Friday, February 1, 2013

நான்

நான் திரும்பி பார்த்த போது , என் போல் பார்த்த சிலரும் உள்ளனர் .

என் போல் திரும்பி பார்த்த சிலர் , என் போல்  இருக்க தேவையில்லை 

என் போல் இருப்பவர் எல்லோரும்  , நான் திரும்பிய இடத்தில் திரும்ப நியாயமில்லை 


நான் அழுத பொழுதுகள் தனிமை , 

நான் எனக்குள் சிரித்த பொழுதுகள் பலர் அருகிருக்க தனிமை 

என் போல் , நீ ஏன் அழவில்லை , 

அன்று மட்டும் நீ சிரித்து இருந்தால் போதும் .

ஆழ்ந்ததொரு யோசனையில் எனக்கொன்று தோன்றியது ,

நான் இது வரை உன்னில் பார்த்தது என்னைத் தான் ,

நாளை வா , நான் உன்னை உன் போல் பார்க்கிறேன் ,

மீண்டும் திரும்பி பார்த்த போது , என் போல் பலர் உள்ளனர் ,


 அனைவரிடமும் அவர்களை தேடிக் கொண்டு !

 

Sunday, July 8, 2012

விரைவில் சந்திப்போம்

நிறைய படித்தேன் , ஒரு வருடத்திற்கும் மேலாக படிப்பதில் இருந்த ஆர்வம் , எழுதுவதில் இல்லாமல் போயிற்று . இங்கும் அங்குமாக வலை பதிவுகளை மட்டும் அவ்வப்போது ரசித்துவிட்டு , புது அலுவலக வேலையில் கொஞ்சம் அதிகமாகவே லயித்துவிட்டிருந்தேன் . இப்போதுள்ள வேலையில் பல்வேறு மாநிலங்களுக்கு பயணிப்பதால் , அனுபவங்களுக்கு பஞ்சமில்லை . பகிர்ந்து கொள்வதற்கும் தயாராகிவிட்டேன் . விரைவில் சந்திப்போம்

Wednesday, March 9, 2011

ஐந்து ரூபாய் சொர்க்கம்


ராஜபாளையம் டவுன் , ஒரு பாடாவதி திரை அரங்கு , நானும் எனது ஒன்னு விட்ட தம்பி அழகரும் சினிமா பார்த்துக் கொண்டிருந்தோம் . இடைவேளை நேரம் , இரண்டு தங்க வடிகளை ( கோல்ட் பில்ட்டேர் ) சிகரெட்களை எடுத்தான் , ஒன்னு ஒனக்கு ,இன்னொன்னு யாருக்கு என்று வெகுளி தனமாக கேட்ட என்னை பார்த்து சிரித்தான் அவன் . அன்று முதல் எனக்கு ஒரு ஒன்று விட்ட குட்டி தம்பி கிடைத்தான் . நானும் எனது சிகரெட்டும் , அட அட அட , உரிமையுடன் முதல் சந்திப்பிலேயே ஏன் வாய் வழியே நுழைந்து நெஞ்சை தொட்டு கொஞ்சம் இருமலாக திகட்டினான் .

எனது பஜாஜ் கேலிபர் பைக்கை சரி செய்து , வொர்க் ஷாப்பிற்கு மூவாயிரம் ரூபாய் அழுது , இரு நூறு கிலோ மீட்டர் மலைபாதையில் மிக சிரத்தை எடுத்து ஒட்டி ,குற்றால மலைக்குமேல் உள்ள ஆரியங்காவு தாண்டி ,அம்பா நாடு எஸ்டேட் அடைந்து , அங்கு மனிதரின் கால்தடம் படாத ஒரு அருவியின் முகட்டில் ஏறி நின்றது எதற்காக ?அங்கு அமர்ந்து பனி படலத்துடன் , இயற்கை தாக்கத்துடன் , இரு விரல்களில் தீ ஏற்றி , குளிர் காற்றுடன் புகை பிடித்து , பனி காற்றுக்கு போட்டியாக வெளிவிடும் போது , அட அட அட ,அனுபவத்தால் மட்டுமே புரியும் சுகம் .

கல்லூரி வளாகத்தில் காணாக் கடி , காண்டீன் பின்புறம் மிதப்பு , ரோட்டின் எதிர் புறம் அண்ணன் கடை , மாத முதல் நாளில் சீட்டாடிக் கொண்டு , மாதக்கடைசியில் அதுவே பந்தயப் பொருளாக மாறுவது என , எனது வாழ்வின் அங்கீகரிக்கப்படாத ஒரு அங்கமாகவே வாழ்ந்தது சிகரெட்

அவளிடம் முதல் முறை தைரியமாக சென்று , "இந்த டிரெஸ் நல்லா இருக்குங்க , நீங்க போட்டதுனாலதான் நல்லா இருக்குன்னு நினைக்கிறேன் " என்று கை கால் நடுங்க , மனப் பாடம் செய்து ஒப்பித்து விட்டு வெளியே வந்தவுடன் இழுக்கும் முதல் புகை நெஞ்சுக்குள் சென்று என்னன்னவோ செய்தது , அது ஒரு வகை ஆறுதல் அல்லது தேற்றுதல் அல்லது என்னவோ , திட்டாமல் , திமிராமல் நான் இழுத்த இழுப்பிற்க்கு ஆறுதலாய் கரையும் அவள் கூட ஒரு காதலிதான்

தேர்வுக்கு முன் , பின்,குடிக்கு முன் ,நடுவே ,பின் , நண்பனைக் கண்டால் ,நட்பு முறிந்தால் , நாகரீகத்திற்கு , வேலை தேடுகையில் சோகத்திற்கு , சோகம் ,ஹ்ம்ம் , மகிழ்ச்சி மற்றும் சோகம் இரண்டும் அளவு மீறும் போது கண்ணீர் மட்டுமே வரும் என்றிருந்தேன் , இப்போது இன்னொன்றும் வருகிறது ,சிகரெட்

இப்படியாக வாழ்ந்து வந்துகொண்டிருந்த எனது வாழ்க்கை எனும் குட்டி சுவற்றினில் , குட்டி சுவரென்றால் ஏன் தவறாக நினைக்கிறீர்கள் , பெரிய சுவர் போல் குட்டி சுவர் என்று எண்ணுங்கள் , ஒண்ணுக்கு போகும் நாய் குட்டி சுவர் , பெரிய சுவர் என்று பார்த்துக்கொண்டா பெய்கிறது . சரி, குட்டி சுவற்றினில் கொடி முல்லை படரச் செய்ய விருப்பதாக கை பேசி தகவல் சொன்னது , கல்யாண சேதி என்பதைத்தான் அப்படி உவமேய மாக சொல்ல நினைத்தேன் . அன்று கூட எனக்கு தோண வில்லை , ஆனால் அந்த கல்யாண சேதிக்காக அடுத்தநாள் நான் கொடுத்த டிரீட் , அதில் கலந்து கொண்ட கல்யாண சித்தர்கள் , அவர்களின் இயலாமை அறிவுரையாக படமெடுத்து ஆடியது என்னை கொஞ்சம் சிந்திக்க வைத்தது."நம்ம பசங்கள்லையே நீதான் நெறைய தம் மடிப்ப , உன்ன விட ஒண்ணு ரெண்டு கம்மியா அடிச்ச முத்தண்ணாவுக்கே இன்னும் குழைந்த கெடையாது , உனக்கு என்ன ஆகும்ன்னு தெரியலையேடா மச்சான் " என்ற நண்பனை பார்த்து உனக்கு பொறந்ததோட அப்பா யாரு என்று கேட்கலாம் போல் இருந்தது ."அதில்ல மச்சான் , நீ வேணுன்னா நெட்ல பாரேன் , தம்மு நெறையா அடிச்சா , எந்திரிக்காதுன்னு போட்ருக்கான் " என்றான் இன்னொருவன் ,இதற்காக அவர்கள் முன்னிலையில் செயல்முறை விளக்கமாக பேன்ட் ஜிப்பை அவிழ்த்து .......... முடியாததால் , அமுக்கி கொண்டு கேட்டு கொண்டேன்

பின்னொருநாள் வருங்கால மனைவியிடம் இரவு நெடு நேரம் பேசி களைப்புற்ற நேரத்தில் , ஏன் இந்த சிகரெட்டை விட்டு விடக் கூடாது என்ற நினைப்பை புகையாய் கரைத்தேன் , ஆனால் புகைந்தது உண்மைதான் . கல்யாணத்திற்கு ஒரு மாதம் முன் விட்டு விடலாம் என்று நினைத்து , லாஸ்ட் பப் , பிபோர் பஸ்ட் கிஸ் என்ற வசனத்தை அனுபவிக்க தொடர்ந்தது சிகரெட்

இப்போது மனைவிக்கு தெரியாமல் சிகரெட் பிடிப்பது எப்படி என்ற புத்தகம் எழுதுமளவிற்கு தயாரகிவிட்டிருந்தேன் . இதுவும் ஒரு வித சுகம் தான் .ஆனாலும் சிகரெட் பிடிப்பதை விட வேண்டும் என்ற எண்ணம் ஒரு ஓரத்தில் இருக்கத்தான் செய்தது .திருப்பதி வெங்கடா சலபதி ஆலயத்தில் ஒரு பத்து மணி நேர காத்திருப்பில் சிறு நம்பிக்கை துளிர்த்தது , சிகரெட் பிடிக்காமல் என்னால் பத்து மணி நேரம் இருக்கமுடியும் , உணர்ச்சி வேகத்தில் எழுமலையான் மீது ஆணையிட்டு மலை இறங்கியவுடன் அதை மீறிவிட்டு , எழுமலையான் கோபத்தில் ஏதாவது கேன்சர் போல கொடுத்து விடுவாரோ என்ற பயத்துடன் சில நாள் அலைந்து கொண்டிருந்தேன்

நண்பர்களுடன் அதிரப்பள்ளி அருவிக்கு சென்ற போது இன்னுமொரு உண்மை விளங்கியது , இறங்கும்போது இருந்த வேகம் விறுவிறுப்பு அருவியை பார்த்துவிட்டு ஏறும்போது இல்லை , மாறாக களைப்பு , இளைக்கும் நுரையீரல் என ஒரு நோயாளியாகவே உணர்ந்தேன் ,இதே போல்தான் கிரிகெட் விளையாடிய போது கூட தோன்றியது , அருவி முன் நின்று புகை பிடிக்கும் சுகம் ஒரு பக்கம் என்றால் அதனால் உருவாகும் ரோகங்கள் கொஞ்சம் மனதை பிசயத்தான் செய்தது

விட்டு விடலாம் என்று முடிவு செய்து மூன்று மணிநேரம் ஆயிற்று , நண்பனிடம் சொன்னேன் ," சூப்பர் மச்சான் , நல்ல முடிவு ,ஆனா டக்குன்னு விட்றாத ,அதனால உன்னோட பி பி எகுற வாய்ப்பு இருக்கு , கொஞ்சம் கொஞ்சமா விடு , இன்னைக்கு பத்துன்னா , நாளைக்கு எட்டு ,அடுத்தவாரம் அஞ்சு " என்று சொன்ன அந்த வார்த்தைகளை நம்பி நானும் முயற்சித்தேன் , நாளை அஞ்சாகி ,நாளை மறுநாள் பதினஞ்சாகிவிட்டது.இவர்கள் சொல்வது போல் கொஞ்சம் கொஞ்சமாய் விடுவது என்பது முடியாத ,இயலாத ஒரு காரியம் என்பது நன்றாகவே புரிந்தது .என்ன செய்கிறாய் நண்பா ? நீ புகை பிடிப்பதை விட நினைத்தால் இதற்கு முன் புகை பிடித்து பின் அதை நிருத்தியவனைக் கேள் , அதை விட்டு விட்டு கண்டவனை கேட்டால் எப்படி சொல்வார்கள் ,முன்ன பின்ன செத்திருந்தால் தானே சுடுகாடு பற்றி தெரிந்திருக்கும் , மன்னிக்கவும் , எனது எரிச்சல் அப்படி ,அதனால் தான் பொருந்தாத ஒரு உவமை சொல்ல வேண்டியதாயிற்று , சிகரெட்டை விட முயற்சித்து பாருங்கள் ,அப்போது தெரியும் எவ்வளவு மன உளைச்சலுக்கு உள்ளாவீர்கள் என்று . இங்கு ஒன்று சொல்ல ஆசைப் படுகிறேன் ,தயவு செய்து அறிவுரை சொல்லும் முன் கொஞ்சம் யோசியுங்கள் , நீங்கள் சிகரெட் பிடிப்பவராக இருந்தால் கூட பரவாயில்லை ,அதை தொட்டு கூட பார்க்காமல் ,விட்டு விடு என்று சொல்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது . அவ அவனுக்கு வந்தால்தான் தெரியும் வாந்தியும் பேதியும் , மறுபடியும் ஏதோ ஒரு உதவாக்கரை உவமை சொல்ல வைத்து விட்டீர்கள் . அலோ,யாரது , கிண்டலா ? என்னை பார்த்து திருந்தாத ஜென்மங்கள் என்று பாடுவது கேட்கிறது ,நான் திருந்துவதற்கு முயலவில்லை , சிகரெட்டை விட முயற்சிக்கிறேன் , சிகரெட் பிடிப்பது ஒரு பழக்கம் தான் ,கொலை குற்றம் கிடையாது
முருகேசன் மாமா சிகரெட் குடிப்பதில்லை என்று கேள்விப்பட்டு அவரிடம் யோசனை கேட்டேன் . "மாப்ள , வேற ஏதாவது ஒண்ணு பழகு , புகையிலை அதாம்பா ஹான்ஸ் இல்லையின்னா மாணிக்சந்த் இந்த மாதிரி ஏதாவது போடு , ஒரு மாசத்துல சிகரெட்ட துப்புரவா மறந்த பின்னாடி இதையும் உட்டுரு , ஏன்னா ஒரு மாச பழக்கத்தை ஈசியா உட்ருலாமில்ல " நல்ல யோசனையாக தோன்றியது . நம்புங்கள் நான் சிகரெட் பிடித்து ஒரு மாதம் ஆகிவிட்டது ஆனால் மாணிக்சந்த் போட்டதால் பல் கரையானது ,வாய் துர்நாற்றம் அடித்தது , அஜீரனகொலாறு கண்டது , அசிங்கமாக அங்கங்கே துப்பி அழுக்காக்கவேண்டியிருந்தது. குட்கா உட்கொள்வதால் உண்டாகும் தீமை சிகரெட் பிடிப்பதை விட இரண்டு மடங்கு அதிகம் என்று செய்தித்தாளில் பார்த்த மாத்திரத்தில் அதே டீக்கடையில் சிகரெட் வாங்கி பற்ற வைத்தேன் . இப்போது சிகரெட்டின் ஒன்னு விட்ட தங்கை போல் குட்கா வும் ஒட்டிக் கொண்டது

இவர் சரியான ஆள் , ஏனென்றால் இவர் சிகரெட் பிடித்து விட்டவர் . வேறு பழக்கங்களும் இல்லாதவர் . இவரிடம் கேட்டால் கட்டாயம் ஒரு தீர்வு கிடைக்குமென தோன்றவே , எதிர் வீட்டு கணேஷ் அண்ணாவை ஒரு டீக்கடையில் சிகரெட் பிடித்து கொண்டு சந்தித்தேன் .
"தம்பி , ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிக்கிறீங்க "
" ஒரு பாக்கெட் இருக்குமுண்ணே "
"அட , போப்பா , இதுக்குத்தானா , நானெல்லாம் ஒரு நாளைக்கு மூணு பாக்கெட் அடிச்சவனப்பா "
நம்பிக்கை பிறந்தது ,ஆனாலும் மூணு பாக்கெட் பிடித்த மூஞ்சியாக அது தெரியவில்லை , எங்கேயோ இடறியது , உள்ளிருப்பவனை அடக்கி விட்டு தொடர்ந்தேன்
" எபபிடினே விட்டீங்க "
" ஒன் பைன் டே , ஜஸ்ட் விட்ருலாம்னு தோணிச்சு , விட்டுட்டேன் "
"புரியலையே "
"தம்பி , ஒரு நாள் கலையில எழுந்திரிச்சு , ரெண்டு செகண்ட் யோசிச்சேன் ,விட்ரலாம்ன்னு தோணித்து,விட்டுட்டேன் "
"அவ்வளவு தானா , நீங்க நிகோடின் பாடச் இல்ல நியூ லைப் மிட்டாய் இதெல்லாம் சாப்புடல "
"அதெல்லாம் கண்ட்ரோல் இல்லாதவனுக்கு தம்பி , நான் ஒரு முடிவு எடுத்தேன் , அப்பிடியே அத பாலோ பண்ணிகிட்டேன் "
சுற்றி சுற்றி மறுபடியும் அதே இடத்திற்கு வந்தேன் , என் கேள்விகள் பூமராங் போல் எனக்கே திருப்பி விடப்பட்டன . விட வேண்டும் விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தது ஆனால் புகை மட்டும் என்னை விடுவதாயில்லை

சின்னதாக ஆரம்பித்த ஆஜீரன கோளாறு கொஞ்சம் கொஞ்சமாய் விசுவரூபம் எடுத்தது , என்டோஸ்கோபி என்பது ஒரு வகையான ஸ்கேன் என்றுதான் நினைத்திருந்தேன் ,செய்த சேட்டைக் கெல்லாம் அது தான் ஆப்பு என்பது பின் வழியாக குழாயை விடும்போதுதான் தெரிந்தது . உணவுக்குழாயில் ஏதோ குளறுபடியாம் , அதற்கு கொலிடிஸ் என்று வழக்கம்போல் வாயில் நுழையாத பேர் ஒன்றை வைத்தார் டாக்டர் . "இன்னும் ஒரு சிகரெட் பிடிச்சாலும் , உங்களுக்கு உணவுக்குழாயில் கேன்சர் வர 100 % சான்ஸ் இருக்கு " அசரிரீ போல் ஒலித்துக்கொண்டே இருந்தது .பத்து நாள் மெடிக்கல் லீவ் போட்டு , பொண்டாட்டி பிள்ளையோடு பிரியாமல் இருந்தேன் , முதல் நான்கு நாட்கள் நரக வேதனை அனுபவித்தேன் , தொண்டை வறண்டு போன மாதிரி , கண்கள் சொருகுவது போல் , கைகள் நடுங்குவது போல் பல விதமான அறிகுறிகள் எனக்கு சொல்லிக்கொண்டே இருந்தது நான் எம்மற்றப் பட்டதாய் , ஒரே ஒரு சிகரெட் பிடித்து விட்டு பின் திரும்பியே பார்க்க வேண்டாம் என்று என்னை சமாதானப் படுத்தியது , நான்காவது நாள் இன்னொருவன் புதிதாய் பிறந்து சொன்னான் , "நீ ஐந்தாவது நாளை நெருங்குகிறாய் நண்பா" என்று .பத்து நாள் முடிந்து வெளியே வந்தேன் ,ஒரு சுற்று பெருத்திருந்ததை உணர முடிந்தது , இப்போது நண்பர்கள் சிகரெட் பிடிக்கையில் கடலை கடிக்க பழகிக் கொண்டேன்

ஒரு வருடம் ,சுவடே இல்லை , ஒரு புல் ரம் அடித்தால் கூட , என்னை சிகரெட் பிடிக்க வைக்க முடியாது ,இதோ என் முன் அமர்ந்திருக்கிறானே ,அவன் என்னிடம் கேட்ட ஒரு கேள்விக்கு ஓல்ட் மன்க் ரம்மை ( அவன் செலவில் ) வயிற்றில் ஊற்றிக்கொண்டே சொன்னேன்
" ஒன் பைன் டே , ஜஸ்ட் விட்ருலாம்னு தோணிச்சு , விட்டுட்டேன் " "புரியலையே "
"தம்பி , ஒரு நாள் கலையில எழுந்திரிச்சு , ரெண்டு செகண்ட் யோசிச்சேன் ,விட்ரலாம்ன்னு தோணித்து,விட்டுட்டேன் "

Monday, January 24, 2011

எடுப்பார் கைப்பிள்ளை


அடங்கி நடக்க அம்மா சொன்னார்
பின்னொருநாள் மனைவி சொன்னால் நான் தொடை நடுங்கி என்று

விரும்பாத ஒன்றை விரும்பி படிக்க அப்பா சொன்னார்
பின்னொருநாள் கனவில் வந்த என் பழைய கனவுகள் கை கொட்டி சிரித்தது

காதல் வந்த வேலையில் கவிதை எழுது என்றது இளவட்ட கூட்டம்
கவிதை கற்ற வேலையில் காதல் கிளி கழுதை மேல் ஏற்றப்பட்டது

கம்பியூட்டர் படி என்றான் நண்பன்
காலர் வைக்காத சட்டை பேசன் என்றாள் தோழி
காபி குடித்தால் சுகர் என்றார் டாக்டர்
கடன் வாங்கி வீடு கட்டென்றாள் மனைவி

வாழும் போதெல்லாம் என் வாழ்கையை சமுதாயம் வாழ்ந்தது
நன்றி பரம்பொருளே - சாவை மட்டும்" நான் " சாக கொடுத்தாய்

Tuesday, January 11, 2011

சேல்ஸ் எக்ஸ்யகிடிவ்


சுமை
கையிலிருக்கும் பையை விட
நெஞ்சிலிருக்கும் சோகம்

பொய்
பொய் மட்டுமே உரைப்பேன் என்பது
என் மீது சுமத்தப்படும் பச்சை பொய்

அறிவிப்பு பலகை
சோசலிசம்
நாய்களுக்கும் எங்களுக்கும் ஒரே பலகை

முரண்பாடு
டாக்டர் மது அருந்துவது
உற்சாகம் பெற என்றாய்

வக்கீல் புகை பிடித்தால்
யோசிக்கிறார் என்றாய்

சாப்ட்வேர் யுவதி டான்ஸ் பார் செல்வது
மன அழுத்தம் குறைக்க என்றாய்

இவற்றில் ஏதேனும் ஒன்றை நான் செய்தால்
"சேல்ஸ்ல இருக்கான் " என்கிறாய்

கேவலம்

அக்றிணை உடன் செய்யும் உன் புனிதமான வேலையை ஒப்பிட்டு
பார்த்தால் - உயிருள்ள உன்னுடன் வியாபாரம் செய்யும் என் வேலை


தோல்வி

விற்ற பொருட்கள் சுமக்கும் வெற்றிப்பொய்யை
தின்று களித்த சமுதாயத் தோல்வி

Wednesday, January 5, 2011

சோறும் சோறு சார்ந்த இடமும் - மதுரை


மல்லிகை வாசம் மட்டுமல்ல , மண் வாசம் மட்டுமல்ல , மதுரை மசாலா வாசமும் மனதை தொடும் ஒன்று தான் . மதுரை யின் சிறப்பு என்ன வென்றால் நகரமும் அல்லாது கிராமும் அல்லாது ஒரு கலவையாக இருப்பதே . தூங்கா நகரம் என்பது ஒரு அக்மார்க் உண்மை , இருபத்தி நாலு மணி நேரமும் எல்லாமே கிடைக்கு நகரம் . மொத்தத்தில் தென் தமிழ்நாட்டின் வாணிப சந்தை மதுரை என கொள்ளலாம் .

முதலில் சைவம் , முருகன் இட்லி கடை , பூபோன்ற இட்லிகளும் ,நான்கிலிருந்து ஐந்து வகை சட்னிகளும் , கட்டியாகவும் இல்லாமல் ,சன்னமாகவும் இல்லாமல் இட்லி பதத்திற்கு சாம்பாரும் இந்த கடையின் சிறப்பு . இன்று சென்னையில் முருகன் இட்லி கடை கொடி கட்டி பறந்தாலும் , அதன் ஆணி வேர் இன்றும் மதுரையில் நிற்கக்கூட முடியாத தளவாய் சாலை சந்தில் உள்ளது . மதுரை மண் வாசம் பார்க்க விரும்புபவர்களுக்கு இந்த கடை ஒரு முக்கியமான இடம் .

ஹோட்டல் டெம்பிள் சிட்டி, இன்னொரு முக்கியமான கடை , மதுரையில் நான்கு இடத்தில் உள்ளது இந்த கடை . மதுரை மாட்டு தாவணி பஸ் நிலையத்திற்கு எதிரே கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள் .நூறு வகை தோசை இங்கு பிரசித்தி பெற்றது .வகைகளை சாப்பிட்டு பார்க்கவே நமக்கு ஒரு வாரம் ஆகும் .
ஆர்யாஸ் , ஆனந்தா மற்றும் இன்னும் சில பல பவன்கள் இருந்தாலும் ,கண்டதை அரைத்து போட்டு சுவையை கூட்டும் வேலை இந்த உணவகத்தில் இல்லை ,எனவே தைரியமாக சாப்பிடலாம் .

சைவத்தை விட மதுரை அசைவத்திற்கு தான் பிரசித்தி என்று சொல்ல லாம் , ஐதராபாத் பிரியாணி , ஆம்பூர் பிரியாணி , திண்டுக்கல் பிரியாணி , சங்கரன்கோயில் பிரியாணி , காலிகட் பிரியாணி வரிசையில் மதுரை பிரியாணியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் , அந்த அளவிற்கு இன்று பிரியாணி கலை கட்டுகிறது மதுரையில் . என் கணக்கில் முதலிடம் வகிப்பது அம்மா மெஸ் தான் . மதிய சாப்பாட்டிற்கு அம்மா மெஸ் சென்று பாருங்கள் , மலைத்து நிர்ப்பீர்கள் , என்ன சாப்பிட , எது சாப்பிட என்று ஒரு பட்டி மன்றமே வைக்க வேண்டும் . ரெகுலர் மெனு வான சாப்பாடு , பிரியாணி தவிர , நண்டு ஆம்லேட் , கறி ஆம்லேட் , குடல் குழம்பு ,தலைக் கறி , காடை வறுவல் , முயல் சுக்கா என பறப்பது , நடப்பது , மிதப்பது அனைத்தையும் இங்கு காணலாம் . உண்மையான வெட்டு குத்து வேண்டுபவர்களுக்கு அம்மா மெஸ் தான் புகலிடம் . அப்படி என்ன வித்தியாசம் இங்கு என்று நீங்கள் கேட்பது கேட்கிறது , இங்கு தயாரிக்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களின் மசாலாக்கள் கிராமத்து முறைப்படி அரைத்து வைத்து சமைக்கப்படுகிறது . அம்மா சமையல் என்பது அரைத்து வைப்பது தானே , சொல்லி புரிய வைக்க முடியாது , உண்டு பாருங்கள் ஒரு முறை அப்போது தெரியும் என் வாக்கு மெய்யா பொய்யா என்று .

கோனார் மெஸ் , இந்த கடை நிறைய பேர் கேள்வி பட்டு இருப்பீர்கள் , சில பல சினிமாக்களில் இந்த பெயர் உச்சரிக்க பட்டிருக்கும் . இங்கு தான் மதுரை புகழ் கறி தோசை கிடைக்கும் . அதென்ன கறி தோசை ? மட்டன் கறியை மைய சமைத்து அதை தோசை மாவுடன் சேர்த்து இடுவார்கள் , மாலை நேரம் கோனார் மெஸ் முன்பு திருவிழா கூட்டம் காணலாம் , எல்லாம் இந்த கறி தோசைக் காகத்தான் . இது தவிர புரோட்டா தலைக்கறி குடல் குழம்பு போன்றவையும் கோனார் மெஸ்ஸில் பிரபலம் தான் , அரசன் முதல் ஆண்டி வரை இந்த கோனார் மெஸ்ஸுக்கு க்கு அடிமையாகாத ஆள் தேடினாலும் கிடைக்க மாட்டார்கள் .

அடுத்த படியாக குமார் மெஸ் , மேலே சொன்ன அனைத்து வகைகளும் இங்கும் கிடைக்கும் , இடம் கிடைக்காத பட்சத்தில் இங்கு வருவோம் என்று நினைத்தால் நீங்கள் ஏமாந்து தான் போவீர்கள் , இங்கும் திருவிழா கூட்டம் தான் . இதில்லாமல் மதுரை முழுதும் கையேந்தி பவன்களை நாம் காணலாம் , எல்லா கடைகளிலும் நம்பி சாப்பிட இட்லி கிடைக்கும் , நல்ல சட்னி சாம்பார்கள் கிடைக்கும் , அம்மா மெஸ் , கோனார் மெஸ் ,குமார் மெஸ் அட்ரெஸ் தெரிந்து கொள்ளவது மிக மிக எளிது , மதுரையில் இருக்கும் சின்ன குழந்தைகள் கூட உங்களை வழி காட்டி அனுப்பி வைப்பார்கள்

நான் சாப்பிட்ட கடைகளிலேயே , அசைவ உணவின் அரசன் பட்டத்தை ஜெயராம் மெஸ்ஸி ற்கு அளிக்கலாம் , அப்படி ஒரு சுவை நான் வேறுங்கும் கண்டது மில்லை கேட்டது மில்லை , இந்த ஜெயராம் மெஸ் சீர்காழிக்கும் ,சிதம்பரத்திற்கும் இடையே ஓடும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு குடிசை வீட்டில் நடத்தப் படுகிறது , அசைவ பிரியர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய ஒரு இடம் , சிதம்பரம் சீர்காழி பக்கம் நிறைய முறை செல்ல வாய்ப்பு கிட்ட வில்லை , எதிகாலத்தில் வாய்ப்பு கிட்டும் பட்சத்தில் விரிவாக எழுதலாம்


இது கொஞ்சம் புதுசு , குடி மக்களுக்காக ஒரு ரகசியம் , எனவே மற்றவர்கள் ஜகா வாங்கி கொள்ளலாம் . அலுமினிய டம்ளர் கடைகள் கேள்விப் பட்ட துண்டா ? மதுரை யில் முக்கியமான ஒரு இடத்தில் உங்களுக்காக இருபத்தி நாலு மணி நேர சேவையில் சில உணவு விடுதிகள் உள்ளன . உள்ளே சென்று உங்களுக்கு தேவையான பிராண்டு என்ன என்று சொல்ல வேண்டியது , அதே பிராண்டு மிக்சிங் உடன் அலுமினிய டம்ளரில் வந்து நிற்கும் , நாலு ரவுண்டு அடித்து கொண்டே சாப்பிட்டு கொள்ளலாம் , இது நமக்குள்ளே இருக்க வேண்டிய விஷயம் , எந்த இடம் , எந்த கடை என்று சொல்லும் பட்சத்தில் , இந்த இருபத்தி நாலு மணி நேர சேவை யாருக்குமே இல்லாமல் போய் விடுமோ என்ற பயத்தில் இதோடு நிறுத்துகிறேன் , அவசர நேரத்தில் , இக்கட்டான சூழ்நிலையில் , வேறு வழியே இல்லாத பட்சத்தில் குடி மக்கள் எனது அலை பேசியில் அழைத்து கடை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்

அடுத்த படியாக , நாம் பார்க்கப்போகும் இடம் பிரியாணிகளின் சொர்க்கம் - வாணியம்பாடி , ஆம்பூர்

Monday, January 3, 2011

பயணம்முன் இருக்கைகளையும் ,
ஜன்னல் வழி பிரபஞ்சத்தையும்
தவிர வேறேதும் காணா கண்கள்
பேருந்து பயணம்

திறக்கும் என தெரிந்தும் கதவை மட்டுமே நோக்குவதும்
அழுத்தி ஓய்ந்த பின்னும் பொத்தான்களை நோக்குவதும்
லிப்ட் மீது ஒரு குறும் பயணம்

எளியாரில் வலியார் தேடும்
பொது வகுப்பு ரயில் பயணம்

குறட்டை வருமோ மானம் போகுமோ
தூக்கம் இழந்த விழிகளுடன்
விமானத்தில் ஒரு சொகுசு பயணம்

குனித்து நிமிர்ந்து சரிந்து சாலையை அளவெடுக்க
திமிறி படரும் அவளின் அங்கங்களையும் அளவெடுக்க
இளமை மிளிரும் ஒரு பைக் பயணம்

வலி மிகுந்த நேற்றைய பயணங்கள் தாம்
வலி குறைக்கும் இன்றைய சுவாரஸ்யங்கள்