Thursday, September 30, 2010

பௌலோ கோல்கோவின் குட்டி கதை - 4 - வண்ணத்து பூச்சி



அவன் மிகவும் இளகிய மனம் படைத்தவன் . யாருக்கும் உதவும் உள்ளம் கொண்டவன் .
அன்று வீட்டின் முற்றத்தில் மறந்து புத்தகம் படித்து கொண்டிருந்தான்
வீட்டு முன் தோட்டத்தில் உள்ள ரோஜா செடிகளை எதேச்சையாக பார்த்தபோது , ஒரு குட்டி வண்ணத்து பூச்சி அவன் கண்ணில் பட்டது . அந்த வண்ணத்து பூச்சி தனது கூட்டுப்புழு கூட்டிலிருந்து வெளி வர முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது.

இந்த சின்ன வண்ணத்து பூச்சிக்கு பறந்து வர எவ்வளவு ஆசை இருக்கும் என்று நினைத்த மாத்திரத்தில் அதற்கு உதவ நினைத்தான் . ஒரு கத்தரிகோளை எடுத்து வந்தான் , வண்ணத்து பூச்சிக்கு சுற்றி உள்ள கூட்டை ஆங்காங்கே வெட்டி விட்டான் . அவன் மனதில் ஒரு பரம ஆனந்தம் , வண்ணத்து பூச்சிக்கு விடுதலை அளித்ததற்காக !

நேரம் கடந்த்தது , ஆனால் வண்ணத்துபூச்சி வெளியே வந்த பாடில்லை ! சிறிது நேரத்தில் எறும்புகள் அதை மொற்றியது . வண்ணத்து பூச்சி இறந்து விட்டிருந்த்தது ! அவன் திகைத்து நின்றான் .

கூட்டுப்புழு கூட்டை உடைத்து வெளி வரும்போது வண்ணத்து பூச்சியின் சிறகுகளுக்கு பறப்பதற்கு தேவையான சக்தியும் சில சுரப்பிகளும் சுரக்கும் . அதற்க்கு உதவும் நோக்கத்தில் வெட்டி விடப்பட்ட கூடு , அதற்க்கு எமனாகி விட்டது !

1 . நமக்கு வரும் கஷ்டங்கள் , நம்மை வாழ்விப்பதற்காக கொடுக்கப்படும் பயிற்சி . அதனால் அதை ஏற்றுக்கொண்டு பயிலுவோம் , எனக்கு உதவ யாரும் இல்லை என்று நினைக்காதே , அந்த கஷ்டமே உனக்கு அளிக்கப்பட உதவி .

2 . பரிதாபம் கொண்டு பிச்சை இட்டு மானுட ஜாதியை கொல்லாதிர்கள் . உங்கள் உதவி இன்னொருவனை சோம்பேறி ஆக்கும் , நன்மைக்காக செய்யும் செயல் இந்த வண்ணத்து பூச்சிக்கு இழைத்த கொடுமையாகலாம் . உதவும் முன் யோசியுங்கள், உதவுவதற்கு அல்ல .

Tuesday, September 21, 2010

பௌலோ கோல்கோ வின் குட்டிகதை - 3 , ஓட்டை பானை



ஒரு வயதான முதியவர் , தன் குடும்பத்துடன் ஒரு கிராமத்து குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தார் .
தினமும் தன் குடும்ப தேவைக்காக அவர் ஊருக்கு வெளியே உள்ள குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வருவார் . அவரிடம் இரண்டு மண் பானைகள் உண்டு .இரண்டையும் ஒரு மரக்கட்டையில் இட வலமாக கட்டி தோளில் சுமந்து செல்வார் .
இதில் ஒரு பானை புதியது , நல்லா வேலைப்பாடுடன் செய்யப்பட்டது மேலும் உறுதியானது . மற்றொன்றோ மிக பழைய பானை , ஆங்காங்கே சிறு ஓட்டைகளுடன் நிறமிழந்து காணப்பட்டது .

புதிய பானையால் கிடைக்கும் தண்ணீரை விட பாதியளவே தன்னால் கொடுக்க முடிகிறது .பல வருட உழைப்பினால்தான் தன்னிடம் இத்தனை குறைகள் வந்தது , ஆயினும் தன்னால் தன் வேலையை சரிவர செய்யமுடியவில்லையே என்ற ஏக்கம் பிறந்தது
இதனால் அந்த பழைய பானைக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது .

ஒரு நாள் அந்த முதியவரிடம் , பழைய பானை விரக்தியுடன் பேச ஆரம்பித்தது
" அய்யா என்னை தயவுசெய்து மன்னியுங்கள் , பலவருட உழைப்பினால் ஏன் உடல் தேய்ந்து , என்னால் பாதி நீரைத்தான் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் தர முடிகிறது . பாதி தாகம் மட்டுமே தணிக்க உதவும் இயலாமை என்னை வேதனைப்படவைக்கிறது " என்றது பானை

இதைக்கேட்ட பெரியவர் சிரித்தார் . பின் "இன்று நாம் வீடு திரும்பும் வழியை கவனமாக பார் ! "என்று கூறிவிட்டு வீடு நோக்கி நடந்தார் பானைகளை சுமந்தபடி
பானையும் அவ்வாறே செய்தது . அதனுடைய பக்கத்தில் மட்டும் செடி கொடிகள் பூக்களுடன் தென்பட்டது

" உன்னுடைய பக்கம் மட்டும் எவ்வளவு இயற்கை வளத்துடன் அழகாக உள்ளது பார்த்தாயா ?"

"எனக்கு தெரியும் உன்னில் ஓட்டை இருக்கிறதென்று , ஆனாலும் நீ உழைக்க தயாராக இருந்ததால் உன்னை வேறு வழியில் பயன்படுத்திக்கொண்டேன் !இன்று உன்னால், நான் நடந்து சென்று வரும் களைப்பு தெரிய வில்லை ,மலர்கள் வீட்டை அலங்கரிக்கின்றன , காய்கறிகள் சமையலுக்கு உதவு கின்றன ! இவையனைத்தும் நீ தண்ணீர் ஊற்றி வளர்த்தவை தானே, நீ உன்னைப்போல் இருப்பதால்தான் இவை அனைத்தும் நடந்தது " என்றார்

எனவே நாம் உழைக்கும் உழைப்பு தேடிய பலனான பணத்தை தராவிடிலும் , நல்லா நண்பர்கள், நல்ல குடும்பம் என ஏதோ ஒரு வகையில் உதவும் , ஒன்று மட்டும் மனிதில் வைக்க " உழைப்பிற்கு ஊனமோ , முதுமையோ ஒரு அளவுகோல் ஆகாது "

Wednesday, September 15, 2010

வீங்கியின் நாய்


கோயில் வாசலில் சின்னதொரு கூட்டம் , என்னவென்று எட்டிப்பார்த்தால் நாலு இளவட்டங்கள் வீங்கியை அடித்துக்கொண்டிருந்தனர் . நூறு சம்சாரிகள் வாழும் அழகாபுரம் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குபுறமாக பத்து வீடுகள் உண்டு . முதலில் குடிசையாக இருந்தவை , இப்போது அரசு மானியத்தில் ஓட்டு வீடுகள் வேய்ந்திருக்கின்றனர். ஊர் கழிவுகளை அகற்றுவது , சுத்தம் செய்வது , மாடுகளை குளிப்பாட்டி சாணம் அள்ளுவது சில நேரங்களில் தோட்ட வேலை அல்லது பீடி சுற்றுவது போன்ற சம்சாரிகளை ஒட்டிய வேலைகள் செய்து பிழைப்பு நடுத்துபவர்கள்.தோளில் துண்டு போட்டு நடப்பது , சைக்கிளில் ஏறி மிதிப்பது போன்றவற்றில் இருந்த தடை ஓரளவு தளர்ந்து இருந்தாலும் இன்னும் டீ கடையில் அவர்களுக்கென்று அவதாரமெடுத்த அலுமினிய டம்ளர் தான் . வீங்கி 55 வயது மதிக்கத்தக்கவர் என்று நாம் அனுமானித்துக்கொள்ள வேண்டும் ஏனென்றால் அவருக்கே அவர் வயது தெரியாது . புகையிலை , சாராயம் , கஞ்சா மற்றும் இன்ன பிறவற்றிற்கு அடிமைப்பட்டுப்போனதால் அவர்களுக்கு அடிமைத்தனம் பெரியவிசயமாக தெரியவில்லை போலும் , பத்தாவது படித்தாலே அரசு வேலை கெடைக்கும் என்றாலும் பள்ளிக்கு ஒப்புக்கு கூட எட்டிப்பார்க்காத மக்களை என்னவென்று சொல்ல. முதலாளிகளும் சம்சாரிகளும் தான் இதற்கு காரணம் என்று வைத்துக்கொண்டாலும் ஆண்டாண்டு காலமாக இவர்களும் தங்களுடைய தரத்தை உயர்த்த நினைக்க வில்லையே , இத்துனை வசதிகள் இருந்தும் பிள்ளைகளை படிக்கவைக்ககூட முடியவில்லை , போதைக்கு செலவிடும் பணத்தை கல்விக்கு பயன்படுத்தலாமே , நகரங்களில் முன்னேறிய வாழ்க்கை வாழும் தாழ்த்தப்பட்டோரோ , தங்களை மேலாக காட்டிக்கொல்வதிலும் , ஆடம்பர வாழ்க்கையிலும் லயித்துப்போனார்களே தவிர , என்றாவது கிராமங்களில் அடிமைப்பட்டு கிடக்கும் அன்பர்களை மீட்க நினைத்துக்கூட பார்ப்பதில்லையே.
கூட்டத்திற்குள்ளே நுழைந்த ஒரு இளைஞன், ஏய் அடிக்காதீகப்பா , ஏலே வீங்கி , என்ன செஞ்ச , ஏன் அடிக்காக ? என்று விசாரித்தான் நாட்டாமை தோரணையில் .
சாமி , குழந்தை கீழ விழப்போச்சு சாமி , அதான் கோயிலுக்குள்ள போயிட்டேன் , அதுக்கு அடிக்காக சாமி' என்றான் அழுதபடியே
வீங்கியின் முகம் நிஜமாகவே வீங்கி இருந்த்தது . "பிய்யல்லுற நீ எதுக்குலே கோயிலுக்குள வந்தனு சொல்லி அடிக்காக சாமி , உள்ளர இருக்கறவுக வயித்துலயும் பிய்யத்தான சுமக்காக,அப்ப அதுவும் தீட்டு தான சாமி " என்று சொல்லி முடிப்பதற்குள் மற்றொரு அடி வாயிலே விழுந்தது . கொப்புளித்த இரத்தம் வாய்க்குள் புளித்தது , அதுசரி இரத்தம் கீழ்சாதிக்காரன் வாய் என்பதால் கசக்குமா என்ன ? வீங்கி க்கு குடும்பம் என்று எதுவுமில்லை , மூன்று வருடத்திற்கு முன் விஷ சாராயம் அருந்தியதில் அவர் மனைவியும் , மகனும் போய் சேர்ந்துவிட்டனர் , வீங்கி ஒரு வாயில்லாபூச்சி, அவர் சுகம் , மகிழ்ச்சி , சோகம்,ஆறுதல் எல்லாம் அவர் வளர்க்கும் நாய்தான் . நாய்கள் விலங்குகள் இனத்தை சேர்ந்த்ததால் , அதற்க்கு இவர்கள் போல் அடிமைத்தனமாக வாழத்தெரியாது , அதிலும் வீங்கியின் நாய் சற்றே முரட்டுத்தனமானது. ஆஜானுபாகுவான உடல் அமைப்பு , புலி பற்கள் , கோபம் உமிழும் முகம் என பயமுறுத்தும் வகையிலேயே அது திரிந்து வந்தது. இதில் பல பேருக்கு கொஞ்சம் எரிச்சல் என்றாலும் , முரட்டு நாய் என்பதால் கொஞ்சம் தள்ளியே சென்றுகொண்டிருந்தனர்.
கதை பேசுவதற்கென்றே ஒவ்வொரு ஊரிலும் இந்த குட்டி பாலங்கள் கட்டுவார்கள் போலும் , இவ்வூரிலும் ஒரு பாலம் உண்டு இளவட்டங்களின் பட்டறை , பாலம் ஒரு தனி அகராதி , அதில் தேங்கியுள்ள கதைகள் கணக்கற்றவை . "ஏலே முருகா , வீங்கி நாய்க்கு வெறி பிடிச்சிருக்கம்லே , நேத்து ரெண்டு பசுமாடைகடிச்சு வைச்சு ரெண்டுக்குமே சீக்கு வந்துரிச்சாம் , பால் பீச்சுனவன் , குடிச்சவன்னு எல்லாம் ஆஸ்பத்திரிக்கு போயிருக்காயிங்க ! கெளம்புங்க வே ,இன்னிக்கு அத போட்டுறலாம் ,இல்லாட்டி அடுத்து யாரையாச்சும் கடிச்சு தொலைச்சுரும் " என்று அலறியபடியே ஓடி வந்தான் ஒருவன் . ஒரு இனம் புரியா வேகமும் வீரமும் ஒவ்வொருவரிடமும் வந்து செல்வது தெளிவாக தெரிந்தது அதிலும் முத்துவின் முகத்தில் ஒரு அதிகமான மகிழ்ச்சி காணப்படுவதில் கண்டிப்பாக நியாயம் இருக்கிறது.
முத்து ஒரு பதினாறு வயது பள்ளி செல்லும் சம்சாரி வீட்டுப்பையன் . தினமும் அவன் கலையில் எழுந்து காலைக்கடனை முடிக்க வீங்கி வீட்டைத்தாண்டி தான் செல்லவேண்டும் . வீங்கி வீட்டைத்தாண்டும்போதே அவனுக்கு தாங்கமுடியாத அளவுக்கு வெளிக்கி வரும் நாய் மீதுள்ள பயத்தின் காரணமாக . காரணம் இவன் வீட்டு வழியே சென்ற அந்த நாய் மீது சரமாரியாக கல் வைத்து அடித்திருக்கிறான் . ஏதோ ஒரு குஷியில் செய்த காரியம் இன்று அவனை இப்படி பயமுறுத்தி வைத்திருக்கிறது . இதன் காரணமாகவே , ஒவ்வொரு நாள் காலையிலும் முருகன் வீட்டிற்கு சென்று அவனை எழுப்பி விட்டு , அவன் காப்பி குடிக்கும் வரை காத்திருந்து அவனை துணைக்கு கூட்டிசெல்வான். எனவே வீங்கியின் நாய்க்கு வெறி பிடித்ததில் முத்துவுக்கு ஏக சந்தோசம் . அதை அடித்து கொன்றுவிட்டால் எவ்வளவு நிம்மதியா வெளிக்கு உக்காரலாம் .

3 மணி நேர போராட்டத்தின் முடிவில் வீங்கியின் நாய் சாய்ந்தது . இருபது இளைஞர்களுக்கு நடுவே அது இழுத்துக்கொண்டு கிடந்ததது .
நாய்கள் எப்போதுமே இப்படித்தான் , எவ்வளவு அடித்தாலும் ,பஸ்ஸே ஏறினாலும் நிறைய நேரம் இழுத்து கிடந்தது தான் சாகும் . ஒவ்வொருவரும் தத்தமது வீரத்தை பறை சாற்றி கொண்டிருந்தனர் . " காளியம்மா கோயிலுக்கு பக்கத்துல நான் விட்ட அடி தான் அது கால உடச்சது " இப்படியாக . கூட்டத்தின் நடுவே இருந்த முத்து , செத்துக்கொண்டிருந்த நாயை கவனித்தான் . அந்த நாய் இழுத்துக்கொண்டு , ஒரு வினோத சப்தம் எழுப்பிக்கொண்டு இவனையே முறைப்பது போல் தோன்றியது , நின்றிருந்த இடத்தை மாற்றி பார்த்தாலும் அந்த நாய் இவனையே ஒரு மாதிரியாக பார்ப்பது போல் தோன்றவே ஒரு இனம் புரியாத பயம் தொற்றிக்கொண்டது முத்துவுக்கு . அப்போதுதான் அலறியடித்து ஓடி வந்தார் வீங்கி தன் செல்ல மகனை பார்க்க.
" ஐயோ சாமி , மாட்டைகடிச்சது வெளியூரு நாயி , அதை நேத்திக்கே கொன்னுட்டோமே , இப்பிடி என் நாயை அடிச்சுக்கொன்னுடீகளே " என்று அழுது புலம்பினான் . அதுவரை வில்லனாக தெரிந்த நாய் , பாவமாக தெரிந்தது முத்துவுக்கு . கூட்டம் களைய ஆரம்பித்தது , வீங்கி மட்டும் நிறைய நேரம் அழுது கொண்டிருந்தான் நாயை கட்டிபிடித்துக் கொண்டு . முடிவில் அதை தோளில் போட்டுக்கொண்டு எங்கோ சென்றான் சிறிது நேரத்திற்கு முன்னால் தரையில் இழுத்து செல்லப்பட்ட நாயை.அன்று இரவு முருகனிடம் " முருகா, நாயை எரிச்சுட்டாங்க இல்ல " என்று கேட்டான் முத்து ," இல்லடா ,அதை வீங்கி பொதச்சுட்டானமில்ல , நாம வெளிக்கி போற இடத்துலதான் எங்கேயோ போதச்சிருக்கானாம் " என்று சொல்லிவிட்டு போனான் முருகன் . இப்போது முத்து மறுபடியும் முழிக்க ஆரம்பித்தான். .வெளிக்கி போற இடத்துலியா பொதச்சாயிங்க என்ற யோசனையுடன்

மறு நாள் காலை , முத்து முருகனை எழுப்பிக்கொண்டிருந்தான் வெளிக்கு போக

Tuesday, September 14, 2010

குட்டி இருட்டு


கண்களை மூடியவுடன் கவ்விக்கொள்கிறது இருட்டு , எப்படி சாத்தியமாகிறது நமக்கு . கண்டபடி விமர்சனத்துக்குள்ளாகும் கடவுளே , நீ தான் இந்த வசதி செய்து கொடுத்தாயோ , இதோ என் முதல் ஒட்டு உனக்கு ,

நான் காயத்துடன் அழும்போது , இந்த ஒரு நொடி இருட்டு , நீண்டதொரு ஆறுதல்

இமைக்க பூமிக்கு 12 மணி நேரம் , எனக்கோ நொடி போதும்

சொல்லாத சோகங்களை , சொருகும் கண்களிடையே சுமக்கும் வலிமை , பயம் தரும் பகலில் கூட ,
அமைதி தரும் சின்ன இருட்டு , அவ்வப்போது இமைத்த விழிகளில்

நான் கண்களை மூடி இருட்டை ரசித்தால் , தேடி வருகிறது பெருமூச்சு , ஏக்கங்களை சுமந்து

Friday, September 10, 2010

பௌலோ கோல்கோ வின் குட்டிக்கதை - 2

இன்று பேராசிரியர் வகுப்பிற்குள் வரும்போதே ஒரு கண்ணாடி டம்ளர் எடுத்துகொண்டு வந்தார்.
பின் அதில் நீரை ஊற்றி , கையில் எடுத்து மாணவர்களை நோக்கி நீட்டினார்.
" என் கையில் என்ன உள்ளது "
அய்யா ! உங்கள் கையில் ஒரு டம்ளர் உள்ளது ! அதில் நீர் உள்ளது - என்றனர் மாணவர்கள்

சரி ! இதன் எடை எவ்வளவு இருக்கும் ? என்றார் பேராசிரியர்
ஓரிருவர் 150 கிராம் , சிலர் 250 கிராம் என்றனர்

சரி , இதன் எடையை 200 கிராம் என வைத்துக்கொள்வோம் என்றார் பேராசிரியர்

இப்போது அந்த டம்ளரை தன் உள்ளங்கையில் தாங்கி , கையை ஒரே நேராக வகுப்பறையை நோக்கி நீட்டி இருந்தார் பேராசிரியர்

நான் இன்னும் ஒரு பத்து நிமிடத்திற்கு இதை இப்படியே தாங்கி பிடித்திருந்தால் என்ன ஆகும் ? என்று கேட்டார் பேராசிரியர்

" கை வழிக்கு ஐயா " என்றான் ஒருவன் பாவமாக

சரி ! நான் இன்னும் ஒரு அரை மணி நேரத்திற்கு இதை இப்படியே தாங்கி பிடித்திருந்தால் என்ன ஆகும் ? கையை இறக்காமல்

" தங்க முடியாத அளவிற்கு , வலி இருக்கும் " என்றான் இன்னொரு மாணவன்

சரி ! நான் இன்னும் ஒரு இரண்டு மணி நேரத்திற்கு இதை இப்படியே தாங்கி பிடித்திருந்தால் என்ன ஆகும் ? என்றார் பேராசிரியர்

" கைகள் நடுங்கும் , உங்களால் அதை அவ்வளவு நேரம் தாங்கமுடியாது , வலியில் உயிரே போகும் "என்றனர் மாணவர்கள்

சரி ! ஒரு நாள் முழுக்க நான் இந்த டம்ளரை தாங்கி , கைகளை மடக்காமல் நின்றால் என்ன ஆகும் என்றார் , இதற்கு ஒரு மாணவன் சற்றே கோபத்துடன் " உங்கள் கைகளை வெட்டி எடுக்க வேண்டியிருக்கும் , இருப்பினும் எந்த ஒரு முட்டாளும் அவ்வளவு நேரம் அதை தூக்கி பிடிப்பானா என்ன ? " என்றான்

இப்போது பேராசிரியர் முகத்தில் ஒரு கீற்றாக சிறு புன்னைகை . மாணவர்களே , இன்று நான் சொல்ல விரும்பிய கருத்தும் அதுதான் , நம் வாழ்வில் ஏற்ப்படும் எந்த ஒரு பிரச்சினையையும் இந்த கண்ணாடி டம்ளர் போன்றதுதான் , அதை அப்படியே உன் மூளையில் ஏற்றி வைத்திருந்தால் , எப்படி அதனால் தாங்க முடியும் ? ஒரு நாள் முழுக்க உன் கைகள் தாங்காத போது , சில வருடங்களுக்கு ஏன் உன் மூளையை மட்டும் பிரச்சினைகளை தாங்க சொல்கிறாய் , இப்படி செய்வதால் உன் நலனை நீயே கெடுப்பது போல் ஆகாதா ? அதனால் என்னறுமை மாணவனே " உன் கையிலிருக்கும் டம்ளரை அடிக்கடி இறக்கி வை "

Wednesday, September 8, 2010

பௌலோ கோல்கோ வின் குட்டி கதை - 1

பேராசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார் , வழக்கமான வணக்கங்களை முடிந்தவுடன் ஒரு 500 ரூபாய் நோட்டை கையில் எடுத்தார் . பின் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் அடை பார்க்கும் வகையில் தூக்கி காட்டினார் .
என் கையில் இருப்பது ரூபாய் 500 தாள் . இன்று இந்த 500 ரூபாயை யாருக்காவது தருவதென முடிவு செய்துள்ளேன் என்று அறிவித்து அனைவரையும் ஒருமுறை நோட்டம் விட்டார்
சரி ! உங்களில் யாருக்கு இந்த 500 ரூபாய் தாள் வேண்டும் ? விருப்பம் உள்ளவர்கள் கையை தூக்கி காட்டுங்கள் ! என்றார்
வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் கைகளை தூக்கினர்

இப்போது , அந்த தாளை கைகளால் நன்றாக கசக்கி விட்டு மறுபடியும் கேட்டார் "இப்போது யாருக்கு வேண்டும் இந்த நோட்டு "

அனைவரின் கைகளும் உயர்ந்தது

இப்போது , அந்த தாளை முகத்திற்கு நேராக காட்டி , காரி அதன் மீது உமிழ்ந்தார் , மீண்டும் அதே கேள்வி "இப்போது யாருக்கு வேண்டும் இந்த நோட்டு "

மீண்டும் அனைவரின் கைகளும் உயர்ந்தது

இம்முறை அந்த தாளை கீழே போட்டு தன்னுடைய ஷு கால்களால் மிதித்துக்கொண்டே கேட்டார் "இப்போது யாருக்கு வேண்டும் இந்த நோட்டு "

மீண்டும் அனைவரின் கைகளும் உயர்ந்தது

பேராசிரியர் ஒரு சின்ன பேரு மூச்சுடன் பேச ஆரம்பித்தார் " மாணவர்களே ,இன்று உங்களுக்கு நான் எடுக்கும் பாடம் இதுதான் . ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மதிப்பு உண்டு . உனக்கும் ஒரு மதிப்பு உண்டு , உன்னை யார் வேண்டுமானாலும் திட்டலாம் , கிண்டல் செய்யலாம் , காரித்துப்பலாம் , காலின் கீழிட்டு மிதிக்கலாம் , ஒன்றை மட்டும் மறக்காதே , உனக்கென உள்ள மதிப்பு ஒருபோதும் குறையாது இந்த 500 ரூபாய் நோட்டு போல"

Monday, September 6, 2010

உன் பெயர் என்ன " மனிதனா " ?





செல்லமே ! என் கைகள் நடுங்குகிறது ! என் கண்களை நீ பார்க்கையில் !

என் பெயர் சொல்லி நீ அழைத்த போதெல்லாம் , அத்துணை அழகானதா என் பெயர் என்று வியந்ததுண்டு ! உன் பெயர் சொல்லி அழைக்க ஓராயிரம் முறை ஒத்திகை பார்த்து தோற்றவன் நான் .
வீட்டுத்தோட்டத்தில் தக்காளி செடிகள் நடுவே முளைத்த களைகளை அகற்றிகொண்டிருந்தேன் ,
களைகள் ! அதுவும் இறைவனின் படைப்பு தானே ! எங்கோ பிறந்து ஏதோ தின்று இங்கு எச்சமிட்டு , தானே கருவுற்று பிறந்த செடி யன்றோ ! எத்தனை போராட்டங்களுக்கு நடுவே அது முளைத்திருக்க வேண்டும்
இடம் பார்த்து பூமியில் எதுவும் பிறப்பதில்லையே ! தன் இனம் தழைக்க தோன்றிய ஒரு உயிரை , என் சுய நலத்திற்க்காக நான் எப்படி பறிப்பது ! இங்கு ஜனிப்பதற்கு கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை பறிப்பதற்கு நான் யார் ? காட்டில் முளைத்தால் ரசனைக்குரியதாகும் நீ , நீ என் தோட்டத்தில் முளைத்ததால் எப்படி களை ஆனாய் . எவ்வளவு அழகாக , சின்ன சின்ன மொட்டெடுத்து , சிரித்து அழைக்கிறது இந்த செடி ! இதனை பறித்தால் நான் கொலைகாரன் , பறிககாவிடில் பைத்தியக்காரன்
எனை கல்விக்காக பயிரிட்டபோது , முளைத்த காதல் களை நீ ! அழகாகத்தான் நீயும் துளிர்த்தாய் , சில்லென சிலிர்த்து , இரு கை இலைகளை விரித்து , ஆழமாய் வேர் விட்டு , இதழ்களில் பனித்துளி சுமந்து , அதில் படும் சின்ன ஒளி கீற்றை ஆயிரம் வண்ணத்துகள் களாய் சிதறடித்து , நெட்டி நிமிர்ந்து , சிரித்து திணற விட்டாய்
விவசாயியை நிராகரிக்கும் களை - காதல் , ஏனென்றால் காதலில் உனக்கு பிடிக்காத பட்சத்தில் நானுமொரு களை தானே
நீ கிளித்துபோட்ட பயணச்சீட்டை முகர்ந்து ரசித்த என்னை புத்தியற்றவன் என எவரும் ஏசுவதில்லை
உன்னுடன் பேசுவதை நினைத்து , என்னுடன் பேசிக்கொண்ட பொழுதுகளில் , திடீரென தொற்றிகொள்ளும் ஒரு இனம் புரியா சோகம் , சோகமும் சுகமும் காதலில் ஒன்றுதான் போலும்
இதோ ! நீ என்னோடு சேர்ந்து காலத்தை கட்டிபோட்டு விட்டாய்!
உனக்கு என்னில் பிடித்தது எதுவென அறியேன் ! அறியவும் விரும்பேன் ! அறியும் பட்சத்தில் என் காதலின் எடை அறிவது போல் அன்றோ அது
என் உள்ளங்கை தேவதையே ! நான் பேசியது உனை கவருவதரக்கல்லவே! எப்படி மறந்தாய் அவற்றை !
ஊர் பேசியது உண்மை தான் - நீ ஒழுக்கம் தவறினாய் என்று !
உனை காதலித்து மரணத்தை மன்னித்தவன் நான் ! புறம் பேசும் இம்மக்களை மன்னிக்கமாட்டேனா
ஒழுக்கம் - இவர்கள் தரும் விளக்கம் தான் என்ன ?
உடலிலேயே இருந்துவிட்டால் விசமாகும் மலத்தை வெளித்தள்ளுதல் ஒழுக்கக்கேடா
நீ மனிதன் - உன் வகை என்ன ! அறிவியல் என்ன சொல்கிறது உன்னை பற்றி , மேதைகள் எப்படி சொன்னார்கள் உன்னை பற்றி - பிறப்பில் நீ பல புனர் தேடும் பிறவி தானே - உடல் கேட்கும் பசியில் ஒன்றுதானே கலவி
யார் போட்ட முடிச்சிது - காதலும் கல்வியும் ஒருவனுடனே என்று

பொய் என நீருபிக்கபட்டதை - ஏன் கட்டி காப்பாற்றுகிறாய்!

காதலுக்கு எதிபார்ப்புகள் கிடையாதே , எதிர் பார்க்கப்படின் அது காதலே இல்லையே

சரணடை - முற்றிலும் சரணடை - காதலின் மந்திரம் உன் காதில் விழவில்லையா

உடல் சொல்லி மனம் செய்தல் தவறாகாது பெண்ணே ! மனம் சொல்லி உடல் செயதால்தான் தவறு

உன் உடல் சொல்லி செய்த செயலுக்கு , ஏனடி மனம் சொல்லி தவறிழைத்தாய்

" விடையில்லா கேள்வி ஒன்று உண்டு - இந்த பிரபஞ்சத்தில்
இந்த பெண் என்னதான் விரும்புகிறாள் " - பிராய்டு



நீ எதை விரும்பி மரணித்தாய்! நீ இழைத்த தவறென்ன - என்னை விட்டு சென்றதைத்தவிர

என் மனக்குளத்தில் நீ விட்டெறிந்தது- கல்.
சலசலப்பு ஓய்ந்து , சமநிலை அடைந்தது
ஆயினும் இன்னும் ஒரு ஓரத்தில் நீ எறிந்த கல் - காதல்

நம் மனங்கள் வாழ்கிறது - அதை வாழ்விக்க நான் வாழ்வேன் - ஒவ்வொரு நொடியும் உன்னோடு

நான் காலத்தை கட்டி போட்டவன் - எனக்களிக்கப்பட்ட பெயர் : "மன நோயாளி "
காலத்தை கழித்து வாழும் உனக்கு பெயர் என்ன ? " மனிதனா "

Friday, September 3, 2010

அவன் என் நண்பன்

அப்படித்தான் சொல்கிறான் ! அப்படித்தான் சொல்கிறேன் !

முதல் முறை பார்த்தபோதே தெரிந்து கொண்டேன் அவன் முட்டாள் என்று ! ஆனால் ,
ஒவ்வொரு முறையும் நான் தான் முட்டாளாகுகிறேன்,ஆக்குகிறான் ,

ஆயினும் அவன் என் நண்பன்

எனக்கு தெரியாத விஷயங்கள் பேசுகையில் , அவன் ஆதிக்கவாதியாவான் !
எனக்கு தெரிந்ததை பற்றி பேசுகையில் , நான் அரைவேட்காடு ஆவேன் !

ஆயினும் அவன் என் நண்பன்

ஜோசியம் பயின்றான் சுடுகாட்டில் ,
துணை இயக்குனர் ஆனான் சினிமாவில்
கோ .ப . செ என்றான் ஒரு அரசியல் கட்சியில்
இன்று வியாபாரியாம் அவன் சென்னையில்

மாறிக் கொண்டே இருப்பது அவன் இயல்பு
மாறித் தொலையாதது என்னுடன் கொண்ட நட்பு

அவன் குழப்புகையில் தெளிவாக குழம்பும் நான்
அவன் தெளிவடைய செய்கையில் குழப்பத்துடன் தெளிவாவேன்

"முட்டாளுடன் முட்டாளே சேருவர் ! " என்பதை ஆணித்தரமாக மறுக்கிறேன் ,
அவனை சுற்றி அய்யகோ அறிவாளிகளின் கூட்டம்

உயிர் போனாலும் கடன் வாங்கவே மாட்டான் !
திருப்பிகொடுத்தால்தானே வாங்கியது கடனாகும் !

எனக்கு அவன் தேவையற்ற சுமை , தேவையான தொல்லை

ஏனென்றால் ,

அவன் என் நண்பன்

கந்து வட்டி கடை - 2 ( கடன் அட்டை - கிரெடிட் கார்டு வாங்கலையோ )

கும்புடுறேனுங்கோ !
வீட்ல ரேசன் அட்டை , பால் அட்டை அல்லது போஸ்ட் அட்டை இருக்கோ இல்லையோ , கந்து வட்டி பேங்க் காரன் தார கடன் அட்டை இருக்கு சாமி
இந்தியாவுல தான் டிபால்டர் ( ஏமாத்துறவனுங்க ) அதிகம்னு எல்லா பேங்க் மக்களும் சொல்றாய்ங்க
ஆனா இங்க தான் எல்லாவனும் கடைய போடுதாணுக

சரி ! விசயத்துக்கு வருவோம்

கிரெடிட் கார்ட் வாங்குனா 3 % வட்டி மாசத்துக்கு இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்
தெரியாததது என்ன ,
ஒரு நாள் தள்ளி ரூவா கட்டுரவுகளுக்கு , 350 ரூவா அபராதம்
அய்யா நான் காட்ட வேண்டியது 2000 ரூவ்வா அதுக்கு 350 ருவ்வா அபாரதம்னா கணக்கு இடிக்குதுள்ள சாமி , அதாவது 17 .5 % வட்டி , கந்து, கந்தாத ,கந்தலாக்குற வட்டி

சரி ! அடுத்த கணக்குக்கு வருவோம் !

மாசத்துக்கு 3 % வட்டி , அப்படீன்னா வருசத்திகி 36 % வட்டி , உங்க காச எப் டி ல போட்டா அதிக பட்சம் வட்டி 10 % , பி எப் ல 12 % வட்டி ஆனா உங்ககிட்ட வசூளிக்கறது 36 % மீட்டர் வட்டி சாமி.
போன வருஷம் ஆஸ்திரேலியா போயிருந்தேனுங்க , சிட்டி பேங்க் கார்ட் வட்டி வருசத்துக்கே 2 .5 % தானுங்க. அப்ப இந்தியாவுல இருக்குறவனுக இழிச்சாவய்க் ........ திகளா

எம் என் சி பேங்க் மக்களை விடுங்க , இத ஒத்துக்கிட்ட ரிசர்வ் பேங்க் கே கூ களை என்ன சொல்ல.
ஒரு நடுத்தர வர்க்க மனுஷன் , சராசரியா 63 % வட்டி கற்றான் கிரெடிட் கார்ட் க்கு மட்டும் , சர்வே சொல்லுது சாமி
காலனி ஆதிக்கம் இல்ல சாமி , இப்போ வெள்ளைக்காரனுக கையணி , உடம்பனி, சூ.....னி ஆதிக்கம் பண்றான்
நம்மாளுக 350 ரூவ்வா தான , 3 % தான ன்னு மேலோட்டமா போறானுக
அவன் இங்க போட்ட புராஜட் , சாப்ட்வேர் எல்லாத்துக்கும் உன்கிட்ட வேற ரூட்ல அள்ளிட்டுபோறான்
ரோசிங்க சாமி ! வெள்ளக்காரன் கார்ட் க்கு 2 .5 % வட்டி உனக்கு 36 % வட்டி ,
இதில்லாம இன்சூரன்ஸ் , மெடிக்கல் , ஆண்டு பீஸ் , அண்டராயர் பீஸ் ன்னு தனி கொள்ளை வேறு
இந்த விஷயம் தெரியாம , நம்ம மருத காரவுக அருவாளத் தீட்டிகிட்டு கெடா மீசை வச்சு கஷ்டப்பட்டு 10 % வட்டி வாங்கி , கந்து வட்டீன்னு பீத்திக்கராணுக ,
போங்க சாமி போயி ரெண்டு டை கட்டி கிரெடிட் கார்ட் விக்க ஆரம்பிங்க

Thursday, September 2, 2010

கந்து வட்டி கடை - வீட்டு கடன் வாங்கலியோ !

அன்பர்களே ! வணக்கம்
பக்கத்து வீட்டுக்காரன் பெருங்களத்தூர் பக்கத்துல வீடு வாங்கிட்டார் , நாம எப்போ வாங்கறது ? என்ற கலக்கமா
அவாள் எல்லாம் வீடு கன்னி செட்டில் ஆயிட்டா ? எனக்கும் வாச்சேலே ! என்று மாமி வடாம் போடுறாகலா
செத்த சொந்த வீட்டில்தான் சாவேன் ! என்று அலைபவரா
மச்சி ! நல்ல சம்பளம் தர்றான் , இன்வேஸ்மான்ட் பண்ணனும்டா என்று அலைபாயும் சாப்ட்வேர் சங்கத்து ஆளா
நின்று , கொஞ்சம் இதை படியுங்கள்

அய்யா ஒரு பேச்சுக்கு , நான் சொல்றேன் , நீங்க 20 லச்சம் கடன் வாங்குரீகன்னு
பேங்க் காரன் சொல்றான் , வருசத்துக்கு 12 % வட்டி
அப்பா மாசத்துக்கு 1 % தான வருதுன்னு தப்புகணக்கு போடாதீக
நீங்க 20 வருஷ தவணை எடுக்குரீக சாமி , அத மறக்காதீக
அப்ப 12 % X 20 = 240 % சாமி சாமி சாமி
அதாவது 20 லச்சத்துக்கு 240 % எவ்வளவு சாமி , கொஞ்சம் ரோசிங்க
48 லட்சம் , இதுல வட்டி 28 லட்சம் சாமி
28 லச்சத்த மாசத்துக்கு பிரிச்சா ரூ 11666 வட்டி மட்டும் கட்டுவீங்க
முட்டாள் , வடிகட்ன முட்டாள் கூட கொஞ்சம் யோசிப்பாய்ங்க , நாம யோசிக்கலேனா எப்படி சாமி
சரி , எனக்கு டாக்ஸ் பெனிபிட் கேடைக்குமுள்ள ! அப்டீன்னு அப்பாவியா கேக்காத சார் வாழ்
வாடகைக்கு கேடிக்கிற டேக்ஸ் பெனிபிட்டும் , வீடு வாங்குனா வர்ற வரி தள்ளுபடியும் கிட்டத்தட்ட ஒண்ணுதான் சார் வாழ்
எப்பிடி ? ? ?
HRA tax benefit
basic salary 30000
employer HRA 12000
actually paid HRA 10000
Tax benefit amount 9000
For a Year 108000

tax benefit amount = ( employer HRA - 10% basic salary)
ஆனால் வீட்டு கடனால் உங்களுக்கு கெடைக்கிற பெனிபிட் ரொம்ப கம்மி சாமி
எப்பிடி
your taxable salary 900000
interest paid(maximum claimable) 150000
new Taxable salary 750000
Tax benefit 45000


ரூ 4500 காப்பாத்த , ரூ 11666 வட்டி கட்டுரவைங்கள என்னன்னு சொல்ல சாமி
ஒங்க பொண்டாட்டி மாருக கிட்ட இதை பக்குவமா எடுத்து சொல்லி , பொழைக்கிற வழி பாருங்க சாமி