிபன் தகாத வார்த்தைகளால் அவரை திட்ட ஆரம்பித்தான் , ஆயினும் அவர் அமைதியாகவே இருந்தார் .

சிறிது நேரம் திட்டி களைத்த வாலிபன் " நான் இவ்வளவு திட்டியும் தங்களுக்கு கோபம் வரவில்லையா ?" என்று கேட்டான் ,

சாதுவும் இம்முறை சாந்தமாக " தம்பி , நான் செய்யாத தவறிற்கு என்னை திட்டினால் எனக்கு எப்படி கோபம் வரும் , நீ திட்டிய திட்டுகள் என்னை குறிக்கவில்லையே தம்பி " என்றார் .

இதை கேட்டு விட்டு சென்ற அந்த வாலிபன் , சாது தவறு செய்யும் வரை பொறுக்கலாம் என்று நினைத்துகொண்டான் .


சில மாதங்களுக்கு பிறகு ஊர் கட்டுபாட்டை மீறி , பசியுடனிருந்த ஒரு திருடனுக்கு சாது உணவளித்தார் . இதை தெரிந்து கொண்ட வாலிபன் ,இதுதான் தக்க சமயமென்று சாதுவிடம் சென்றான் .

இம்முறையும் மிக அருவருப்புத்தரும் வார்த்தைகளால் சாதுவை திட்டினான் , ஆனால் சாதுவோ அதே அமைதியுடனும் சாந்ததுடனும் எதுவும் பேசாமல் இருந்தார் .

கோபத்தில் " அய்யா நீர் செய்த குற்றத்திற்காக தான் இவ்வளவும் திட்டினேன் , நான் திட்டியது எல்லாம் உங்களையே சேரும் , ஆனாலும் கோபப்படாமல் அமைதியாக இருக்கிறீர்களே ஏன் " என்று கேட்டான் வாலிபன் .

" தம்பி , இம்முறை நான் குற்றம் செய்ததால் அதற்கு தண்டனையாக உன் திட்டுகளை எடுத்து கொண்டேன் , இதில் கோபப்பட என்ன இருக்கிறது , நான் தப்பு செய்ததால் தானே நீ திட்டுகிறாய் " என்றார் பணிவுடன் அந்த சாது ! இதை கெட்ட அந்த வாலிபன் என்ன சொல்வதென்றே தெரியாமல் தலை குனிந்து சென்றான் .


சில நாட்களுக்கு பின் மீண்டும் அந்த சாதுவை சந்தித்த வாலிபன் " அய்யா , கோபம் வராமலிருப்பது சாத்தியமா ? உங்களால் மட்டும் எப்படி கோபம் கொள்ளாமலிருக்க முடிகிறது ? " என்று கேட்டான்
" தம்பி , கேள் !கோபம் கொள்ளாமலிருப்பது எந்த ஒரு ஜீவ ராசியாலும் முடியாத காரியம் , இரண்டு முறை நீ என்னை பரிகசித்தபோது எனக்கு தாங்க முடியாத கோபம் வந்தது , உன் கோபத்தை நீ என்னை திட்டி வெளிக்காட்டினாய் , நானோ என கோபத்தை அமைதியாகவும் சிரித்த முகத்துடனும் காட்டி உன்னை எரிச்சலடைய செய்தேன் , கோபம் என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான் , அதை காட்டும் விதம் தான் விளைவுகளை தீர்மானிக்கிறது " என்று முடித்தார்

Thursday, October 28, 2010

கண் கெட்டபிறகு கார்


" என் பல வருட கனவு இன்று நிஜமாகிவிட்டது " நினைத்து நினைத்து பெருமிதம் கொண்டான் கண்ணன் . மழையில் நனைந்து மின்னிக்கொண்டிருந்த இ சி ஆர் சாலை மீது வழுக்கிக்கொண்டு சென்று கொண்டிருந்தது அந்த புத்தம் புதிய ஸ்கோடா கார் . பிடித்த ஒரு ஆங்கில பாடலை ப்ளேயரில் போட்டு விட்டுகொண்டான் ."ஷோ மீ தி மீனிங் ஆப் பீயிங் லோன்லி" அவன் உதடு உற்சாக மிகுதியில் அப்பாடலை பாடிக்கொண்டிருந்தது .இருக்கையை சற்று பின்னுக்கு தள்ளி , கொஞ்சம் சாய்வாக அமர்ந்து கொண்டு ஒரு ஸ்டைலாக ஸ்டீரிங் மீது கை வைத்து கொண்டான் . அவ்வப்போது கடக்கும் இரு சக்கர வாகனகளை பார்த்து "சிட்" என்று சொல்லிகொண்டான் . இத்தனை சந்தோசத்திற்கும் பின்னால் , முன்னாள் , இடையில் இருப்பது அவன் புதிதாய் வாங்கியிருக்கும் இந்த கார்தான் . இந்த கார் சற்று விலை உயந்த ஜாதி , வாங்கினால் இந்த காரை மட்டும்தான் வாங்குவேன் , எல்லோரையும் போல் விலை குறைவான கார் வாங்குவதில்லை என்று உறுதியுடன் இருந்தவன் கண்ணன் , இந்த நிமிடத்திற்காக எத்தனை தியாகங்கள் செய்திருப்பான் , மனைவி மகனை கூட நினைக்காமல் இரவு பகலாக உழைத்து இதோ வாங்கியாகிவிட்டது கனவு கார் .
விரல்களில் காரின் சாவியை சுற்றி கொண்டே வீட்டிற்க்குள் நுழைந்தான் , கையில் இனிப்பு பொட்டலம் , ஓடி வந்த மகனை கைகளில் அள்ளி கொண்டு மனைவியையும் அம்மாவையும் தேடினான் . உள்ளறையில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்த மனைவியை கண்டதும் மகனை கீழே இறக்கிவிட்டு , மனைவியை அலேக்காக தூக்கி கொண்டு ஒரு முறை சுற்றி இறக்கி விட்டான் , அவளின் முகத்தின் முன்னே காரின் சாவியை தொங்க விட்டு " சர்பிரைஸ்" என்றான் . மாடியில் இருந்து கீழே இறங்கிகொண்டிருந்த அவன் அம்மாவை பார்த்தது ஓடி சென்று காலை தொட்டு வணங்கினான். புரியாமல் விழித்த அம்மாவின் கண்ணை கைகளால் கட்டி கார் வரை கொண்டு சென்று கைகளை விலக்கி சிரித்து மகிழ்ந்தான் . அனைவரும் காரின் அருகில் நின்றும் உள்ளே அமர்ந்தும் சந்தோசமடைந்தனர் , அவன் மனைவி தன் பங்கிற்கு இந்த நிகழ்வுகள் அனைத்தையும் போட்டோ எடுத்துகொண்டாள்.ஒரு வழியாக அன்றைய தினம் மகிழ்ச்சியும் குதூகலமுமாக சென்றது .
அடுத்த நாள் காலை எழுந்தது முதலாகவே மகனை தேடிக்கொண்டிருந்தாள் கண்ணனின் மனைவி, மூன்று வயது பையன் , படு சுட்டி , வால் வாண்டு எங்கே சென்று விட்டானோ என்ற கலக்கம் அவள் கண்களில் தெரிந்தது . கண்ணனும் தன் பங்கிற்கு வீடு முழுதும் தேடிவிட்டு வீட்டிற்கு வெளியே கார் நிற்க வைத்த இடத்திற்கு வந்து பார்த்தபோது அவன் இருதயமே நின்றுவிடும் போல் இருந்தது . ஆம் , அவன் கனவு காரில் அந்த குட்டி வால் பையன் கல்லை கொண்டு சிராய்த்துகொண்டிருந்தான் , ஒரு கணம் , ஒரே கணம் தான் ,கையில் கிடைத்த ஏதோ ஒன்றை எடுத்து பையனை நெருங்கினான் , குட்டி பையனும் அப்பாவை பார்த்து மகிழ்ச்சியுடன் " அப்ப்பா" என்று கத்திக்கொண்டு விபரீதம் தெரியாமல் ஓடி வந்தான் , அவன் மழலை மொழியில் ஏதோ சொல்ல முனைந்து கொண்டிருந்த போதே , அவன் பிஞ்சு கையை, கையில் எடுத்து வந்த ஏதோ ஒன்றால் பட பட வென அடித்து விட்டான் , "சனியனே , உன் புத்திய காட்டிட்ட இல்ல , கார் பக்கம் போகாதன்னு நேத்தே கொஞ்சி கொஞ்சி எத்தனைதடவ சொன்னேன்,கேட்டியா " வெறி பிடித்த மாதிரி கத்தி விட்டான் , பயத்திலும் வழியிலும் குழந்தை ஒ வென்று அழ ஆரம்பித்தது , சட்டென்று அவன் மனதில் ஒரு மின்னல் வெட்டியது , கையில் என்ன வைத்திருக்கிறோம் என்று அப்போதுதான் பார்த்தான் , அது இரும்பால் செய்யப்பட ஒரு பெரிய சைஸ் ஸ்பானர் , தப்பு செய்து விட்டோமே , இதால் அடித்தால் பிஞ்சு கை என்னாகும் என்று நினைத்த மாத்திரத்தில் குழந்தையை தூக்கிக்கொண்டு அருகில் இருக்கும் மருத்துவ மனை நோக்கி ஓடினான் கண்ணன்
' சாரி சார் , இந்த கை இனி விளங்காது , உள்ள இருக்கிற எல்லா எலும்புகளும் சுக்கு நூறா ஒடஞ்சி போச்சு , எதுக்கும் சிட்டிக்குள்ள போய் டிரை பண்ணி பாருங்க " டாக்டரம்மாவின் குரல் அமிலமாய் இறங்கியது அவன் காதில் , என் மகனின் கையை நானே விளங்காமல் செய்து விட்டேனே , இந்த பாவம் எந்த அப்பனும் செய்வானா , இந்த பிஞ்சு பிள்ளை , நானே அடித்திருந்தும் என் மீதே ஆதரவாய் படுத்துக்கொண்டிருக்கிறானே , அய்யோ , கண்களில் தாரை தாரையாய் கொட்டியது அப்பனின் பாசக்கண்ணீர். இத்தனைக்கும் காரணமான இந்த காரை இப்போதே அடித்து நொறுக்குகிறேன் என்று கிளம்பினான் . கோபத்துடன் காரை நெருங்கியபோதுதான் அதை கவனித்தான் , அவன் மகன் அந்த காரில் கல்லால் கிறுக்கிய வாசகங்களை " ஐ லவ் டாடி " என்று . இந்த பிஞ்சு மனது தன் மீதுள்ள பாசத்தின் வெளிப்பாடகல்லவா கல்லால் இவ்வாறு எழுதியிருக்கிறான் என்று தெரிந்தவுடன் அவனை தீரா துயரம் வாட்ட ஆரம்பித்தது , இப்போதைக்கு அழுவதும் உணர்வதும் தவிர வேறொன்றும் அவனுக்கு ஆறுதல் அளிக்க இயலாது
முன்பெல்லாம் தங்களுடைய பாசத்தின் வெளிப்பாடாகவும் ,காதலை காட்டவுமே நகைகள் , உடைகள் , கார் போன்ற பொருட்களை பரிசளித்தனர் , இப்போது மனிதர்கள் மீதுள்ள காதல் போய் உயிரில்லா பொருட்களின் மீது காதல் வந்தது தான் வருத்தப்பட வேண்டிய விஷயம் , இதை நம்மில் உள்ள சில கண்ணன்கள் உணர வேண்டும்


Monday, October 25, 2010

ரோஜா - பௌலோ கோல்கோவின் குட்டிகதை - 8


ரீங்காரம் , சுகந்தம் , தென்றல் , குளிர் ஓடை இவையனைத்தும் காதலனுக்காக காத்திருந்த அந்த ரோஜாவை வைத்த கண் வாங்காமல் பார்ப்பது போல் ஒரு பிரமை தோன்றியது .
இவள் நேற்று காலையே பூத்து விட்டாள் , இன்று கூட அவன் வரவிற்காக , இதழ்களை உரித்தாள் , செவ்விதழ்களை அவிழ்த்தாள். அவனோ சோலை முழுதும் சுற்றி சுற்றி போதை தளைக்கேற இவளை மட்டும் கடந்து சென்றான் . இவளின் காதல் கணம் தங்காது , தண்டு உடைந்தது , ரோஜா தரையில் விழுந்தது .
என்னை சுற்றி கோடி வண்டுகள் சுற்றி கொண்டுதான் இருக்கின்றன , என்னை முத்தமிடும் அவனும் இதற்குள்தான் இருக்கிறான் என நினைத்த வண்டு ஆவலுடன் வானம் பார்த்தது ,மேலும் ஒரு நாள் , ஒரு இரவு கடத்தியது .

" பகலவன் வருகிறான் எழுந்திரு என் தோழி " என முகத்தில் நீர் தெளித்து போனான் பனித்துளி நண்பன்
மீண்டும் இன்று மடல் விரித்த ரோஜாவைப்பார்த்த , அவள் தோழி ஒருத்தி

" உனக்கு சோர்வாக இல்லையா தேவி ? " என்றாள்
" இல்லை , மாறாக நான் உற்சாகமாக உள்ளேன் , போராட்டத்தை தொடர்வதற்கு " என்றாள் காதலரசி
" ஏன் தேவி ?" விளக்கம் கேட்டாள் தோழி
" அவனுக்காக காத்திருப்பதை மறக்கும் பட்சத்தில் , நான் பிறந்த நாளிலேயே வாடியிருப்பேன் "

சில நாள் ரோஜா , நினைவுகளை மந்திரமாக்கி இறந்த போதும் ஜனிக்கிறது ,
பல நாள் ஜனிக்கும் மனிதா ...................................................................................

மனதில் நின்றவர் - 1 ராபர்ட் ப்ரோஸ்ட்வங்கி என்பது நல்ல சூழ்நிலையில் ஒரு குடையை கொடுத்து ,மழைக்காலத்தில் திரும்ப பிடுங்கும் நிறுவனம்

நல்ல அறிவாளி என்பவன் ,பெண்ணின் பிறந்த நாளை ஞாபகம் வைத்து கொள்பவன் வயதை அல்ல


நான் குழப்பத்தில் திரிபவன் அல்ல , ஆனால் குழப்பும் விசயங்களின் கலவை

உன் வசதிக்கேற்ப சமுதாயம் அமையும் பட்சத்தில் , அதனை சுதந்திரம் என்றழைப்பாய்

கவிதை என்பது மொழிப்பெயர்ப்பில் செத்து போவது


இரண்டு வழிகள், என் முன்னே
யாரும் செல்ல பயந்த வழியை தேர்ந்தெடுத்தேன் ,
அந்த வழிதான் இன்று என்னை உன் வரையில் கொண்டு சேர்த்துள்ளது

ராபர்ட் ப்ரோஸ்ட் , 1874 ல் அமெரிக்காவில் பிறந்த கவிஞர் . உலக புகழ் பெற்ற " தி ரோட் நாட் டெக்கன் " என்ற கவிதை தொகுப்பு இவரை புகழின் உச்சாணிக்கு கொண்டு சென்றது

Wednesday, October 20, 2010

தாழ்த்தப்பட்டவள்என்னுடன் நான் பேசிக்கொள்ள ,
நானும் நானும் மட்டுமே இருக்கும் தருணங்களை
உருவாக்கி தந்தவள் நீ ,

உனை நினைத்த போதெல்லாம் , நான் ஓடுகிறேன்
உண்மையான உந்து சக்தி நீ ,

எனை நீ தழுவிய போதெல்லாம் , அழுகையும் , கோபமும்
அழையா விருந்தாளிகள்

நீ காரணங்களின் தாய் , உள்மனம் நீ வந்ததன் காரணங்களை ஆராய்ந்து ஆராய்ந்து உன்னை மறந்து விடுகிறது

உன் வரவால் , நான் நண்பர்களாய் நினைத்த சிலர் விலகுகிறார்கள் ,
எனை நண்பனாக நினைத்தவர்கள் நெருங்குகிறார்கள்

கசப்பு இனிப்பை இனிப்பாக்கி கசந்துகொண்டிருக்கிறது .

நீயும் வெற்றியை வெற்றிபெறச்செய்ய தோல்வி அடைந்து கொண்டிருக்கிறாய்

தோல்வி எனும் தோழியே

Tuesday, October 19, 2010

ஹிட்லர் - ஈழம் - தெலுங்கானா


எந்த விதத்திலும் ஹிட்லர் செய்த கொலைகளை நியாயப்படுத்த இக்கட்டுரையை எழுதவில்லை . இரண்டு லட்ச யூதர்களை கொடூரமாக கொன்றார் ஹிட்லர் என்ற ஒரு விஷயம் தவிர நமக்கு என்ன தெரியும் . வரலாறு வெள்ளைக்காரனால் எழுதப்பட்டது , இந்தியாவின் வரலாறோ வெள்ளைக்காரன் மட்டுமல்லாது பார்ப்பானால் பார்த்து பார்த்து எழுதப்பட்டது.
ஹிடலர் யூதர்களை கொன்றான் , நல்லது, ஹிட்லர் மட்டுமே இரண்டு லட்சம் பேரை கொள்வது சாத்தியமல்ல , ஜெர்மன் மக்களும் ராணுவமும் சேர்ந்து தான் இப்பாவ காரியத்தை செய்தது , அவர்களும் மனிதர்களே , ஏன் அப்படி செய்தார்கள் , எது அவர்களை தூண்டியது , ஹிட்லர் என்பவன் சொல்ல நினைத்ததை சொன்னவன் , உண்மையான தேச பக்தியும் , நாட்டு பற்றும் கொண்டவன் , சோசலிசவாதிஎன் நாடு தரணி ஆள வேண்டும் என நினைப்பது ஒரு வகையில் பண்டைய தமிழனின் குணம்தானே

ஏன் யூதர்கள் கொல்லப்பட்டார்கள் என்று விவரிக்க நாம் முதல் உலகப்போருக்கு செல்லவேண்டும் ,ஜெர்மனியின் அணியில் இருந்துகொண்டு இங்கிலாந்தை எதிர்த்த யூதர்கள் மனதில் ஒரு காழ்ப்புணர்ச்சி இருந்தது , தம்மை துரத்தியடித்த சோவியத்தை ஆதரித்த இங்கிலாந்துக்கு ஒரு போதும் துணை போக மாட்டோம் என்று அறிவித்த யூதர்கள் , அகதிகளாகிய தம்மை ஜெர்மனி இடம் கொடுத்து ஆதரித்ததால் ஜெர்மனியின் அணியில் நிற்பதாக கூறியது , யூத வங்கிகளோ அல்லது செல்வந்தர்களோ போருக்கு ஒரு அனா காசு கூட தர முடியாது என்று முழங்கினர் . போரின் போக்கு மாறுவதை பார்த்து பாலஸ்தீனத்தை தமக்கு தரும் பட்சத்தில் அமெரிக்காவை போரில் இணைப்பது மற்றும் தமக்கு அடைக்கலம் அளித்த ஜெர்மனிக்கு எதிராக வேலை செய்வது என்ற ரகசிய ஒப்பந்தத்தை இங்கிலாந்துடன் செய்ததுதான் யூதர்களின் பார்ப்பனிய செயல் . விளைவாக அமெரிக்கா போரில் இறங்கியது , ஜெர்மனி பல லட்சம் வீரர்களை இழந்தது , வாழ வந்தவர்களை நம்பி மோசம் போனதில் நமக்கெல்லாம் முன்னோடி ஜெர்மனி , யூதர்களும் சிங்களர்களும் இந்த வகையில் ஒன்றுபடுகிறார்கள் .
ஜெர்மானியர்களும் , தமிழர்களும் இந்த வகையில் ஒரே மாதிரிதான் , தான் ஆதரித்த அகதிகளே தம்மை ஆள நினைத்த போதும் , துரோகத்தால் பல லட்ச ஜெர்மானியர் செத்த போதும் கூட அமைதி காத்தனர், ஆனால் பிழைக்க வந்த யூதர்கள் , நல்ல வருமானத்துடனும் , செல்வா செழிப்புடனும் வாழ , ஜெர்மானியர்கள் வறுமையில் வாடினர் , இன்று நடக்கும் தெலுங்கானா பிரச்சினை போல.

வந்தான் ஹிட்லர் , போராடும் குணம் கொண்ட ஹிட்லருக்கு ,அடிமை வாழ்வு அறவே பிடிக்கவில்லை , என் நாட்டிற்க்கு வந்து , எம்மை சிறுபான்மையர் ஆக்கி , எம் நாட்டையே சதி செய்து வீழ்த்திய உம்மை , உடல் புழு பிடித்து நாறும் வரை தூக்கிலிடுவேன் என்று ஆக்ரோசித்தான் .

தான் வரைந்த ஓவியங்களை தகுதியற்றது என்று அறிவித்தமயாலும், தன்னுடைய காதலி தன்னை ஏமாற்றி பணக்கார யூதனை மனம் செய்துகொண்டதாலும் , தன்னுடைய அப்பா யூதர்களின் அடிமையாக வாழ்ந்ததாலும்தான் ஹிட்லர் யூதர்களை வெறுத்ததாக வெள்ளைக்காரன் எழுதிய வரலாறு கூறினாலும் , உண்மை அதுவன்று
ஒரு பதிவர்(http://www.envazhi.com/?tag=%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D ), அவர் இட்டிருந்த ஒரு இடுகை எனக்கு வருத்தமளித்தது , ராஜபக்சே வும் ஹிட்லரும் ஒன்றா , சிறுபான்மை தமிழர்களால் வந்த அச்சுறுத்தலில் ராஜபக்சே ஹிட்லரை போன்று தமிழர்களை கொன்றாராம் , என்ன ஒரு ஒப்பீடு , யூதனும் தமிழனும் ஒன்றா ? வரலாறு தெரியவேண்டாமா , ஈழத்தை பொறுத்த வரியில் பிழைக்க வந்தது சிங்களர்களே ஒழிய தமிழர்கள் அல்லவே

நம் அனைவருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை அடிமைத்தனம் , காந்தி என்ற ஒரு சந்தர்ப்பவாதி 1918 இல் கப்பல் புரட்சியால் கிடைக்கவேண்டிய விடுதலையை , 1947 இல் தருவித்தான் , தன் சுய நலத்திற்க்காக ., ஆனால் இன்று வரை கப்பல் புரட்சி பற்றி யாரும் பேசுவதில்லை , அதை கெடுத்த காந்தியோ தேசத்தந்தை
அந்நாளிலேயே வெளிநாடு சென்று படித்த காந்தி , நேரு போன்ற பண முதலைகள் தியாகிகள்
ஆண்டாண்டு காலமாய் ஆளும் இந்த காந்தி வம்சத்தின் கதை தெரியுமா , நேருவின் புதல்வியை இங்கிலாந்து மசூதியில் வைத்து மணந்த மணாளன் பெரோஸ் கான் , கேள்விப்பட்ட கரம் சந்த காந்தி நேருவை அழைத்து கான் என்பதை காந்தி ஆக்கும்படி யோசனை கூறினார் , அதன்படி நமக்கு வரலாற்றில் கூறப்பட்ட இந்திராவின் கணவன் பெயர் பெரோஸ் காந்தி , இவர்களுக்கு பிறந்த ராஜீவ் காந்தியோ இத்தாலி பெண் மீது மோகம் கொண்டு தனது பெயரை ராபர்ட்டோ என்றும் பிறந்த பிள்ளைகளுக்கு பினாக்கா , ராவுல் என்றும் பெயர் சூட்டி மகிழந்தனர் , நாமோ பிரியங்கா , ராகுல் காந்தி என்று கூறிக்கொள்கிறோம் . இத்தகைய கேவலமானவர்களை நம்பி காலம் தள்ளும் நம்மால் எப்படி ஈழத்தமிழர்களை பற்றி சிந்திக்க இயலும். போதாக்குறைக்கு ஹிட்லரையும் ராஜபக்சேவையும் ஒப்பிட்டு நமது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் . ஹிட்லரை இகழும் எவனும் சரித்திரம் அறியாதவன் . அடிமையாக்கிய வெள்ளையரிடமே ஆட்சியை ஒப்படைக்கும் அரைவேக்காடு இந்தியரை போல் அன்றி எனக்கு துரோகம் செய்தவரின் கருவருப்பேன் என்று முழங்கியவன் ஹிட்லர்
ஹிட்லர் செய்த நல்லவற்றை அறிவோமா நாம் , இன்றும் அழியாத சாலைகளை (ஆட்டோபான் )இட்டவன் , உலகில் முதல் முறையாக விலங்கு வதை சட்டம் கொண்டு வந்தவன் , விபச்சார தடுப்பு சட்டம் கொண்டு வந்தவன் , முதியோர் ஜீவனாம்சம் வழங்கியவன் , முதல் உலகப்போரில் செத்திருந்த ஜெர்மனியை மூன்றே ஆண்டுகளில் தூக்கி நிறுத்தியவன் , வாழ்நாள் முழுதும் அசைவம் சாப்பிடாதவன் இன்னும் எத்தனையோ உள்ளன!
இன்று வளர்ந்த நாடுகளில் ஒன்றான ஜெர்மனி போல் இந்தியாவும் ஆயிருக்கலாம் , ஹிட்லர் பாணியில் வெள்ளைக்காரர்களை கொன்று குவித்திருந்தால் , நாமோ நம் சகோதரர்களையே மத அடிப்படையில் கொன்று , வெள்ளைக்காரனுக்கு சலாமடித்தே வாழ பழகிவிட்டோமே
Monday, October 18, 2010

இலவச திட்டு - பௌலோ கோல்கோவின் குட்டி கதை - 7


அவன் முரட்டுதனமானவன் , முன்கோபி , அவமதிக்கப்படும் பட்சத்தில் கொலையும் செய்ய துணிபவன் . ஆனால் அவன் அம்மா அவனை நினைத்து கவலையுற்றாள். அவனை கட்டாயப்படுத்தி ஒரு துறவியிடம் அழைத்துச்சென்றாள் , தன் மகனை பற்றி அவருக்கு விளக்கி கூறி , அவனை நல்வழி படுத்துமாறு வேண்டி கொண்டாள். சிறிது நேரம் யோசித்த துறவி , அவனை அழைத்து " தம்பி , இன்று முதல் இன்னும் ஒரு வருடம் , உன்னை அவமானப்படுத்தும் அல்லது உன்னை அசிங்கப்படுத்தும் ஒவ்வொருவருக்கும் ஒரு பத்து ரூபாய் தாளை நீ உடனே கொடுத்து விட வேண்டும் " என்று சொல்லி அனுப்பி வைத்தார் .

அவனும் அதற்க்கு சம்மதித்து தன்னை வருத்தும் ஒவ்வொருவருக்கும் ஒரு பத்து ரூபாய் தாளை கொடுத்து வந்தான் . ஒரு வருடம் ஓடியது , அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ள அந்த துறவியை சந்திக்க மீண்டும் வந்தான் அவன் .


" தம்பி , ஊருக்குள் சென்று எனக்கு சாப்பிட ஏதேனும் வாங்கி வா" என்று அவனை அனுப்பிவிட்டு , ஒரு பிச்சைக்காரன் போல் வேடமணிந்து அவனை எதிபார்த்து வழியில் நின்றார் துறவி . அவன் திரும்பி வந்த போது , அவனை திட்டியும் , பரிகாசம் செய்தும் அவமதித்தார் பிச்சைக்காரன் வேடமணிந்த துறவி . " நல்ல வேளை " முணுமுணுத்தான் அவன் " கடந்த முழு வருடமும் , காசு கொடுத்து அவமானப்பட்டேன் , இன்று முதல் அவமதிப்பும் , திட்டுக்களும் இலவசமாகவே கிடைக்கும் " பெருமூச்சுடன் கூறினான் . வேஷத்தை களைத்த துறவி " எவன் ஒருவன் தனக்கு நேரும் அவமானங்களை இலவச உந்துதலாக நினைக்கிறானோ , அவன் வெற்றி பாதையில் செல்லுகிறான் என்று பொருள் " என முடித்தார்

Saturday, October 16, 2010

தவளை மனிதன் - பௌலோ கொள்கொவின் குட்டிகதை - 6


தன் மகன் எதையுமே தெளிவாக செய்வதில்லை , எதிலும் மெத்தனம் , எந்த ஒரு விசயத்தையும் நாளை பார்க்கலாம் என்ற எண்ணம் கொண்டவனாக இருக்கிறான் , இந்த சோம்பேறித்தனம் அவனை எங்கு கொண்டு செல்லுமோ என்று குழம்பி இருந்தார் ஒரு தந்தை . மலை மேல் இருக்கும் ஒரு முதியவர் எதையும் செய்யும் வல்லமை படைத்தவர் என்று கேள்வி பட்டு, அவரை தரிசித்து வரும்படி மகனாய் அனுப்பிவைத்தார் .
மகனும் அப்பா சொல்படி முதியவரை சந்தித்தான் . முதியவரோ அவனிடம் இரண்டு தவளைகளை பிடித்து வரும்படி கட்டளை இட்டார் . அவனும் அவ்வண்ணமே இரண்டு தவளைகளை பிடித்து முதியவரிடம் கொடுத்தான் . இரண்டு தண்ணீர் குடங்களில் அந்த தவளைகளை போட்டு வைத்தார் முதியவர் .பின்னர் ஒரு குடத்தை அடுப்பில் வைத்து தீ மூட்டினார் . இப்போது அந்த இளைஞனை பார்த்து "தம்பி தண்ணீரை தொட்டு பார் " என்று வினவினார்
"தண்ணீர் மிதமான சூட்டில் உள்ளதய்யா " என்றான் அவன் ,

"தவளை என்ன செய்கிறது ?" என்று கேட்டார் .

"தவளை நீந்தி விளையாடுகிறது அய்யா " என்றான் அவன் .

சிறிது நேரம் கழித்து அதே கேள்வியை கேட்டார் பெரியவர் , அவனும் பதில் கொடுத்து கொண்டே இருந்தான் . முடிவில் தண்ணீர் கொதித்தது , தவளை செத்து மிதந்தது .

" தம்பி ! நம்மை சுற்றி நடக்கும் , நம் மீது திணிக்கப்படும் சில விஷயங்கள் பழகிபோய்விடுகிறது , எனவே இன்று நடக்கும் ஒரு பிரச்சினை உன்னை பாதிப்பதில்லை , நேற்றைய பிரச்சினையை விட கொஞ்சம் பெரியது என்று தான் நமக்கு தோன்றும் இந்த தண்ணீர் சூடாவது போல் , நீ செய்யவேண்டிய காரியங்களை தள்ளி தள்ளி போட்டால் , கொஞ்சம் வேப்பம்தானே என்று தவ்வுவதை தள்ளி போட்ட இந்த தவளை போல செத்து மிதக்க "வேண்டியிருக்கும் "என்று கூறி இன்னொரு பானையில் இருந்த தவளையை எடுத்து கொதிக்கும் நீரில் போட்டார் , அது உடனே தவ்வி ஓடி பிழைத்தது . இப்போது அந்த இளைஞனின் முகத்தில் ஒரு தெளிவு பிறந்ததை பார்க்கமுடிந்தது

ராவடி குமாரு - 1


"குரூப்பா வந்திருந்தா ஏதாவது தண்ணி கிண்ணி போட்டுட்டே போயிருக்கலாம்" உள்ளுக்குள்ள லைட்டா எச்சி ஊரத்தான் செய்யுது .
நானும் என்னோட பிரண்டும் கோவா போயிட்டு வந்திட்டுரிக்கோம் , பெல்காம் டேசன்ல வண்டிய புடிச்சோம் , செகண்ட் ஏ சி ங்க , கொஞ்ச நேரத்திலேயே கடுப்பாக ஆரம்பிச்சிருச்சி, இருபத்தி நாலு மணிநேரம் எப்பிடிரா ஓட்டுறதுன்னு யோசிச்சப்ப , சொல்லிவச்சாப்ள வேணுகோபால் ஒருத்தரு நம்ம கோச்சுக்குள்ள ஏறுனாரு .

வேணுகோபால பத்தி உங்களுக்கு ஏற்கனவே சொல்லியிருக்கேன் ,தெரியாதவங்க அத முதல்ல படிச்சுட்டு இங்க வாங்க.

பெல்காம்ல அடிக்கிற வெயிலுக்கு இருக்குறத அவுத்துபோடனும்னு தோணும் ஆனா நம்மாளு லெதர் ஜெர்கின் போட்டு , ஜீன்ஸ் டவுசரு போட்டு , காதுல ஐ போட மாட்டிட்டு வந்தாப்ல ,
பயபுள்ள வேணுகோபாலா இல்லாம யாரா இருக்கமுடியும் . நேர வந்து என் முன்னாடியே உக்காந்தாரு , சரிதான் இன்னைக்கு நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான் , நமக்கு டைம் பாஸ் ஆகும்டே ன்னு நெனைச்சுக்கிட்டேன் .

எம் பேரு குமாருங்க , பிரெண்ட்ஸ் எல்லாம் ராவடி குமாருன்னுதான் கூப்பிடுவாங்க , நமக்கு கொஞ்சம் வாய் ஜாஸ்தி,வாழ்க்கைய தள்ளிட்ருக்கவைங்க நடுவுல நான் வாழ்ற ஜாதிங்க.இப்பகூட நான் வாழறதுக்கு ரெடி ஆயிட்டேனுங்க .
நம்மாளு இப்ப ஏற இறங்க பாத்துட்டு ஏதோ ஒரு புரியாத பாட்ட முனங்கிகிட்டு இருந்தாரு , பேச வைக்குனுமே , என்ன செய்யுறது ,ம்ம் , ரைட்டு , எதாச்சும் இங்க்லீசு புக்க எடுத்தா, வேதாளம் தானா இறங்கபோகுது .நம்ம கூட வந்தவரிட்ட இருந்து ஒரு இங்கிலீசு புக வாங்கி சீரியசா படிக்க ( பாக்க ) ஆரம்பிச்சேன் . இதுக்குள்ள நம்மாளு லக்கேஜ சரி பண்ண எனக்கு முன்னாடி அவரு பின்னாடி தெரிய குனிஞ்சாறு , போட்டிருந்த செவப்பு கலரு ஜட்டி பட்டை தெரிஞ்சது , என்ன கருமண்டா சாமி . உள்ள போடுற ஐட்டத்த வெளிய காட்டுறது என்னடா பேசன்? ஆத்தா பாத்துகிட்டே இருக்கியே , இவிங்களுக்கெல்லாம் கால் போடவே மாட்டியா ?

அத விடுங்க இப்ப நம்மாளு , ஜெர்கின கழட்டி வச்சுடாப்ள, ஏ சி ல தீயா வேகும்போல ! அப்படியே நம்ம சைடு ஒரு லுக்கு விட்டாரு ,பசு வெறிக்குது ! ம்ம்ம் . நானும் ரொம்ப டீசன்டான ஆளுமாதிரி கால் மேல காலு போட்டு ஒரு புரபசனல் லுக்கு விட்டேன் . மீனு மாட்டிக்கிச்சு !


" ஹாய் , ஆம் யக்னேஷ் " னு கையை கொடுத்தாரு , நானும் " ஹல்லோ , ஆம் குமார் " கையை வாங்கிகிட்டேன் . "இட் இஸ் டூ ஹாட் நா, இந்தியன் ரயில்வே இப்பிடித்தான், ஒரு டிசிப்ளின் இருக்காது , புல்லா கரப்சன்" என்று நெனச்ச மானிக்கே சொன்னாப்ல.


"இந்த பேக் நல்ல இருக்கு , டேகுர் பிராண்டு தானா ?" ன்னு கேட்டுகிட்டே பேக்க கையில எடுத்தாரு, "இந்த டைப் பேக் எனக்கு ஸ்டேட்ஸ் ல கூட கெடைக்கல" ( அவரு ஸ்டேட்ஸ் ல இருந்தாருன்னு பீத்திக்கிராப்ள ) , நான் உடனே , "ஆக்சுவலா நான் இதை ஸ்காட்லாந்தில் வாங்கினேன்" ன்னு அவுத்துவிட்டேன், ஆளு கொஞ்சம் நிமுந்து ஒக்காந்தாரு , நாங்களும் படிச்சிருக்கொம்டே , பேசுவோம்ல , இங்கிலீஷ் இஸ் எ பண்ணி லாங்குவேஜ் , எவென் இலுத்துபேசினாலும் நல்லாத்தாம்டே இருக்கும் , இங்கிலிஷ நாலேஜ் ன்னு சொல்லி நம்மாளுகதான் அதை அறிவாக்கிட்டானுவ, தமிழு மொழியாம் , ஆங்கிலம் அறிவாம் !

" அப்புறம் , பாட்டு கேக்கிறீங்களா " ஐ போட எடுத்து கொடுத்தாரு ,
"எனக்கு பிடிச்சதெல்லாம் உங்ககிட்ட இருக்க வாய்ப்பில்ல , எனக்கு மார்டின் கோர்செசே வோட இசைன்னா ரொம்ப இஷ்டம் " அடுத்த அடி , இடி மாரில்ல இறக்குனேன் , அண்ணாச்சிக்கு புரியலைன்னாலும் , "ஆங் ! நானும் கேட்டுரிக்கேன் , மனச பிலிஞ்சிருவாரிள்ள" அப்டீன்னாரு பாருங்க , என்கூட பிரண்டு தெறிச்சு பாத்ரூம் பக்கமா ஓடிட்டாரு , சிரிப்பா அடக்கமுடியாமத்தான் , பின்ன என்ன ,நான்தான் பெரிய பேமஸ் ஹாலிவூட் சினிமா இயக்குனர் பேர , இசை அமைப்பாலர்னு டூப் விட்டா , நம்மாளு அதையும் ஜிங்கடிக்காரில்ல
" சார் , நீங்க சாப்ட்வேர்ல வொர்க் பண்றீங்களா " அடுத்த கேள்வி , வெளி நாட்டுல இருந்தேன்னு சொன்னாலே சாப்ட்வேருதானா!
"யா , ஆம் எ சாப்ட்வேர் புரபெசனல் " ன்னு போட்டு விட்டேன் , ஆனா பாருங்க நமக்கு கம்பியூட்டர்ல படம் மட்டுதானுங்க பாக்க தெரியும்
" எந்த பிளாட்பார்ம்ல இருக்கீங்க " மடக்கி கேட்டாரு, விடுவேனா , எத்தனை வேனுகோபால்களை பாத்துருக்கேன் , பேசியிருக்கேன் ,

" சொன்னா புரியுமா " இது நானு ,
" நானும் சொப்ட்வேர் தான் , சொல்லுங்க எனக்கு புரியும் " இது அவரு

" இட் இஸ் ஆண்டிரயிடு டேவலோப்மன்ட் வித் தி ஹெல்ப் ஆப் லை நக்ஸ் அண்ட் டாட் நெட் பிரேம் வொர்க் கம்பைன்ட் வித் ஜாவா " சோக்கா சொன்னேன் பாத்தீங்களா , எத்தனை வேனுகொபால்களோட பழகியிருக்கேன் , பேசியிருக்கேன் ,இதைதானடா எங்க முன்னாடி கேப் உடாம ஒப்பிக்கீறீங்க , ஒங்க பிட்ட ஒங்களுக்கே போட்டோம்ல !


பையன் அசந்துட்டாரு , நான்கூட எங்க கண்டு புடிச்சுருவானோ ன்னு கொஞ்சம் பயந்தேன் , ஆனா நம்ம டைமிங் மிஸ் ஆகல .


" சார் , நீங்க என்னவா இருக்கீங்க , எந்த கொம்பனி சார் " பவ்யமா கேட்டாரு


" நான் கன்சல்டன்ட்டா இருக்கேன்.அதனால் ஒரே நேரத்துல பல கம்பெனியில வொர்க் பண்ண முடியுது " சிரிக்காமல் சொன்னேன்


கொஞ்சம் நேரம் அமைதியா இருந்த நம்மாளு , அப்புறம் மறுபடியும் ஸ்டார்ட் பண்ணாரு " சாப்டறீங்களா , பாஸ்தா வச்சுருக்கேன் " பாஸ்தா என்ன உங்க தேசிய உணவா , எப்ப பாரு பாஸ்தா , பிட்சா ன்னு கொஞ்சமாவது திருந்துங்கடே ன்னு நெனைச்சுகிட்டேன்


" லாஸ்ட் டைம் , சுவிஸ் ல ஒரு டிஷ் சாப்பிட்டேன் , சிக்கனை நெயில போட்டு தேனுல பெரட்டி சாறு பிழிஞ்சி அத இடாலியன் பிரெட்ல போட்டு டோஸ்ட் பண்ணி கொடுத்தாங்க ,என்னா டேஸ்ட்டு ,அதக்கப்பரம் இந்த பாஸ்தா , பிட்சா எல்லாம் வெருத்துபோச்சு " ன்னு முடிச்சேன் ,

தம்பி டக்குன்னு ஒரு கேள்வி கேட்டாப்ள " அந்த டிஷ் பேரு என்ன சார் " , நானும் அதே ஸ்பீடுல "உண்ட்ராலு" ( என் பாட்டி செஞ்சு தர்ற ஒரு கிராமத்து இனிப்பு பேரு இது ) ன்னு சொன்னேன் , அதை அப்பிடியே டச் பேடு மொபைல் போன்ல போட்டு வச்சுட்டாரு, சத்தியமா அது அவருக்கு கெடைக்காது , கெடைக்காட்டலும் இது இந்தியாவுல கெடைக்காதுன்னு தான் நெனைப்பாரு.
அப்புறம் அவரு ஏன் ரயில்ல வந்தாரு , எதுக்கு ப்ளைட்ட்ல வரல , இன்னைக்கு தேதியில எவ்வளவு வைரஸ் பரவிட்டு இருக்கு , H1 NI மாறி H3N3 வைரஸ் இருக்குன்னு நாள் பூர காமடி பண்ணிட்டே வந்தோம்
இப்படியே நல்ல டைம் பாஸ் ஆச்சு , ஒரு வட்டத்த போட்டு ஒக்காந்தா இப்பிடித்தான் ஆகும் , கொஞ்சம் யோசிச்சு , பட்டணத்து மயக்கத்த தள்ளி வச்சு , எம் என் சி காரன் நம்மள எப்பிடி பகட்ட காட்டி
செம்மறியாடு ஆக்குதான்றத யோசிச்சா நாம இப்பிடி ஏமாருவமா

தம்பி அவரோட சிவி யை என்கிட்டே கொடுத்து அவருக்கு என்னோட டீம்ல வேலை தரச்சொல்லிட்டு போறாரு , என்னதான் வெளையாடுனாலும் , ஏதோ ஒரு ஓரத்துல நம்மாளுகள நெனைச்சி சின்ன வருத்தம் வரத்தான் செய்யிது

Tuesday, October 12, 2010

செங்கிஸ்கானின் பருந்து - பௌலோ கோல்கோவின் குட்டி கதை - 5


செங்கிஸ்கான் , உலகையே ஆட்டுவித்த மங்கோலிய அரசன்,மிக சிறந்த வீரன் . ஒரு முறை தன் பரிவாரங்களுடன் காட்டு வழியே சென்று கொண்டிருந்தான் . அப்போது அவனுக்கு வேட்டையாடும் ஆசை ஏற்பட்டது மேலும் வேட்டையாடியவற்றை தன் வீரர்களுக்கு உணவாக கொடுக்கலாம் என்ற எண்ணமும் ஏற்பட்டதால் , சில குதிரை வீரர்களை அழைத்துக்கொண்டு அடர்ந்த காட்டுக்குள் நுழைந்தான். வெகு நேரம் திரிந்தும் அவ்வீரர்களுக்கு எதுவுமே கிடைத்த பாடில்லை. பசியும் தாகமும் வாட்ட ஆரம்பித்தது . வெறும் கையுடன் திரும்புவதில் மன்னனுக்கு இஷ்டமில்லை . எனவே வீரர்களை திரும்ப அனுப்பிவிட்டு தான் மட்டும் காட்டுக்குள் சுற்றிகொண்டிருந்தான். நேரம் ஆக ஆக தாங்கமுடியாத தாகம் வாட்டியது . எனவே ஏதாவது நீர் நிலைகள் தென்படுகிறதா என்று தேட ஆரம்பித்தான் செங்கிஸ்கான் .
செங்கிஸ்கானை பொருத்தமட்டில் எப்போதுமே ஒரு பருந்து அவனிடம் இருந்து வந்தது . அந்த பருந்தை தன் நண்பனாகவே பாவித்து வந்தான் . பல போர்களங்களில் , திக்கு தெரியாத காடுகளில் ,இந்த பருந்து ஒரு வழிகாட்டியாக உதவி செய்து வந்தது . அதனால் சக்கரவர்த்தியின் தோளோடு இருக்கும் பாக்கியம் அந்த பறவைக்கு வாய்த்திருந்தது.
நெடுநேர தேடுதலுக்கு பிறகு , ஒரு பாறையின் இடுக்கு வழியே சிறிது சிறிதாக தண்ணீர் கசிவதை பார்த்தான் செங்கிஸ்கான் . உடனே தன் இடுப்புபையில் வைத்திருக்கும் ஒரு வெள்ளி குவளையை எடுத்து ஒழுகும் தண்ணீரை பிடித்தான் .குவளை நிறைந்தவுடன் அதை குடிப்பதற்காக கையில் ஏந்தினான் . ஐயோ பரிதாபம், ஓடி வந்த பருந்து அவன் மீது அமரும் முயற்ச்சியில் தண்ணீரை கொட்டிவிட்டது . அடக்கமுடியாத கோபம் வந்தாலும் , அடக்கிக்கொண்டு மறுபடியும் சொட்டு சொட்டாக விழும் நீரை பிடிக்க ஆரம்பித்தான் . இம்முறை அதை குடிக்க முயலும் போது மீண்டும் அந்த பருந்து அவனுடன் விளையாட ஆரம்பித்தது , முடிவில் தண்ணீர் கீழே கொட்டியது . என்னதான் இருந்தாலும் ஒரு பறவை தன்னுடைய அவசரம் தெரியாமல் விளையாடுவதா ? இதை யாரேனும் பார்க்க நேரிடில் நாடாளும் மன்னன் ஒரு பறவையை சமாளிக்கமுடியாமல் திணறுவதை கண்டு சிரிக்கமாட்டார்களா ? கோபம் தளைக்கேற வாளை உருவினான் , இம்முறை தண்ணீரை பிடித்துக்கொண்டே பருந்தை கவனித்தான் , மீண்டும் குடிக்கும் நேரத்தில் பருந்து அவனை நோக்கி வந்தது , ஒரே வெட்டில் அதை இரண்டாக பிளந்தான் ஆனாலும் தண்ணீர் குவளை கீழே விழுந்ததது. பாறை வழியே வந்து கொண்டிருந்த தண்ணீரும் நின்றுவிட்டிருந்த நிலையில் அந்த பாறையின் மீது ஏறினால் தண்ணீர் கிடைக்குமென்று நினைத்து ஏறினான் .

அய்யகோ ! என்ன விபரீதம் !இந்த சின்ன நீர்குட்டையில் செத்து மிதப்பது பயங்கர விசமுள்ள நாகமல்லவா ! இதை குடித்திருந்தால் நான் அடுத்தகணமே மரணித்திருப்பேனே ! என்னை காப்பாற்ற அல்லவோ இந்த பருந்து தன் உயிரை விட்டிருக்கிறது ,அத்தகைய நண்பனையா நான் வெட்டி கொன்றேன் ! என்றெல்லாம் அவன் மனது பதறி அழுதது !

பருந்தின் உடலை கையில் எடுத்துகொண்டான் , அதை பொன்னால் வேய்ந்து தனது சிம்மாசனத்தின் மேல் வைத்து மிக பெரிய மரியாதை கொடுத்த செங்கிஸ்கான் , அதன் இரண்டு சிறகுகளிலும் பொன்னால் எழுதிய வாசகங்கள் வருமாறு

" கோபத்தில் எடுக்கப்படும் முடிவுகள் , எக்காலத்திலும் தோல்வியை மட்டுமே தருபவை "

" என்ன குற்றம் செய்தாலும் , என்ன துரோகம் இழைத்தாலும் ,நண்பன் என ஒருவனை நினைத்தபட்சத்தில் அவன் நண்பனாகவே தொடருவான் "

Friday, October 8, 2010

ஒரு கணம்


பச்சை விளக்கிற்காக காத்திருந்த நொடிகளில்
எதையோ எண்ணி நான் தொலைத்த ஒரு கணம் .- பதற்றம்

பாடம் கேட்டுகொண்டிருந்த வகுப்பறையில்
மனம் மாயமாகிவிடும் ஒரு கணம் - பயம்

நண்பனிடம் பேசிக்கொண்டே இருக்கையில்
நான் மறந்து விட்ட ஒரு கணம் - வெட்கம்

ரயிலில் பயணிக்கையில் ,கண்கள் திறந்துகொண்டு
எதிருள்ளவரை பார்த்துக்கொண்டு நிசப்தமான ஒரு கணம் - தூக்கம்

எவ்வளவோ யோசித்தும் புலப்படவில்லை ,
தொலைந்த கண்களில் நான் என்ன யோசித்தேனென்று

ஆனால் தொலையும் கணங்கள் இன்றும் தொடருகின்றன,

தொடரும் வாழ்வில் ஒரு வெற்றிடம் போல் , மலரும் தொலையும் சுக கணங்கள்

Thursday, October 7, 2010

விட்டில் பூச்சி - 1


காதல் வங்கியில் நான் வாங்கிய கடனிற்கு
வட்டியானாய் நீ !
கந்து வட்டியானது என் கனவுகள்
--------
எரிந்த பிணம் - எரியாத எலும்புகள்
பிரிந்த நீ - பிரியாத நினைவுகள்
-------
காதல் உனக்கு தொற்றுநோய் , எனக்கு தடுப்பூசி
------

காதல் என்பது நெருப்புதான்
நான் எப்படி விட்டில் பூச்சி ஆனேன்
------------------

Friday, October 1, 2010

இராமேஸ்வரம் - உண்டியும் உபன்யாசமும்" பித்ரு தோசமிருக்கு , நீங்க உடனே ராமேஸ்வரம் போயிட்டு , ஒரு அய்யர புடிங்க , பண்ண வேண்டிய பூஜையெல்லாம் பண்ணிடுங்க ! இல்லேன்னா குடும்பத்துல நடக்கக்கூடாததெல்லாம் நடந்துரும் " தென்வடல்புதுத்தேருவில் நான்காம் சந்தில் ஒரு ரூம் எடுத்து தொழில் பார்க்கும் ஒரு பாரம்பரிய ஜோசியக்காரன் என் அம்மாவிடம் கூறியது . கேட்டதிலிருந்து ராமேஸ்வரம் போயி ஆகவேண்டும் என்று தொன தொனத்துக்கொண்டிருந்தால் அம்மா .
பெண் எடுத்தவர் பெண் கொடுத்தவர் என ஒரு குரூப்பாக கிளம்பினோம் . எதிர்பார்த்ததை விட மிக அழகாக இருந்தது கிழக்கு கடற்க்கரை சாலை . வேம்பார் , சாயல்குடி , ஏர்வாடி, கீழக்கரை,ராம்நாடு வழியாக வந்து சேர்ந்தோம் ராமேஸ்வரத்திற்கு.

முதல் முறை அலை இல்லா கடலை பார்க்கிறேன் . ஆர்ப்பரிக்கும் கடலை விட இந்த அமைதியான கடல் சற்று அதிகமாகவே பயம் தருகிறது .

கசாமுசா இந்தி பேசிக்கொண்டு நிறைய வடநாட்டவர்கள் காணப்பட்டனர். நான் கூட என் மனைவியிடம் வடநாட்டவர் பக்தியை மெச்சி கூறினேன் . அவளோ, பாவம் அதிகம் செய்பவர்கள்தானே இங்கு வருகிறார்கள் என்று சொல்லி யோசிக்கவைத்தாள்

பாவத்தை கழிக்க இங்கு வர வேண்டும் என்றால் , இங்கு வாழும் மக்கள் தினம் தினம் பாவம் கழிக்கலாம் போலும் .இந்த இடத்தில் இந்திய அரசிற்கு ஒரு வேண்டுகோள் , பாவம் செய்யும் குற்றவாளிகளை இங்கு அனுப்பிவையுங்கள் அல்லது பாராளுமன்றத்தை ராமேஸ்வரத்திற்கு மாற்றிவிடுங்கள்

அப்படி ஏதும் நடந்தால் அரசு கஜானாவை காலியாக்கிவிடுவார்கள் இந்த தீட்சிதர்கள் . மூன்று மணி நேர பூஜைக்கு பத்தாயிரம் ரூபாய் என்றால் பாருங்களேன் . இந்நிலையில் ஏழை பாழைகள் ராமேஸ்வரம் வந்தால் என்ன செய்வார்களோ ! அது சரி அவர்கள் பாவம்தான் அன்றன்றே கண்ணீரில் கரைந்து விடுகிறதே !

கொள்ளை அடிக்கும் இந்த தீட்சிதர்களுக்கு வருமானவரி கிடையாதா ? ஊருக்கு சென்றவுடன் ஒரு மொட்டைக்கடுதாசி எழுதி போடவேண்டும்

பல நிறங்கள்,மொழிகள் ,கலாச்சாரங்கள் என்ற வேறுபாடு இருந்தாலும் , ரமேஸ்வரக்கடலை சாக்கடை ஆக்குவதில் இந்திய ஒருமைப்பாடை பார்க்கிறேன் . இவர்கள் கரைத்த அழுக்கின் கணம் தாங்காமல் தான் , கடல் தன் அலைக்கைகளை தூக்க முடியாமல் செத்து கிடக்கிறதோ ?

மூன்று மணி நேரம் , அவர் பேசினாரா , பாடினாரா ,திட்டினாரா அல்லது எச்சில் துப்பினாரா என்று ஊகிக்கமுடியவில்லை , ஆனால் அவர் மட்டும் மந்திரம் சொல்வதாக கூறிக்கொள்கிறார் .

" 108 முறை கடலில் முங்கிட்டு வாங்கோ ! துணிகளை கரையிலே கழட்டி விட்டுடுங்கோ ,அப்புறம் தீர்த்த கிணத்து ஜலத்துல குளிச்சுண்டு ஈஸ்வரனோட பிரகாரத்த சுத்தி வந்தேள்னா , உங்களோட தோஷம் நீங்கிடும் " வாங்கும் கொள்ளை பணத்தை தாம்பாளத்தட்டில் கொடுக்கவைத்து நல்ல பணமாக மாற்ற முயற்ச்சித்தார் தீட்சிதர் . போயா போ , உனக்கும் ஒரு நாள் ஆத்தா கால் போடுவா என்று பொருமிக்கொண்டேன் எனக்குள்

உடைகளை கடலில் எரிய எத்தனித்த போது , ஒரு ஈனக்குரல் காதில் கேட்டது " அய்யா அந்த துணிகளை எனக்கு கொடுத்திருங்க , உங்களுக்கு புண்ணியமாபோகும் ".

பாவம் கழிக்குமிடத்தில் , புண்ணியத்தை பற்றி பேசிய முதல் நபர் அந்த பெண்மணிதான் !
பகவத் கீதை , திருவள்ளுவர் , விவேகானந்தர் , எம் ஜி ஆர் மற்றும் ரஜினி சொல்லியபடி , என் தாய் சொல்லை தட்ட இயலாமல் , துணிகளை கடலில் விட்டெறிந்தேன் .

ஏதாவது பணம் கொடுத்திருக்கலாம் அந்த பெண் மணிக்கு , எனக்கு புண்ணியம் தரவிரும்பும் அவளை பாவியாக்க மனதில்லாமல் நகர்ந்தேன்

" இந்த 500 ரூ பாய , உண்டியலிலே போட்டுருடா ! "என்ற அம்மாவின் குரல் அடக்கிவைத்திருந்த என் ஆத்திரத்தை வெளியேற்றியது
" பாவத்தை கழிக்க அய்யருக்கு கமிசன் கொடுத்தீங்க , புண்ணியம் வாங்க கடவுளுக்கும் கமிசனா " என்றேன் சினிமா பாணியில்

அப்போது அங்கே தவக்கோலத்தில் இருந்த ஒரு நடுத்தர வயது சாமியார் திடுக்கிட்டு கண் விழித்தார் . முதலில் கோபத்துடன் பார்த்தவர் , பின் ஒரு வசீகர புன்னகையை தவழ விட்டு என்னை அழைத்தார் .

" கலியுகத்தில் சுயநலம் பெருகிக்கொண்டே வருகிறது ! கடலில் போடும் உடைகளை கூட மற்றவருக்கு கொடுக்க மறுக்கும் நீ , எவ்வளவு காதல் கொண்டிருப்பாய் காசின் மீது !
இறைவா ! உன் மீது எனக்கிருக்கும் பக்திக்கு முன் , இந்த காசு பணம் ஒரு பொருட்டல்ல , என்று உணர்ச்சி மேலிட நீ உண்டியில் இடும் பணம் எப்படி லஞ்சமாகும் ! உன் பணத்தாசையை மாற்றி , தான தர்மங்களை செய்ய தூண்டும் சூட்சமம் தான் உண்டியில் நீ இடும் படி " என்று முடித்தார் சாமியார் .

சம்மட்டியால் அடித்தது போல் ஒரு உண்மை தெளிவாக இறங்கியது என் தலையில் !
கண் மூடியது போல் இருந்தாலும் , என்னை நோட்டமிட்டு , அட்டகாசமான ஒரு போதனையை ,கேட்பவர் அழும் வகையில் சொல்கிறார் என்றால் ,,,இன்னும் 2 -3 வருடங்களில் இவர் ஒரு ஆசிரமத்தின் பீடாதிபதி ஆவார் என்ற உண்மை எனக்கு புரிந்தது .

இவனை மறுத்து பேசி ,நேரத்தை விரயம் செய்வதை விட , பாம்பன் பாலத்தில் நின்று புகைப்படங்கள் எடுக்கலாம் என்று தோன்றியதால் குடும்ப சகிதமாக அவனிடம் ஆசி வாங்கி புறப்பட்டோம்