Wednesday, September 15, 2010

வீங்கியின் நாய்


கோயில் வாசலில் சின்னதொரு கூட்டம் , என்னவென்று எட்டிப்பார்த்தால் நாலு இளவட்டங்கள் வீங்கியை அடித்துக்கொண்டிருந்தனர் . நூறு சம்சாரிகள் வாழும் அழகாபுரம் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குபுறமாக பத்து வீடுகள் உண்டு . முதலில் குடிசையாக இருந்தவை , இப்போது அரசு மானியத்தில் ஓட்டு வீடுகள் வேய்ந்திருக்கின்றனர். ஊர் கழிவுகளை அகற்றுவது , சுத்தம் செய்வது , மாடுகளை குளிப்பாட்டி சாணம் அள்ளுவது சில நேரங்களில் தோட்ட வேலை அல்லது பீடி சுற்றுவது போன்ற சம்சாரிகளை ஒட்டிய வேலைகள் செய்து பிழைப்பு நடுத்துபவர்கள்.தோளில் துண்டு போட்டு நடப்பது , சைக்கிளில் ஏறி மிதிப்பது போன்றவற்றில் இருந்த தடை ஓரளவு தளர்ந்து இருந்தாலும் இன்னும் டீ கடையில் அவர்களுக்கென்று அவதாரமெடுத்த அலுமினிய டம்ளர் தான் . வீங்கி 55 வயது மதிக்கத்தக்கவர் என்று நாம் அனுமானித்துக்கொள்ள வேண்டும் ஏனென்றால் அவருக்கே அவர் வயது தெரியாது . புகையிலை , சாராயம் , கஞ்சா மற்றும் இன்ன பிறவற்றிற்கு அடிமைப்பட்டுப்போனதால் அவர்களுக்கு அடிமைத்தனம் பெரியவிசயமாக தெரியவில்லை போலும் , பத்தாவது படித்தாலே அரசு வேலை கெடைக்கும் என்றாலும் பள்ளிக்கு ஒப்புக்கு கூட எட்டிப்பார்க்காத மக்களை என்னவென்று சொல்ல. முதலாளிகளும் சம்சாரிகளும் தான் இதற்கு காரணம் என்று வைத்துக்கொண்டாலும் ஆண்டாண்டு காலமாக இவர்களும் தங்களுடைய தரத்தை உயர்த்த நினைக்க வில்லையே , இத்துனை வசதிகள் இருந்தும் பிள்ளைகளை படிக்கவைக்ககூட முடியவில்லை , போதைக்கு செலவிடும் பணத்தை கல்விக்கு பயன்படுத்தலாமே , நகரங்களில் முன்னேறிய வாழ்க்கை வாழும் தாழ்த்தப்பட்டோரோ , தங்களை மேலாக காட்டிக்கொல்வதிலும் , ஆடம்பர வாழ்க்கையிலும் லயித்துப்போனார்களே தவிர , என்றாவது கிராமங்களில் அடிமைப்பட்டு கிடக்கும் அன்பர்களை மீட்க நினைத்துக்கூட பார்ப்பதில்லையே.
கூட்டத்திற்குள்ளே நுழைந்த ஒரு இளைஞன், ஏய் அடிக்காதீகப்பா , ஏலே வீங்கி , என்ன செஞ்ச , ஏன் அடிக்காக ? என்று விசாரித்தான் நாட்டாமை தோரணையில் .
சாமி , குழந்தை கீழ விழப்போச்சு சாமி , அதான் கோயிலுக்குள்ள போயிட்டேன் , அதுக்கு அடிக்காக சாமி' என்றான் அழுதபடியே
வீங்கியின் முகம் நிஜமாகவே வீங்கி இருந்த்தது . "பிய்யல்லுற நீ எதுக்குலே கோயிலுக்குள வந்தனு சொல்லி அடிக்காக சாமி , உள்ளர இருக்கறவுக வயித்துலயும் பிய்யத்தான சுமக்காக,அப்ப அதுவும் தீட்டு தான சாமி " என்று சொல்லி முடிப்பதற்குள் மற்றொரு அடி வாயிலே விழுந்தது . கொப்புளித்த இரத்தம் வாய்க்குள் புளித்தது , அதுசரி இரத்தம் கீழ்சாதிக்காரன் வாய் என்பதால் கசக்குமா என்ன ? வீங்கி க்கு குடும்பம் என்று எதுவுமில்லை , மூன்று வருடத்திற்கு முன் விஷ சாராயம் அருந்தியதில் அவர் மனைவியும் , மகனும் போய் சேர்ந்துவிட்டனர் , வீங்கி ஒரு வாயில்லாபூச்சி, அவர் சுகம் , மகிழ்ச்சி , சோகம்,ஆறுதல் எல்லாம் அவர் வளர்க்கும் நாய்தான் . நாய்கள் விலங்குகள் இனத்தை சேர்ந்த்ததால் , அதற்க்கு இவர்கள் போல் அடிமைத்தனமாக வாழத்தெரியாது , அதிலும் வீங்கியின் நாய் சற்றே முரட்டுத்தனமானது. ஆஜானுபாகுவான உடல் அமைப்பு , புலி பற்கள் , கோபம் உமிழும் முகம் என பயமுறுத்தும் வகையிலேயே அது திரிந்து வந்தது. இதில் பல பேருக்கு கொஞ்சம் எரிச்சல் என்றாலும் , முரட்டு நாய் என்பதால் கொஞ்சம் தள்ளியே சென்றுகொண்டிருந்தனர்.
கதை பேசுவதற்கென்றே ஒவ்வொரு ஊரிலும் இந்த குட்டி பாலங்கள் கட்டுவார்கள் போலும் , இவ்வூரிலும் ஒரு பாலம் உண்டு இளவட்டங்களின் பட்டறை , பாலம் ஒரு தனி அகராதி , அதில் தேங்கியுள்ள கதைகள் கணக்கற்றவை . "ஏலே முருகா , வீங்கி நாய்க்கு வெறி பிடிச்சிருக்கம்லே , நேத்து ரெண்டு பசுமாடைகடிச்சு வைச்சு ரெண்டுக்குமே சீக்கு வந்துரிச்சாம் , பால் பீச்சுனவன் , குடிச்சவன்னு எல்லாம் ஆஸ்பத்திரிக்கு போயிருக்காயிங்க ! கெளம்புங்க வே ,இன்னிக்கு அத போட்டுறலாம் ,இல்லாட்டி அடுத்து யாரையாச்சும் கடிச்சு தொலைச்சுரும் " என்று அலறியபடியே ஓடி வந்தான் ஒருவன் . ஒரு இனம் புரியா வேகமும் வீரமும் ஒவ்வொருவரிடமும் வந்து செல்வது தெளிவாக தெரிந்தது அதிலும் முத்துவின் முகத்தில் ஒரு அதிகமான மகிழ்ச்சி காணப்படுவதில் கண்டிப்பாக நியாயம் இருக்கிறது.
முத்து ஒரு பதினாறு வயது பள்ளி செல்லும் சம்சாரி வீட்டுப்பையன் . தினமும் அவன் கலையில் எழுந்து காலைக்கடனை முடிக்க வீங்கி வீட்டைத்தாண்டி தான் செல்லவேண்டும் . வீங்கி வீட்டைத்தாண்டும்போதே அவனுக்கு தாங்கமுடியாத அளவுக்கு வெளிக்கி வரும் நாய் மீதுள்ள பயத்தின் காரணமாக . காரணம் இவன் வீட்டு வழியே சென்ற அந்த நாய் மீது சரமாரியாக கல் வைத்து அடித்திருக்கிறான் . ஏதோ ஒரு குஷியில் செய்த காரியம் இன்று அவனை இப்படி பயமுறுத்தி வைத்திருக்கிறது . இதன் காரணமாகவே , ஒவ்வொரு நாள் காலையிலும் முருகன் வீட்டிற்கு சென்று அவனை எழுப்பி விட்டு , அவன் காப்பி குடிக்கும் வரை காத்திருந்து அவனை துணைக்கு கூட்டிசெல்வான். எனவே வீங்கியின் நாய்க்கு வெறி பிடித்ததில் முத்துவுக்கு ஏக சந்தோசம் . அதை அடித்து கொன்றுவிட்டால் எவ்வளவு நிம்மதியா வெளிக்கு உக்காரலாம் .

3 மணி நேர போராட்டத்தின் முடிவில் வீங்கியின் நாய் சாய்ந்தது . இருபது இளைஞர்களுக்கு நடுவே அது இழுத்துக்கொண்டு கிடந்ததது .
நாய்கள் எப்போதுமே இப்படித்தான் , எவ்வளவு அடித்தாலும் ,பஸ்ஸே ஏறினாலும் நிறைய நேரம் இழுத்து கிடந்தது தான் சாகும் . ஒவ்வொருவரும் தத்தமது வீரத்தை பறை சாற்றி கொண்டிருந்தனர் . " காளியம்மா கோயிலுக்கு பக்கத்துல நான் விட்ட அடி தான் அது கால உடச்சது " இப்படியாக . கூட்டத்தின் நடுவே இருந்த முத்து , செத்துக்கொண்டிருந்த நாயை கவனித்தான் . அந்த நாய் இழுத்துக்கொண்டு , ஒரு வினோத சப்தம் எழுப்பிக்கொண்டு இவனையே முறைப்பது போல் தோன்றியது , நின்றிருந்த இடத்தை மாற்றி பார்த்தாலும் அந்த நாய் இவனையே ஒரு மாதிரியாக பார்ப்பது போல் தோன்றவே ஒரு இனம் புரியாத பயம் தொற்றிக்கொண்டது முத்துவுக்கு . அப்போதுதான் அலறியடித்து ஓடி வந்தார் வீங்கி தன் செல்ல மகனை பார்க்க.
" ஐயோ சாமி , மாட்டைகடிச்சது வெளியூரு நாயி , அதை நேத்திக்கே கொன்னுட்டோமே , இப்பிடி என் நாயை அடிச்சுக்கொன்னுடீகளே " என்று அழுது புலம்பினான் . அதுவரை வில்லனாக தெரிந்த நாய் , பாவமாக தெரிந்தது முத்துவுக்கு . கூட்டம் களைய ஆரம்பித்தது , வீங்கி மட்டும் நிறைய நேரம் அழுது கொண்டிருந்தான் நாயை கட்டிபிடித்துக் கொண்டு . முடிவில் அதை தோளில் போட்டுக்கொண்டு எங்கோ சென்றான் சிறிது நேரத்திற்கு முன்னால் தரையில் இழுத்து செல்லப்பட்ட நாயை.அன்று இரவு முருகனிடம் " முருகா, நாயை எரிச்சுட்டாங்க இல்ல " என்று கேட்டான் முத்து ," இல்லடா ,அதை வீங்கி பொதச்சுட்டானமில்ல , நாம வெளிக்கி போற இடத்துலதான் எங்கேயோ போதச்சிருக்கானாம் " என்று சொல்லிவிட்டு போனான் முருகன் . இப்போது முத்து மறுபடியும் முழிக்க ஆரம்பித்தான். .வெளிக்கி போற இடத்துலியா பொதச்சாயிங்க என்ற யோசனையுடன்

மறு நாள் காலை , முத்து முருகனை எழுப்பிக்கொண்டிருந்தான் வெளிக்கு போக

6 comments:

Music said...

Superb appu..Ennakku oru unnmai therianum sami.Ithula muthu yaaru? muguran yaaru???..ethukkuna ennukkum intha kadhai yerkanave nenga soninga...appa avankala patthi sollave illa...

விந்தைமனிதன் said...

நல்ல கதை... நல்ல க்ளைமாக்ஸ்.... கொஞ்சூண்டு எடிட் பண்ணினா இன்னும் நல்லாருக்கும்... அப்புறம் வியாபாரச் சிறுகதைகள் என்னாச்சு?

கே.ஆர்.பி.செந்தில் said...

மிகுந்த எதார்த்தமான முடிவுடன் .. கிராமத்து வாசனையுடன் கூடிய கதை... வீங்கி நல்ல பெயர் தேர்வு ...

பாராட்டுக்கள்..

அர. பார்த்தசாரதி said...

Thanks music,vinthaimanithan and KRP senthil for the comments.I am also a part of this story and the veengi is a real person and he lives in my village

GSV said...

ரொம்ப நாளா நல்லா கதை எழுதுறவங்க தேடிகிட்டே இருந்தேன், இப்ப கண்டுபுடிச்ச சந்தோசம். :)

அர. பார்த்தசாரதி said...

மிக்க நன்றி திரு GSV